வெள்ளி, 12 ஜூன், 2020

கோவிட் 19ம் இதய இரத்த கோளாறுகளும்

கோவிட் 19 தொற்றினால் இதயம் மற்றும் இரத்த அழுத்த பாதிப்புகள்

படம்-1

கோவிட் 19 நோய் தொற்று சுவாச பகுதியை மட்டுமல்லாமல் நம் உடலின் மற்ற பகுதிகளையும் தாக்க வல்லது.நம் உடலில் உள்ள சில வசதிகள்தான் அதற்கு காரணம்.அதில் முக்கியமானது இந்த வைரஸ் நம் உடல் செல்களை தாக்குவதற்கு பயன்படுத்தி கொள்ளும் ACE 2 என்ற ஏற்பி தான்.
இந்த ஏற்பி நம் உடலின் பல அமைப்புகளிலும் பரந்து இருக்கிறது இந்த ஏற்பி எங்கெங்கெல்லாம் பரவி இருக்கிறதோ அங்கங்கெல்லாம் இந்த வைரஸும் தாக்கும்.
முதன் முதலாக தாக்கப்படுவது நம் சுவாசப்பகுதிதான்.அதிலும் தொண்டைக்கு கீழுள்ள சுவாசப்பகுதிதான்.அங்குதான் இந்த ACE 2 ஏற்பி அடர்த்தியாக உள்ளது.உதாரணமாக தொண்டை அதற்கு கீழுள்ள தொண்டை குழாய் நுரையீரல் காற்றறைகள் ஆகியவற்றின் EPITHELIAL LAYERS எனப்படும் மேலடுக்கு சுவர்களின்  ஒவ்வொரு செல்களிலும் இந்த ஏற்பிகள் மிக தெளிவாக தம்மை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றன.எனவே இந்த பகுதியை இந்த புதிய கொரோனா வைரஸ் மிக எளிதாக தாக்கி சேதப்படுத்துகிறது.
இதற்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பது நம்முடைய இதய மற்றும் இரத்த குழாய் பகுதிகள்.
இதயத்தின் தசைகளில் இருக்கும் மையோசைட்டுகள்,இரத்தக்குழாய்கள் மற்றும் தந்துகிகளின் ENDOTHELIUM எனப்படும் உட் சுவர்கள், ஆகியவற்றில் வெளிப்படையாக மற்றும் தெளிவாக பொதியப்பட்டிருக்கும் இந்த ACE 2 ஏற்பிகள் வைரசை அங்கும் வந்து தாக்குவதற்கு வசதி பண்ணி கொடுக்கின்றன.
உலக அளவில் ஆஸ்பத்திரியில் இந்த வைரஸால் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் 80% பேர் இதய மற்றும் இரத்த அழுத்த நோயாளிகள்தான்.அதிலும் 40%உயர் இரத்த அழுத்தம்,36%உடல் பருமன்,12% மற்ற இதய கோளாறுகள் மீதி உள்ளது சர்க்கரை நோயாளிகள்.
இது தவிர வயதான பலகீனமான எதிர்ப்பு சக்தி குறைத்த ஆண் பெண்களை இது கடுமையாக பாதிக்கிறது.பெண்களில் மாதவிடாய் நின்ற அல்லது ஏதோ சில காரணங்களுக்காக சினைகள் நீக்கப்பட்ட (OVARIECTOMY)பெண்களை மட்டுமே இது கடுமையாக தாக்குகிறது.அது ஏன் என்பதை இந்த கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை இது கடுமையாக பாதிப்பதில்லை.இதன் காரணங்கள் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை.
20 யிலிருந்து 40% வரை ஆஸ்பத்திரியில் கோவிட் 19 நோய்க்காக சேர்க்கப்பட்ட இதய நோயாளிகளுக்கு நெஞ்சு வலி,இதய செயலிழப்பு ஒழுங்கற்ற இதய துடிப்புகள் மற்றும் மாரடைப்பு போன்ற அறிகுறிகள் இருந்தன. 
50 வயதிற்கு உட்பட்ட எதிர்ப்பு சக்தி உள்ள இளைஞர்கள் யுவதிகள் ஆகியோருக்கு சாதாரண ஜலதோஷம்  மெல்லிய காய்ச்சல் அல்லது தலைவலி இவற்றுடன் இது குணமாகிவிடும்.
ஆனால் அதே சமயம் எதிர்ப்பு சக்தி இல்லாத வயதான பலகீனமானவர்களுக்கு இந்த நோய் தொற்று  கடுமையான பின்விளைவுகளை அதாவது அவர்களுக்கு இதற்கு முன் இல்லாத உயர் இரத்த அழுத்தம்,இதய கோளாறு நீரிழிவு நரம்பு கோளாறுகளை உண்டாக்கிவிடலாம்.அதுபற்றி நாம் இப்பொது பார்க்கலாம். 
முதலில் நம் உடல் இரத்த அழுத்தத்தை எப்படி சீராக வைக்கிறது என்று பார்க்கலாம்.
RAAAS மற்றும் AAAA அமைப்புகள் 
படம் -2

நம் உடலில் இதற்காக இரண்டு அமைப்புகள் இருக்கின்றன .முதலாவது இரத்த அழுத்தத்தை உயத்துவதற்கு ஒரு அமைப்பு.அதற்கு RAAAS (Renin-Angiotensin-II-Aldosterone-Anti-Diuretic-Hormone System) ஆகும்.இதை இன்னும் சுருக்கமாக RAS என்றும் அழைக்கலாம்.காரணம் அதிலுள்ள ஆன்ஜியோடென்ஸின்-II  மற்ற இரண்டு A-A க்கும் காரணமாக அமைகிறது.
இரண்டாவது இரத்த அழுத்தத்தை தணிப்பதற்கு என்று ஒரு அமைப்பு அதற்கு AAAA (ACE2-Angiotensin1-7-Angiotensin1-9-ATR2)என்று பெயர். (பார்க்க படம்-2)
RAAAS:-
நம்முடைய இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்வதில் சிறுநீரகத்திற்கும் கல்லீரலுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு.ஏனென்றால் இரண்டுமே இரத்தத்தை சுத்தீகரிக்கின்றன.
சிறுநீரகம் இரத்தத்திலுள்ள நீரை அதன் சத்துக்களுடன் முதல் நிலையில் அதன் வடிப்பான்கள் (NEPHRONS) மூலம் வடிக்கும் பொழுதே அந்த நெப்ரான்களின் தலைப்பகுதியில் இருக்கக்கூடிய சில செல்கள்  (JUXTAGLOMERULAR APPARATUS) இரத்த அளவும் அழுத்தமும் குறையவிருப்பதை உணர்ந்து  ரெனின் என்ற புரத ஹார்மோனை சுரக்கிறது.
இந்த ரெனின் கல்லீரலிலிருந்து சுரக்கப்படும் ஆன்ஜியோடென்சினோஜன் என்ற புரதத்தை ஆன்ஜியோடென்ஸின்-I என்ற புரத ஹார்மோனாக மாற்றுகிறது.இதை ACE 1 என்ற என்ஜைம் ஆன்ஜியோடென்ஸின்-II ஆக மாற்றுகிறது.இதுதான் RAAAS அமைப்பினுடைய முக்கிய ஹார்மோன்.
ஆன்ஜியோடென்ஸின்-II ஹார்மோன் அதன் ஏற்பி (ATR -1)யில் கிரியை செய்து கீழ்கண்ட விளைவுகளை உண்டாக்குகிறது:-
1.முதலில் இரத்த குழாய்களை குறுக்குகிறது -இரத்த அழுத்தம் உயர்வு 
2.அட்ரீனல் சுரப்பியின் கார்ட்டக்ஸ் பகுதியில் இருந்து ஆல்டோஸ்டீரோன் என்ற ஹார்மோனை சுரக்க வைக்கிறது.
3.ஆல்டோஸ்ட்டிரோன் சிறுநீரக வடிப்பானின்(NEPHRON) வால் பகுதியில் உள்ள distal tubule (DCT) பகுதியில் சோடியத்தையும் நீரையும் மீண்டும் உறிஞ்சி இரத்தத்தில் சேர்க்கிறது.இதற்கு பகரமாக 2%பொட்டாசியம் வெளியேறுகிறது.2% பொட்டாசியம் வெளியேறும் அளவுவரைதான் ஆல்டோஸ்டீரோன் வேலை செய்யும்.மீதமுள்ள நீர் DCT ஐ தாண்டி சிறுநீர் சேகரிப்பு குழாய்க்கு சென்றுவிடும்.
4.உடனே ஆஞ்சியோடென்ஸின்-II மூளை பகுதியில் உள்ள கீழ் பிட்டியூட்டரியை தூண்டி சிறுநீர் அடர் இயக்குநீர் (ANTIDIURETIC HORMONE-ADH ) என்ற ஹார்மோனை சுரக்க வைக்கிறது.
5.இந்த ADH சிறுநீர் சேகரிப்பு குழாயை நீரை மட்டும் உறிஞ்சி மீண்டும் இரத்தத்தில் சேர்க்கும்படி பணிக்கிறது.ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய ஒரு லிட்டர் அளவு சிறுநீரக வடிகுழாய்களில் வடிக்கப்படும் வடிநீர் இறுதியில் இரண்டு அல்லது மூன்று மில்லி லிட்டர் அளவே சிறுநீராக மாறி சிறுநீர்ப்பையை அடைகிறது.இவ்வாறு நம் இரத்தத்தின் நீர் சத்து முழுவதும் வெளியேறி விடாமலும் இரத்தத்தின் அளவும் அதனால் இரத்த அழுத்தமும் குறைந்துவிடாமலும்  பாதுகாப்பது இந்த RAAAS அமைப்பே ஆகும்.
இதற்கு எதிராக செயல்படும் அமைப்புதான் AAAA ஆகும்.இதன் முக்கிய என்ஜைம் ACE 2 ஆகும் (பார்க்க படம் -2.).
இந்த ACE 2 ஆஞ்சியோடென்ஸின்-II ஐ 
ஆஞ்சியோடென்ஸின் 1-7 ஆகவும் ஆஞ்சியோடென்ஸின் -I ஐ ஆஞ்சியோடென்ஸின்-1-9 ஆகவும் மாற்றுகிறது.
அதே போல் ஆன்ஜியோடென்ஸின்-II ,ATR-2 இல் கிரியை செய்து இரத்தக்குழாய்களை விரிவடைய செய்கிறது.எனவே இந்த அமைப்பில் இருக்கக்கூடிய நான்கு AAAA களும் இரத்த குழாயை விரிவடைய செய்து அதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைகின்றன.
இனி இந்த கோவிட் -19 வைரஸிற்கும் இந்த அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு என்பதை பார்க்கலாம்.
இந்த புதிய கொரோன வைரஸ்-19 நம் உடலில் உள்ள செல்களை ACE 2 ஏற்பி மூலமாகவே தாக்குகிறது என்பதை நாம் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம்.
ACE 2 ஏற்பிகளை இந்த வைரஸ் அதிகமாக பயற்படுத்துவதால் இந்த ACE2 ஏற்பிகள், உடல் தேவைக்கு பயன்படமுடியாமல் தட்டுப்பாடாகிவிடுகிறது. 
இதனால் நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி இரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடிய AAAA அமைப்பு பலஹீனமாகி விடுகிறது.அதன் எதிரணி அமைப்பு (RAAAS) பலம் பெற்று இரத்த அழுத்தத்தை உயர்த்திவிடுகிறது.
இரத்த அழுத்தம் அபரிமிதமாக உயர்வதால் இதயத்தின் சுமை அதிகமாகி இதய செயலிழப்பு ஏற்படலாம்.
வீக்கத்தை உண்டாக்கும் சுரப்புகளான சைடோகைன்கள் (cytokines),கிரியாட்டின் கைனேஸ் போன்றவை அதிகமாக சுரந்து நிமோனியா,நுரையீரல் இரத்த ஓட்டத்தில் சிறு சிறு இரத்த கட்டிகள் (PULMONARY EMBOLISM),மூளைக்கு இரத்த ஓட்டம் தடைப்படல்,வயிற்று போக்கு ஆகியவை ஏற்படலாம்.
எனவே இறுதியாக இந்த கோவிட்-19 வியாதி இதய மற்றும் இரத்த ஓட்டம் ஆகியவற்றை பாதிப்பதால் இந்த மாதிரி பாதிப்பு உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன.விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும் 




 

ஞாயிறு, 3 மே, 2020

கண்ணுக்கு புலப்படாத போர்

கோவிட் -19-சீனாவின் உயிரியல் போரின் ஒத்திகையா 


யுத்தம் என்றாலே அது குண்டு வெடிப்புகளிலும் ஆயுதங்களிலும் பீரங்கி முழக்கங்களிலும் ஓசைகளிலும் விமான இரைச்சல்களிலும் சீறும் ராக்கட்டுகளிலும் தான் தன் பரிணாமத்தை காட்டும் என்று இது நாள் வரை இருந்து வந்த நம் அறிவை வேறு ஒரு புது கோணத்திலும் யுத்தம் என்பது பரிணமிக்க கூடும் என்ற உண்மை நிலைகுலைய வைத்திருக்கிறது.
ஆம் அதுதான் விஷக்கிருமிகளை ஆயுதங்களாக பயன்படுத்தி போரிடும் உயிரியல் யுத்தம் என்ற ஒரு பரிணாமம் 
ஆயுதங்களை வைத்து ஆடும் போர் மேடையில் யாருக்கும் யாருக்கும் போட்டி யார் யாரை தாக்குகிறார்கள் யாருக்கு ஜெயம் யாருக்கு தோல்வி என்பதெல்லாம் தெளிவாக தெரிந்து விடும் 
ஆனால் நுண் விஷ கிருமிகளை ஆயுதமாக்கி விளையாடும் யுத்த மேடையில் யார் யாரை தாக்குகிறார்கள்,யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி,போர் எங்கே ஆரம்பித்தது எப்போது ஆரம்பித்தது யார் ஆரம்பித்தார்கள்,எங்கே எப்போது எவ்விதம் முடியும் என்பதெல்லாம் கண்ணுக்கும் புலப்படாது அறிவுக்கும் எட்டாது.இதை யுத்தம் என்பதை விட கண்மூடித்தனமான அழிவு என்றே கூறலாம் 
ஏனென்றால் நிராயுதபாணிகள் இயலாதவர்கள் இவர்களை எல்லாம் தாக்கக்கூடாது என்ற தர்மங்கள் எல்லாம் இந்த யுத்தத்தில் செல்லாது.
இந்த கட்டுரையில் இப்படி ஒரு யுத்தத்தை சீனா ஆரம்பித்து இருக்கிறதா என்பதை சில செய்திகள் மற்றும் சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு  ஐந்து யூக கோட்பாடுகள்  (HYPOTHESES ) வரையப்பட்டு இருக்கின்றன .அவை வெறும் யூகங்கள் தானே தவிர அவை நிரூபணமான நிதர்சனங்கள் அல்ல.இவை பின்னப்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது உண்மையாகவும் இருக்கலாம் .ஆண்டவனுக்கே வெளிச்சம்.

யூக கோட்பாடு 1:-வைரஸின் தோற்றம் 

 
RNA அமைப்பு 
சீனாவின் மீது சந்தேகம் என்ற மேகம் சூழ்வதற்கு வைரல் விஞ்ஞான அடிப்படையும் ஒரு காரணமாகும் 
மேலே உள்ள படத்தை காணுங்கள் அதில் ஒரு RNA யின் அமைப்பு தரப்பட்டு இருக்கிறது 
பெரும்பாலும் எந்த ஒரு உயிரினத்திற்கும் அதன் மரபணுவாக ஒரு RNA அல்லது ஒரு DNA என்று  ஒன்று இருக்கும்.
இந்த புதிய கொரோனா வைரஸின் மரபணு ஒரு RNA வகையை சேர்ந்தது .
இந்த RNA பட்டை (Ribbon) பல நெளிவுகளாக இருக்கும் .ஒவ்வொரு  நெளிவிற்குள்ளும் நான்கு நியூக்ளிக் அமிலங்கள் முறையே யுராஸில்,சைட்டோசின்,அடெனின் மற்றும் குஆனின் என்று பொதியப்பட்டு இருக்கும் (பார்க்க மேலே படம்-சிகப்பு,பச்சை வெளிர் நீலம் ,ஊதா என்று நாலு குச்சிகள் )
இந்த ஒரு நெளிவும் அதனுள் பொதியப்பட்டுள்ள கரு அமிலங்களும் சேர்ந்து ஒரு நியூக்ளியோட்டைடு ஆகும்.எனவே ஒரு RNA யின் நீளம் அதில் எத்தனை நியூக்ளியோடைடுகள் இருக்கிறதோ அதை வைத்து அளக்கப்படும்.
சாதாரணமாக ஒரு RNA யில்  3000 அளவு அதிகபட்சமாக நியூக்ளியோடைடுகள் இருக்கலாம் (அதாவது 3000 நெளிவுகள் வரை  இருக்கலாம் )1000 நியூக்ளியோடைடுகளுக்கு ஒரு kilo base (kb) என்பார்கள் வைரஸ் விஞ்ஞானிகள்.எனவே ஒரு RNA  1 முதல் 3 அல்லது 5 kb வரை நீண்டோ  அல்லது சுருண்டோ இருக்கலாம்.இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். 
மெகாவைரஸின் DNA நீளம் 130 kb வைரஸ் உலகிலேயே மிகவும் பிரம்மாண்டமான வைரஸ் இதுதான் ஆனால் இந்த வைரஸ் அமீபாக்களை மட்டுமே தாக்கும் அதுவும் இது ஒரு DNA வைரஸ் ஆகும் 
ஆனால் இந்த புதிய சீனத்து வைரஸ் 2002 இல் சீனாவிலிருந்து பரவிய SARS Co V (-1)ஐ ஒத்த RNA வைரஸ் ஆகவும்  அதை விட பெரிதாகவும் இருப்பதன் மர்மம் தான் புரியவில்லை.இந்த இரண்டு வைரஸ் களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை 
இரண்டின் RNA அளவுகளும் ≈30 kb 
இரண்டின் விட்டங்களும்      ≈100 nm 
அதாவது ஒரு பாக்டீரியாவை விட கொஞ்சம் சிறிது .
இதை ஏன் சைனாவிலுள்ள ஆய்வுகூடம் உருவாக்கி இருக்க கூடாது என்பதுதான் வாதம் 
அதைத்தான் இனி வரும் யூகங்களில்  காணலாம்.

யூகம் -2-சீனாவின் உயிரியல் போர் ஒத்திகையா ?

யாங்கிங் ஈ ,29 வயதான சீனர் .இவரை அமெரிக்க போலீஸ் கைது செய்தது.இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் விசா மோசடி வெளிநாட்டிற்கு ஏஜெண்டாக செயல்பட்டது ஆகியவை இப்போது இவர் சீனாவில் இருக்கிறார் .
இதற்கு முன்பு 10-12-2019-ல் பாஸ்டன் நகரின்  லோகன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சாவோசிங் செங் என்ற 30 வயதான ஒரு சீன ஆய்வாளர்  21நுண்ணுயிர் ஆய்வு திரவ குப்பிகளை சீனாவுக்கு கொண்டுபோகும் நிலையில் கையும் களவுமாக பிடிபட்டார்.இன்னமும் யு.எஸ்.சிறையில் இருக்கிறார். அடுத்து  
டாக்டர் சார்லஸ் லீபர். 60 வயதான இவர் தலை சிறந்த  ஓர் அமெரிக்க நானோ நுண்ணுயிரியல் ஆய்வாளர்.2008-இலிருந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் லீபர் ஆய்வுக்குழுவின் தலைமை ஆய்வாளர் பொறுப்பில் இருந்தார்.இவர் நானோ விஞ்ஞானத்தில் (NANO SCIENCE) மிகவும் தேர்ச்சி பெற்றவர்.இவருக்கு இவருடைய ஆய்வுகளுக்காக அமெரிக்க தேசீய சுகாதார நிறுவனம்(NIH) மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை ஆகியவை  இணைந்து மாதம் 15 மில்லியன் யு எஸ் டாலர்களை சன்மானமாக அளித்தன.
இந்த சன்மானங்களை பெறுபவர் வேறு எந்த நாட்டிற்கும் எவ்விதத்திலும் சேவை செய்பவராக இருக்க கூடாது.ஆனால் பின்னாளில் லீபர் சில உண்மைகளை மறைத்து இந்த சன்மானங்களை பெற்றது தெரிய வந்தது.
அதாவது இந்த சன்மானங்களை பெரும் நிலையிலேயே லீபர்  2018-19 களிலிருந்து  சீனாவில்  வூஹான் தொழில்நுட்ப பல்கலைக்கழத்துடன் (WUHAN UNIVERSITY OF TECHNOLOGY)  இணைந்த,ஆயிரம் திறமைகள் திட்டம்  (THOUSAND TALENT PLAN) என்ற மூன்று வருட திட்டத்தின் கீழ் செயல்படுவது தெரியவந்தது.இதற்கு அவர் பெற்ற சன்மானங்கள் மாதம் U.S.$ 50000/-சம்பளம்,சீனாவில் தங்குவதற்கு ஆகும் செலவுக்காக 1,000,000 சீன யுவான்கள் ,மற்றும் வூஹானில் ஒரு ஆய்வுக்கூடம் உண்டாக்க தேவையான செலவுகளுக்காக 1.5 மில்லியன் யு எஸ் டாலர் என்று எக்கச்சக்கம்.இந்த திட்டத்தின் படி ஒவொரு வருடமும் ஒன்பது மாதங்கள் அவர் சீனாவின் வூஹானில் தங்கி பணிபுரிந்திருக்கிறார் .இந்த உண்மைகள் தெரிய வந்தவுடன் இவற்றை மறைத்ததற்காக 20-01-2020 இல் அவர் கைது செய்யப்படுகிறார்.இப்போது இவர் யு.எஸ் சட்டத்தின் பிடியில்.
இதற்கு முன்பே கனடாவில் கனடிய தேசிய நுண்ணியிரியல் ஆய்வு  கூடத்தில் இருந்து மிஸஸ் சிங்குவோ கியூ (Mrs.Xiangguo Qiu)என்பவரின் தலைமையின் கீழ் பணிசெய்து கொண்டிருந்த பத்து சீன ஆய்வாளர்கள் பயங்கர நுண்ணுயிரிகளை சீனாவுக்கு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதாயினர் .இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் மிஸஸ் சிங்குவோ கியூ வின் கணவர் சீனாவில் உயிரியல் ஆயுதங்கள் (BIO WEAPONS) சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
1999 களில் சீனாவின் மக்கள் விடுதலை படை என்ற அமைப்பு 
கட்டுப்பாடற்ற போர் (Unrestricted Warfare)
என்ற புத்தகத்தை  வெளியிட்டது.இதை சீனியர் கர்னல் கியாவோ லியாங் (Sr.Col.Qiao Liang),சீனியர் கர்னல் வாங் சியாங் சுய் (Sr.Col.Wang Xiang sui) என்ற இரு ராணுவ அதிகாரிகள் எழுதி இருந்தனர்.
இந்த நூல் தான் சீன அரசுக்கு உயிரியல் யுத்தம் (Biological Warfare) பற்றிய ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
அந்த புத்தகத்தில் அவர்கள் எழுதி இருந்தனர் "கீழை நாடுகள் அணு ஆயுதங்கள் உயிரியல் ஆயுதங்கள் கண்ணி வெடிகள் போன்றவற்றை வைத்திருக்க கூடாது என்பது மேற்கு நாடுகளின் சதி ஆகும்.சீனா இந்த கட்டுப்பாடுகளை தாண்டினால்தான் மேற்கு நாடுகளை தன் காலடியில் விழவைக்க  முடியும்" என்ற வெறித்தனம் அதில் இருந்தது.
அந்த புத்தகம் மேலும் கூறியது "இனி எதிர்காலத்தில் யுத்தம் என்பது ஆயுதங்களால் இருக்காது அறிவுபூர்வமாகத்தான் இருக்கும் மேலும் யுத்தம் என்பது கண்மறைவாகவே இருக்கும் " என்று .
இதே போல் 2010 இல் சீன செய்தி ஸ்தாபனமான சின்ஹுஆ (XINHUA) ஒத்த கருத்துள்ள வேறு ஒரு புத்தகத்தை வெளியிட்டது.
2015-சீன ராணுவம் வெளியிட்ட ஒருபுத்தகத்தில் வெளிப்படையாகவே "ஒவொரு சீன ராணுவ அதிகாரியும் நுண்ணுயிரியல்(Microbiology) பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் "என்ற குறிப்பு இருந்தது.
இவற்றை எல்லாம் தாண்டி ஒரு படி மேலே போய் சீனாவின் தேசிய ராணுவ பல்கலைக்கழகம் (Chinese National Military University) ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தது.அதன் பெயர் புதிய போர் தீவு (New Island of War)இந்த புத்தகம் தான் சைனாவின் ஒரு கோர முகத்தை வெளிப்டுத்தியது.  அந்த புத்தகத்தில் சீனா  எதிர் காலத்தில் ஒரு வைரஸை உண்டாக்க வேண்டும்.அது வழி வரையறுக்கப்பட்ட ஏவுகணை (Guided Missile) போல ஒரு குறிப்பிட்ட நாட்டை ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் தாக்கி அழிப்பது மாதிரி இருக்கவேண்டும் என்று அந்த புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

யூக கோட்பாடு-3(வைரஸ் ஒழுக்கல்  கோட்பாடு :-

இந்த கோர வைரஸ் எங்கிருந்து பரவியதோ அந்த வூஹானில் இருப்பதுதான் வூஹான் வைரஸ் விஞ்ஞான பயிலகம் (Wuhan Institute Of Virology).சீனாவிலேயே இந்த வகையில் இது ஒன்றுதான் உள்ளது.நாலு அடுக்கு பாதுகாப்பு பெற்றது.இதோடு இணைந்து இன்னும் இரண்டு ஆய்வு கூடங்களும் அதனுடன் ஒட்டி இருக்கின்றன .அவை 1.வூஹான் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (W.C.D.C&P)
2.தேசீய ஆய்வு கூட பாதுகாப்பு ஆய்வுகூடம் (N.L.S.L.)
இந்த மூன்றுமே ஒன்றோடு ஒன்று  தொடர்பு உடையவை .
அதாவது W.I.V யில் வைராலஜிஸ்டுகள் புதிய கொடூரமான வைரஸ்களை உருவாக்கி ஆய்வு செய்வர் 
மற்ற இரு ஆய்வு கூடங்களும் தடுப்பு மருந்துகளையும் உபகரணங்களையும் தயாரிப்பர் 
அதாவது கம்பியூட்டரில் ஆன்டி வைரஸ் மென்பொருள் உண்டாக்கும் கம்பெனி தானே வைரஸ்களை உருவாக்கி பரவவிட்டு பிறகு அதை அழிப்பதற்கு ஆன்டி வைரஸ் மென்பொருளையும் உருவாக்கி சந்தையில் விற்பனைக்கு விடுவது மாதிரி 
தெற்கு சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரு விஞ்ஞானிகள் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்ஷேவ் (GUANGZHOU) இலிருந்து இரு திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டனர்.
அது 2002-இல் எப்படி பெய்ஜிங்கின் ஒரு ஆய்வகத்திலிருந்து SARS Co V வைரஸ் லீக் ஆகி குவாங்டாங் மாகாணத்தை முதலில் தாக்கி பிறகு உலகெங்கும் பரவியதோ அதே போல்தான் நிச்சயமாக இந்த புதிய SARS Co V -2 வைரஸும் வூஹானின் W.I.V. இலிருந்து பரவி இருக்க வேண்டும் என்பது.மேலும் அவர்கள் கூறியது அந்த இன்ஸ்டிடியூட் நாலு அடுக்கு பாதுகாப்பு பெற்றிருந்தாலும் முறையாக பாதுகாப்பு அங்கு கடைபிடிக்கப்படவில்லை என்பது.
அதோடு அங்கு அளவுக்கு அதிகமாக பறவைகளும் விலங்குகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கின்றன.சுமார் 650 கும் மேலே வெளவால்கள் மட்டும் அங்கு ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் அங்குள்ள சில விஞ்ஞானிகள் ஆய்விற்கு பயன்படுத்தப்பட்ட விலங்குகளை அருகிலுள்ள ஹுனான் கடல் உணவு மார்க்கட்டில் விற்று மில்லியன்கணக்கில் சம்பாதித்து இருக்கின்றனர்.இப்போது இந்த இரு விஞ்ஞானிகளும் உயிருடன் உள்ளனரா என்பது தெரியவில்லை.
 இதே கருத்தை 22-02-2020 தேதியிட்ட நியூ யார்க் போஸ்ட்  பத்திரிகையில் ஸ்டிவன் மோக்ஷர் என்பவர் குறிப்பிட்டு இருந்தார் 
பல யு எஸ் விஞ்ஞானிகள் சீனாவின் W.I.V. யில்  பின்பற்றப்படும் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து இருந்தனர் 
ஆனால் சீன அரசோ கண்ணை மூடிக்கொண்டு இருந்தது . ஜனவரி 20, 2020 வரை மெத்தனமாகவே இருந்தது .
எச்சரிக்கை செய்த தன் சொந்த நாட்டு விஞ்ஞானிகளை கூட வாயை அடைத்துவிட்டது .
அதே நியூயார்க் போஸ்ட்   பத்திரிகையில் அதே மோஷர்  இன்னொன்றையும் குறிப்பிட்டு இருந்தார்.
21-02-2020 இல் சீன அதிபர் க்ஸி ஜின்பிங் அவசர அவசரமாக கேபினெட்டை கூட்டி நாடு முழுதுமுள்ள உயிரியல் ஆய்வு கூடங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஆணை ஒன்றை பிறப்பித்தார்.
இந்த ஆணை மறுநாள் 22-02-2020 அன்று சீன விஞ்ஞான ஆய்வுகூட அமைச்சகம்  மூலம் நாட்டின் அனைத்து ஆய்வு கூடங்களுக்கும் அனுப்பப்பட்டது.உலகமே கோவிட்-19 இல் பரிதவித்துக்கொண்டு இருக்க எந்த நாடும் ஆய்வு கூடம் பற்றி சிந்திக்காத நிலையில் சீன அதிபரின் இந்த நடவடிக்கை பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
23-02-2020 மெயில் ஆன் லைன் தன் வலை தளத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சீனாவின் W.I.V. யின் பாதுகாப்பு பற்றி எச்சரித்ததை வெளியிட்டது .
ஆனால் சீனா அதை பொருட்படுத்தவில்லை.
மார்ச் 22,2020 தேதியிட்ட நியூ யார்க் டைம்ஸ்  பத்திரிகை வெளியிட்ட எப்படி அது வெளிப்பட்டது (HOW IT GOT OUT) என்ற ஒரு கட்டுரையில் ஜனவரி 1,2020 முதல் வூஹான் புது வருட கொண்டாட்டத்தின் போதும் அதன் பிறகும் லக்ஷக்கணக்கான மக்கள் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் வூஹான் நகருக்குள் வருவதும் வெளியேறுவதுமாக இருந்திருக்கின்றனர்.20-01-20 இல் தான் சீனா நோய் தொற்றை ஒப்புக்கொண்டது.23-01-2020 இல் ஹூபாய் மாகாணத்தில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது.லாக் டவுனுக்கு முன்  ஹுபையை விட்டு வெளியேறியவர் சீனாவுக்குள் பரவி விட்டனர் 
லாக் டவுனுக்கு பிறகும் 26-01-2020 வரை சீனா உள்நாட்டு வெளிநாட்டு விமான போக்குவரத்தை லாக் டவுன் செய்யவில்லை.எனவே லாக் டவுனுக்கு முன்னும் பின்னும் கிட்டத்தட்ட 70,00,000 மக்கள் வூஹானிலிருந்து வெளியேறியதாக அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

யூக கோட்பாடு -4-வியாபார நோக்கு ?

இதுவும் ஒரு யூகம் தான் இந்த யூகத்திற்கும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி சீனா  வெளியிடும் சில மிகைப்படுத்தும் அறிக்கைகள் தான் காரணம் 
நாங்கள் இதை கட்டுப்படுத்தி விட்டோம்.வூஹானில் இப்போது எந்த தொற்றும்  இல்லை நாடும் நகரமும்  சகஜ நிலைக்கு திரும்பிவிட்டன.வர்த்தக ஸ்தலங்கள் சகஜமாகி விட்டன.பங்கு சந்தை நிலவரம் உயர்ந்திருக்கிறது சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் மேம்பட்டு இருக்கிறது.எந்த நாட்டிற்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கோவிட் -19 நோய் சம்பந்தமான மருந்துகள் மருத்துவ பரிசோதனை கிட்டுகள் உபகரணங்களை நாங்கள் ஏற்றுமதி செய்ய முடியும். செய்கிறோம் என்ற அவர்களது புள்ளி  விவரங்கள் நம்மை மலைக்க வைக்கின்றன.எவ்வளவு வேண்டுமானாலும் அளவற்ற நிலையில் சீனா  மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னமேயே அது திட்டமிட்டதா என்பது மர்மம் ஆகவே இருக்கிறது.
யூக கோட்பாடு 5-சீன உளவு 
ஜனவரி 20,2020 இல் தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் கிரி வலம் வரும் பாதையில் ஒரு குகை.அதற்குள் மனித வாடையை உணர்ந்த பக்தர்கள் அதற்குள் போக எத்தனிக்க அதனுள் பதுங்கி இருந்த ஒரு சீனர் உள்ளாடையுடன் திடீயென்று வெளிப்பட்டு பக்தர்களின் கைகளில் சிக்காமல் தப்பி ஓட பக்தர்களுடன் வனத்துறையும் சேர்ந்து அவரை விரட்டி பிடித்தனர்.அவரிடம் விசாரித்ததில் தான் சீனாவில் பெய்ஜிங் நகரை சேர்ந்தவர் என்றும்,ஆன்மீக சுற்றுலாவுக்காக இங்கு வந்ததாகவும் 
 ,லாட்ஜில் தங்க இடம் கிடைக்கவில்லை என்பதனால் இந்த குகையை தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார்.தன் பெயரை யாங் ரூய் என கூறினார்.மூன்று நாட்களில் திரும்ப நினைத்ததாகவும் ஆனால் சீனாவில் லாக் டவுன் ஆனதால் இங்கேயே தங்கி விட்டதாகவும் கூறினார்.இன்று அவர் போலீஸ் பாதுகாப்பில் இருந்தாலும் இவரது வருகை இன்னும் மர்மமாகவே இருக்கிறது 

6.சீனாவின் அலட்சியம் -டாக்டர் லீ -யூக கோட்பாடு  


டாக்டர்  லீ  வேனிலியாங் வூஹான் அரசு மத்திய பண் முக ஆஸ்பத்திரியின் கண் சிகிச்சை பிரிவின் முக்கிய மருத்துவர்.இவர் தன்னுடைய சமூக வலை தளத்தில் ஒரு முக்கிய செய்தியை தனது மருத்துவர் குழுவுக்கு பதிவிட்டு இருந்தார்.அதில் தன்னிடம் கண் சிகிச்சை பெற வந்த நான்கு நோயாளிகளுக்கு 2002 இல் குவாங்டாங்கில் பரவிய சார்ஸ் வைரஸை போல் ஒரு தொற்று இருந்ததை உணர்ந்ததாகவும் அது சார்ஸ் -ஐ விட வித்தியாசமாகவும் வீரியமுள்ளதாகவும் இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார் .ஒரு வாரம் கழித்து அவர் வீடுதேடி வந்த போலீஸ் அவரிடம் தேவையற்ற வீண் வதந்திகளை பரப்பி மக்களை பீதி அடைய வைக்க முயற்சித்த குற்றத்திற்காக கைது செய்கிறோம் என்று கூறி அவரை காவல் நிலையம் கொண்டு சென்றனர் 
காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் ஏற்கனவே அச்சிட்டு தயாரித்து வைக்கப்பட்டு இருந்த ஒரு தன்னிலை விளக்க கடிதத்தில் அவரது கையெழுத்தையும் அவரது முத்திரையையும் வாங்கி வீட்டுக்கு அனுப்பினார்.
பத்து நாட்கள் கழித்து அவரது க்ளினிக்கிற்கு கிளாக்கோமா என்ற ஒரு கண் நோய்க்காக சிகிச்சை பெற வந்த ஒரு பெண் நோயாளி மூலம்  அவர் எந்த கிருமியை குறித்து அனைவரையும் எச்சரிக்கை செய்ய விரும்பினாரோ அதே கிருமியினால் தாக்கப்பட்டார்.அவர் குடும்பத்திலும் அது பரவியது.
ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன லீ தான் இறுதி கட்டத்தில் இருப்பதை உணர்ந்தார்.தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் காவல் துறை தன்னிடம் நடந்து கொண்ட விதம் அவர்கள் வற்புறுத்தியதால் தான் ஒப்பமிட்டு கொடுத்த அந்த தன்  நிலை விளக்க கடிதத்தின் நகல் ஆகியவற்றை சமூக ஊடகங்கள் மூலம் மக்களறிய வெளிப்படுத்தினார்.பிறகு டாக்டர் லீ இறந்தார் .நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் உட்பட மக்கள் கொதித்தனர்.அரசையும் காவல்துறையையும் கண்டித்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் விமர்சனகளும் கண்டனங்களும் குவிந்தன.அரசும் காவல் துறையும் மக்களிடம் மன்னிப்பு கேட்டன.ஆனால் காலம் கடந்து விட்டது.டாக்டர் லீ இறந்து விட்டார்.அவரது நேர்மை இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து கொடுத்துவிட்டது.இன்றைக்கு டாக்டர் லீ சீனாவில் ஒரு பிதா  மகன்.

முடிவுரை  

இந்த கட்டுரையின் நோக்கம் ஒரு நாட்டின் மீது பழி போடவேண்டும் என்பதல்ல.ஆனால் நெஞ்சத்தை நெருடுவது போல் அங்கு தவறுகளும் அரசின் அலட்சிய போக்கும் நிறைந்து இருக்கின்றன.அதே சமயம் இந்த கட்டுரையில் குறிப்பிட்ட சில தகவல்கள் மிகையாகவும் இருக்கின்றன.உதாரணமாக நியூ யார்க் டைம்ஸ்  பத்திரிகையின் தகவல்.லாக் டவுனுக்கு முன்னும் பின்னும் வூஹானிலிருந்து சுமார் எழுபது லக்ஷம் பேர் வெளியேறினர்  என்பது.வூஹானின் மொத்த மக்கள் தொகை ஒருகோடிக்கு  மேல் இருக்கலாம்.ஆனாலும் அந்த தகவல் மிகையாகவே தெரிகிறது.
நீதி :-
உலகத்தில் உள்ள அத்தனை  நாடுகளிலும் உள்ள நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்களை கண்காணிக்க ஐ.நா ஒரு விசேஷ துறையை ஏற்படுத்த வேண்டும்.




  





புதன், 22 ஜனவரி, 2020

சிறுநீரக கோளாறு -3-நாட்பட்ட சிறுநீரக கோளாறு (CKD)

நாட்பட்ட சிறுநீரக கோளாறு(CKD)&இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு(ESKD)

படம் 1
இந்த பதிவில் நாட்பட்ட அல்லது நீண்டகால சிறுநீரக கோளாறு பற்றி பார்க்கலாம்.
நாட்பட்ட சிறுநீரக கோளாறு குறுகிய கால கோளாறு போல் இல்லாமல் சிறுநீரகம் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக செயலிழப்பது.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முதன்மையான இரு காரணங்கள் 1.நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம் 2.நாட்பட்ட சர்க்கரை மிகு நோய் (சர்க்கரை நீரிழிவு அல்லது ஹைப்பர் கிளைசீமியா-Hyperglycemia)
உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக இரத்த ஓட்டத்தை குறைத்து அதனால் சிறுநீரகம் நலிவடைந்து கோளாறுகளுக்கு ஆளாகும் 
உயர் சர்க்கரை நிலையில் சிறுநீரகத்தின் நெப்ரான்கள் (சிறுநீரக சுத்தீகரிப்பான்கள்)சேதமடைந்து இத்தகைய கொடிய நோயை உண்டாக்கும் 
மற்றபடி குறுகிய கால சிறுநீரக கோளாறை (AKD) உண்டாக்கும் அனைத்து காரணிகளும் இந்த நாட்பட்ட சிறுநீரக கோளாறுக்கும் (CKD) பொருந்தும்.

நாட்பட்ட சிறுநீரக கோளாறின் நிலைகள் :-

1.சாதாரண நிலை:இதில் சிறுநீரகத்தின் கழிவு நீக்கும் திறன் சாதாரண நிலையிலிருந்து அதி சாதாரண நிலைவரை இருக்கும்.இதை தொழில் நுட்ப மருத்துவ மொழியில் GFR-100 மில்லி/நிமிடத்திற்கு(மி/நி) என்று அளவீடு செய்யலாம்.
2.மித நிலை :-GFR- 60 to 99 மி/நி 
3.இடை நிலை A :- GFR:49 to 59 மி/நி 
   இடைநிலை B :- GFR :35 to 49 மி /நி 
4.கடுமை நிலை :-GFR :19 to 29 மி/நி 
5.இறுதி நிலை    :- GFR :19க்கு  கீழ் <19 19="" font="" nbsp="">
முதல் இரண்டு நிலைகளிலும் நாம் உடனேயே காலத்துடன் சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் இந்த கோளாறை சரிசெய்ய முடியும்.ஆனால் இந்த இரு நிலைகளிலும் நோய் எந்த அறிகுறியும் காட்டாது.எனவே சிகிச்சையிலிருந்து தவறலாம் 
மூன்றாவது நான்காவது நிலைகளுக்கு நோய் கடந்துவிட்டால் மீள்வது கடினம்.ஏனெனில் அந்த நிலைகளில் சிறுநீரகம் ஏறக்குறைய 50%க்கு மேல் தன் ஆரோக்கியத்தை இழந்திருக்கும். 

அறிகுறிகள் :-

CKD ஐ பொறுத்தவரை AKD போன்றே அறிகுறிகள் இருந்தாலும் அவை சிறிது சிறிதாகத்தான் வெளிப்பட துவங்கும் 
1.குமட்டல் வாந்தி பசி இன்மை ஜீரண கோளாறு 
2.பலவீனம் மன குழப்பம் 
3.களைப்பு, சோர்வு  
4.ஆரம்பத்தில் அடிக்கடி சிறுநீர் கழியும் பிறகு படிப்படியாக அது குறைந்து விடும் 
5.சிறுநீரில் நுரை மற்றும் இரத்தம் 
6.இதயத்தை சுற்றி நீர் காட்டுவதால் நெஞ்சு வலி மற்றும் இறுக்கம் 
7.நுரையீரலில் நீர் காட்டுவதால் மூச்சு முட்டுதல் 
8.நீர் இரத்தத்தில் தேங்குவதால் இரத்த அழுத்தம் உயர்தல் 
9.தூக்கமின்மை 
10.யூரிக் அமிலம் யூரியா மற்றும் பாஸ்பரஸ் கழிவுகள் உடலில் தேங்குவதால் தோலில் அரிப்பு உண்டாகுதல்.தோல் கறுத்தல்,படை சிரங்கு போல் செதில் செதிலாக தோல் மாறுதல் 
11.சதை வலி சுளுக்கு .
மேல் கண்ட அறிகுறிகள் அது சிறுநீரக கோளாறுதான் என்றில்லாவிட்டாலும் 
தீர பரிசோதித்துக்கொள்வது நல்லது.

காரணிகள் :-

1.சர்க்கரை நோய் (நாட்பட்ட)
2.நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம் 
3.சிறுநீரக குழாய்களில் தொற்று (Tubule Infections)
4.சிறுநீரக வடிகட்டிகளில் தொற்று (Glomerulonephritis)
5.முன் சிறுநீர் சேமிப்பு குழாயில் கோளாறு.இதனால் சிறுநீர் மீண்டும் சிறுநீரகத்தை நோக்கி திரும்பி பாய்தல் (Vesicoureteral Reflux)
6.சிறுநீரக கட்டிகள் (Renal cysts)
7.சிறுநீர் பின் குழாயில் அழுத்தம் மற்றும் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் (Pressure in urethra & enlarged prostate)
8.நாட்பட்ட சிறுநீரக தொற்று நோய்கள் 

இடர் காரணிகள் :-

1.முதுமை 
2.புகைப்பழக்கம் 
3.ஆல்கஹால் மற்றும் போதை வஸ்துக்கள் 
4.உடல் பருமன் (Obesity)
5.கவனிக்கப்படாத இதய மற்றும் இரத்தக்குழாய் கோளாறுகள் (உயர் இரத்த அழுத்தம்)
6.கவனிக்கப்படாத நாட்பட்ட சர்க்கரை நோய் 
7.பாரம்பரிய சிறுநீரக கோளாறுகள் 

சிக்கல்கள் (பழுதுகள்):-

பெரும்பாலும் கீழ்கண்ட பழுதுகள் இறுதிக்கட்ட சிறுநீரக கோளாறின் அறிகுறியாகும் 
படம்-2
சிறுநீரக்கோளாறுகள் பொதுவாகவே உடலின் அனைத்து  பாகங்களையும் தாக்க கூடியதாகும்.காரணம் ,
1.பொட்டாசியம் அளவு இரத்தத்தில் அதிகரித்தல் (இதய பாதிப்புகள் )
2.இரத்தத்தில் பாஸ்பரஸின் அளவு அதிகரித்தல் (தோல் பிரச்சினைகள் )
3.இரத்தத்தில் கால்ஷியம் அளவு அதிகரித்தல் (சிறுநீரக கல் ,எலும்பு பலஹீனம் மற்றும் இருதய கோளாறுகள்)
4.நீர் தேங்குதல் (நுரையீரல் மற்றும் இருதய வீக்கமுயற் இரத்த அழுத்தம் )
5.இரத்த சோகை 
6.பாலுணர்வு குறைபாடுகள்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை 
7.மூளை மற்றும் மத்திய நரம்புமண்டல பாதிப்புகள்.மன நலம் குன்றுதல் 
8.நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ,உடல் பல வித தொற்று நோய்களுக்கு ஆளாதல் 
9.இதய மேலுறை தொற்று நோய்-Pericarditis.
இதனால் பெரிகார்டிய பையில் நீர் தேங்கி இதயம் வீங்குதல் (படம் 2)

CKD யில் இரத்த சோகை கோட்பாடு(Anemia Concept) எரித்ரோபோய்டின்-Erythropoietin  (EPO):-

படம்-3
சிறுநீரகம் கழிவு உறுப்பாக மட்டும் செயல்படாமல் நம் உடலில்  இரத்த சிவப்பணுக்கள் சீராக இருக்க உதவும்  எரித்ரோபோய்டின் என்ற ஹார்மோனையும் உற்பத்திசெய்கிறது.இந்த வகையில் இது ஒரு நாளமில்லா சுரப்பியாக செயல்படுகிறது. படம் 3-இல் இது கீழ்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளது:-
1.சிறுநீரகத்திலிருந்து EPO வெளியாகிறது 
2.நேரடியாக இரத்த ஓட்டத்துடன் கலந்து எலும்பு மஜ்ஜைக்கு உத்தரவிடுகிறது 
3.எலும்பு மஜ்ஜை உத்தரவுப்படி சிவப்பணுக்களை இரத்த ஓட்டத்திற்குள் வெளியாக்குகிறது .
குழந்தை பருவத்தில் EPO 100% கல்லீரலிலிருந்து உற்பத்தியானாலும் வயது ஆக ஆக இந்த நிலை மாறி சிறுநீரகமே 90% EPO வை தயாரித்து இரத்தத்தில் வெளியிடுகிறது.எனவே வயதான காலத்தில் கல்லீரலின் EPO உற்பத்தி 10% கீழேயே இருக்கும் 
எனவேதான் இறுதி கட்ட சிறுநீரக செயலிழப்பில் EPO குறைபாட்டினால் சோகை மிக வேகமாக உண்டாகும்.
எரித்ரோபொயட்டின் அல்லது EPO கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் இருப்போருக்கும் குளிர் பிரதேசத்தில் வசிப்போருக்கும் அதிக அளவில் சுரக்கப்படும்.காரணம் இங்கு காற்று வெளியில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருக்கும் எனவே இரத்தத்திற்கு அதிக அளவு சிவப்பணுக்கள் தேவைப்படும் 

பரிசோதனைகள் :-

1.EPO அளவு :சாதாரணமாக இதன் அளவு 4 டு 40 IU /L இருக்கவேண்டும் 
2.இறுதி நிலை கோளாறை (ESKD )உறுதிப்படுத்த 24 மணிநேர சிறுநீர் பரிசோதனை அவசியம் 
3.கிரியாட்டினின் பரிசோதனை -இரத்தத்தில் இதன் அளவு சாதாரணமாக 0.7 டு 1.2 வரை இருக்கலாம் 
4.KIM பரிசோதனை 
மேலே  கூறிய அனைத்து பரிசோதனைகளையும் விட குறுகிய கால மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய்களை இந்த பரிசோதனையின் மூலம் மிக துல்லியமாக அறிய முடியும்.
KIM என்பது நோய்ப்பட்ட சிறுநீரக முன் சுருள் குழாயின் (PCT)உள்பகுதி தோலில் இருந்து உதிர்ந்து சிறுநீரில் வெளியாகும் மூலக்கூறு ஆகும் இது ஒரு புரத வகையை சேர்ந்தது 
இது சிறுநீரில் வெளிப்பட்டால் சிறுநீரகம் பழுதடைந்து இருப்பதாக அர்த்தம் 
நுண் ஆல்புமின் யூரியா பரிசோதனை :
இதுவும் ஓரளவு சிறுநீரக கோளாறை அறிய உதவும்.ஆல்புமின் என்பது இரத்தத்தில் இருக்கும் புரதமாகும் இது சாதாரணமாக சிறுநீரில் வெளியேறாது.ஆனால் சிறுநீரகத்தில் கோளாறோ அல்லது கிருமி தொற்றோ இருந்தால் இது சிறுநீரில் வெளியேறும் 

KIM மற்றும் நுண் அல்புமின்யூரியா பரிசோதனைகள் 24 மணி நேர சிறுநீர் பரிசோதனையில் தெரியவரும் 
எரித்ரோபோய்டின் சிகிச்சை 
இந்த வகை ஊசிகள் சிறுநீரக கோளாறின் போது ஏற்படும் சோகை நோயை சரி செய்ய நோயாளிக்கு தர வேண்டும் 
நோயாளி டயாலிசிஸ் செய்தாலுமோ அல்லது இல்லாவிட்டாலுமோ வாரம் மூன்று முறையாவது தர வேண்டும்.
டோஸ்களை டாக்டரே நிர்ணயிப்பார் 
ஹீமோகுளோபின் அளவு இரத்தத்தில் டெசிலிட்டருக்கு 10 கிராமுக்கு கீழே இரங்கத்துவங்கும் போதே சிகிச்சையை ஆரம்பித்துவிடவேண்டும் 
அதன் பிறகு டோஸை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ளலாம் 
டோஸேஜ் அளவு :- 50 டு 100 யூனிட்ஸ் /கிலோ கிராம் 
ரூட் :ஊசி மூலம் சிரையிலோ  (Intra venus) அல்லது தோலுக்கு ஒட்டிய சதைப்பகுதியிலோ(subcutaneous) செலுத்தலாம்.
ஹீமோடயாலிசிஸ் மற்றும் பெரிடோனியல் டயாலிசிஸ் பற்றி விரிவாக தனித்தனியான பதிவுகளில்  பார்க்கலாம் 

வெள்ளி, 3 ஜனவரி, 2020

சிறுநீரக நோய்கள் -2-AKD

குறுகிய கால சிறுநீரக செயலிழப்பு AKD 

படம்-1

குறுகிய கால சிறுநீரக செயலிழப்பு என்பது மிகவும் கொடிய நிலை ஆகும் .இந்த  நிலையில்  திடீரென்று சிறிது நாட்களில் ஏன் சில மணித்துளிகளில் சிறுநீரகம் தன் செயல்பாட்டை இழந்துவிடும் .இரத்தம்  சுத்தீகரிக்கபடாமல் அதன் கழிவுகள் அனைத்தும் உடலில் தேங்கி குறுகிய காலத்தில் உயிருக்கே ஆபத்தான நிலை உருவாவது.
இதை மருத்துவ மொழியில் Acute Kidney Disease or Failure (AKD or AKF) என்பர்.இது  நம் உடன்பிறந்தவரோ அல்லது உயிர் காக்கும் தோழனோ இதுவரை  நட்போடு இருந்துவிட்டு  திடீர் என்று சில நாட்களில் பகையாகிவிடுவது மாதிரி.இந்த AKF திடீரென்று தாக்கக்கூடிய ஒரு கொடிய நிலை எனினும் சில நேரம் அதிர்ஷ்டவசமாக நம் உடல் வேறு எந்த உபாதையும் இல்லாமல்  ஆரோக்கியமாக இருந்தால்,இந்த கொடிய நிலை மாறி சிறுநீரகம் மீண்டும் புனர் ஜென்மம் எடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது .
இரத்தத்தில் கிரியாட்டினின் 50%TO 50% க்கு மேல் இருந்தால் இந்த AKD உறுதிப்படும் 
AKD உண்டாக்கும் காரணிகள் :-
1.போதை மருந்துகள் (ஆல்கஹால்,கோகைன்,அபின்,கஞ்சா)
ஆன்டிபயாட்டிக்குகள்,வலி மருந்துகள்,விஷ கழிவுகள்,விஷ மருந்துகள்.
மெத்தனால்,எத்தனால் போன்ற ஆல்கஹால் வஸ்துக்கள் கல்லீரலில் உண்டாக்கும் பார்மாலிட்டிஹைடு,அசிட்டால்டிஹைடு போன்ற வீரிய கழிவுகள் கல்லீரலிலிருந்து சிலநேரம் அப்படியே ஒழுகி வந்து சிறுநீரகத்தை தாக்கலாம்
மேலும் அளவு மீறி ஆல்கஹால் எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் உயர்ந்து சிறுநீரகத்தை தாக்கும் 
2.வலி மருந்துகள் இவை சிறுநீரக இரத்தக்குழாய்களை சுருக்கி சிறுநீரகம் இரத்தம் பெறுவதை குறைத்துவிடும்.நம் உடலில் இரத்தம் தாராளமாக பாய்வதற்கு சில உயிரி ஊடகங்கள்(Biological Mediators) உதவுகின்றன.அவற்றில் முக்கியமானவை புரோஸ்டகிளாண்டின்(Prostaglandin) மற்றும் புரோஸ்டசைக்ளின் (Prostacyclin)ஆகியவை.புரோஸ்டகிளான்டின் இரத்தக்குழாய்கள் சுருங்குவதை தடுக்கும்.ப்ரோஸ்டாசைக்ளின் இரத்தம் உறைவதை தடுக்கும்.இவற்றை தயாரிக்க சைக்ளோ ஆக்சிஜெனேஸ்  என்ற என்ஜைம் இயங்க வேண்டும்.வலி மருந்துகளான புரூபென்(Brufen or Ibuprofen),ஆஸ்பிரின்Aspirin),நெப்ரோக்சென்(Naproxen or Proxen),இண்டோஸிட் (Indocid or Indomethacin)போன்றவை இந்த என்ஜைம் இயங்குவதை தடுத்துவிடும்.அதனால் தேவையான ப்ரோஸ்டாகிளாண்டின் மற்றும் ப்ரோஸ்டாசைக்ளின் சுரக்காமல் நின்றுவிடும் .
3.நாம் எடுத்துக்கொள்ளும் சில மருந்து மாத்திரைகள் வளர் சிதை மற்றம் அடையும் போது கொடிய நச்சு பொருளாக மாறி சிறுநீரக நெப்ரான்களை சிதைத்து விடலாம் 
உதாரணம் கதிர்வீச்சு ஸ்கேன் எடுப்பதற்காக கான்ட்ராஸ்ட் மீடியமாக ஊசி மூலம் உடலில் செலுத்தப்படும் சில நிறமிகளில் அசுத்தமாக கலந்திருக்கும் அயோடின்.
4.பேதி மருந்தாக தரப்படும் சோடியம் பாஸ்பேட் கலந்த பேதி மருந்துகள்.இவை அதிகப்படியாக எடுக்கும் போது சிறுநீரக நெப்ரான் வடிப்பான்களில் பாஸ்பேட் உப்புகள் படிந்து சேதமுண்டாக்கலாம்.
5.சோடியம் மற்றும் கால்சியம் கலந்த வயிற்று அமிலம் குறைப்பான்கள்(Antacids).உதாரணமாக சோடியம் பைகார்போனேட் உப்புகள் அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகங்களின் மீது அதிக சுமை உண்டாகலாம்.எனவே சிறுநீரகம் பழுதடையலாம் 
மேலும் கால்சியம் உப்புகள் அதிகம் உபயோகித்தால் அவை சிறுநீரக கற்கள் உண்டாக்கி  பாதிப்புகள் ஏற்படுத்தலாம்.இன்னும் கீழ்க்காணும் அட்டவணையில் சில மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளது.அவையும் உடலில் சில சமயம் மாற்றங்கள் அடைந்து அல்லது மாற்றம் அடையாமல் அப்படியே சிறுநீரில் வெளியேறும் போது சிறுநீரகம் சேதம் (AKD)அடைய வாய்ப்புண்டு.
படம்-2(அட்டவணை)
மேலே உள்ள அட்டவணையை நோக்கவும் 
1.கோடீன் போன்ற அபின் பொருள் கலந்த இருமல் மருந்துகள் பார்மசிகளில் டாக்டர் சீட் இல்லாமலேயே கிடைக்கின்றன.இவை அதிகம் அல்லது அடிக்கடி உபயோகிக்கப்படும் பொழுது இரத்தத்தில் கோடீன் அதிகம் தேங்குகிறது.கோடீன் சிறுநீரகத்தில் வளர்சிதை மாற்றம் அடைந்து மார்பின்,நார்க்கோடீன் மற்றும் கோடீன்-6-பாஸ்பேட் போன்ற வீரிய மிக்க பொருட்களாக சிதைந்து உடம்பில் சிறுநீர் வெளியேறுவதை குறைக்கும்.உடலின் நீர்தேங்கி இரத்த அழுத்தம் உயர்ந்து சிறுநீரகம் பாதிக்கப்படும் 
இதே போல் ஆண்டிபையாட்டிக்குகள் உதாரணமாக அமினோகிளைக்கோஸைடுகள் உபயோகிக்கும் போது இவை வளர்சிதை மாற்றம் அடையாமல் அப்படியே சிறுநீரகங்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றன.அப்பொழுது நெப்ரான்கள் சேதமடைகின்றன.(பார்க்க படம்-2)
கன உலோகங்களான காட்மியம் பாதரசம் போன்றவை அசுத்தங்களாக நம் அன்றாட வாழ்வில் நம் உடம்பிற்குள் போகின்றன.இவை சிறுநீரகத்தின் மீது அதிக ஈர்ப்பு உடையவை.இவை சிறுநீரகத்தை பாதிக்காமல் இருக்க இயற்கையிலேயே சிறுநீரக திசுக்களில் மெட்டாலிதியோனின் என்ற புரதம் இருக்கிறது.இது இந்த கன உலோகங்களை கிரகித்துக்கொள்ளும்.ஆனால் சில நேரங்களில் இந்த கட்டு சிதைந்து உலோகம் ஒழுகி சிறுநீரகத்தை பாதிக்கும்.முக்கியமாக குடிநீர்,உணவுகள் மூலமாக கன உலோக நச்சுக்கள் நம் உடலில் நுழையலாம்.

அறிகுறிகள் :-குறுகிய கால சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் கீழே தரப்பட்டுள்ளன.இவை நீண்ட கால செயலிழப்பிற்கும் பொருந்தும் 

1.சிறுநீர் வெளியேறுவது குறைதல்.உடலில் நீர் தேங்கி கணுக்கால் பாதம் கைகள் வீங்குதல் 
2.சிறுநீரில் இரத்தம் வருதல் 
3.களைப்பு ,சோர்வு 
4.தோல் அரிப்பு ,சிதைவு 
5.இதய நோய்கள் ,இதயத்தை சுற்றி நீர்கட்டுதல் ,ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள் (Arrhythmias)
6.நுரையீரலில் நீர் தேங்குதல்,மூச்சுத்திணறல் 
7.குமட்டல் 
8.மனப்பிராந்திகள் 
9.வலிப்பு,கோமா 

பரிசோதனைகள் 

பொதுவாக இரத்தத்தில் கிரியாட்டினின் சிறுநீரக நோய்களை முன்கூட்டியே சரியாக கணிக்க உதவாது 
எனவே சிறுநீர் பரிசோதனைகள் குறிப்பாக சிறுநீரில் சிலவகை நுண் புரத மூலக்கூறுகள் தென்படுவதைவைத்து முன்கூட்டியே சிறுநீரக செயலிழப்பை அறிய முடியும்.அந்த புரதங்கள் 
1.(Kidney Injury Molecule-1 or KIM-1)
2.N-Acetyl-β-D-glucosaminidase(NAG)
3.Matrix Metallo Proteinase-9(MMP-9)
அடுத்து சிறுநீரில் இந்த புரதங்கள் இருப்பதை உறுதி செய்யும் பட்சத்தில் சிறுநீரகம் பழுதடையப்போவதை முன் கூட்டியே கணிக்கலாம் 
Continued....






திங்கள், 9 டிசம்பர், 2019

சிறுநீரக வியாதிகள்-1-முகவுரை

சிறுநீரகம் -ஓர் அறிமுகம் 

படம் 1
சிறுநீரகங்கள் என்னும் இந்த முந்திரிக்  கொட்டை வடிவில் அமையப்பெற்ற  கழிவு உறுப்புகள்   மேல் வயிற்று பகுதியில் பின்புறத்தண்டு வடத்தின் இருபுறமும் எதிர் எதிராக பின்புற முதுகின் உள்சதையின் பிடிமானத்துடன் பொருந்தியுள்ளன.
வலது சிறுநீரகத்தின் தலை மீது   கல்லீரல் அமைந்திருப்பதால் (பார்க்க படம் 1) அது சிறிது தாழ்ந்தும் இடது சிறுநீரகம் சிறிது உயர்ந்தும் அமைந்துள்ளன.

சிறுநீரக இரத்த ஓட்டம் 

படம் 2
மிகச்சிறிய ஒரு முந்திரிக் கொட்டையின் அளவே இருப்பினும் இதயம் வெளிப்படுத்தும் இரத்தத்தில் சுமார் 20 to 25% சிறுநீரகம் சிறுநீரக தமனி மூலம் பெறுகிறது(பார்க்க படம் 2).இந்த இரத்தம் வடிகட்டி சுத்தீகரிக்கப்பட்டபின் அதில் 3%இரத்தத்திலிருந்து தனக்கு தேவையான ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு மொத்த இரத்ததையும் சிறுநீரகம் சிறுநீரக  சிரை மூலம் இதயத்திற்கே அனுப்பிவிடுகிறது (பார்க்க படம் 2)
சிறுநீரகம் இரத்தத்தை அதன் அழுகுகளான யூரியா,யூரிக் அமிலம்,ஹிப்பூரிக் அமிலம்,கிரியாட்டினின்,மருந்து வளர் சிதை கழிவுகள் நீரில் கரையக்கூடிய தேவையற்ற விஷப்பொருட்கள் ஆகிய அனைத்தையும்  நீக்கி சுத்தமாக்கும் மிக முக்கிய கழிவு உறுப்பு ஆகும்.இதன் தேய்மானம் மற்றும் இதில் ஏற்படும் கோளாறுகள் நம் ஆரோக்கியத்திற்கு மிக பெரும் கேடு விளைவிக்கும் 

நெப்ரான்கள் (சிறுநீர் வடிகட்டிகள்)


படம் 3அ 

படம் 3ஆ 
நெப்ரான்கள் என்ற இந்த சிறுநீர் வடிகட்டிகள்தான் சிறுநீரகத்தின் அடிப்படை யூனிட்டுகளாகும்.இறைவனின் மிகப்பெரும் அருட்கொடையால் நம் ஒவ்வொரு சிறு நீரகத்திலும் சுமார் பத்து லட்சம் நெப்ரான்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதாவது பிறந்த போது  ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கிய நிலையில் மொத்தம் இருபது லட்சம் நெப்ரான்கள் தரப்பட்டுள்ளன.எல்லாப்  புகழும் இறைவனுக்கே.ஆனால் ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கை மாற்றத்தாலும் பொறுப்பற்ற உணவுப்பழக்கங்களாலும் நாம் கிட்னியை தாக்குவதன் மூலம் நெப்ரான்களை சேதப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.வாலிப மிடுகிலும் இளமை தரும் ஆரோக்கியத்தில் சிறுநீரகம் சேதப்பட்ட நெப்ரான்களை  அவ்வப்போது சரிசெய்து கொள்கிறது .அது ஒவ்வொருவரின் வயதையும் ஆரோக்கியத்தையும் பொறுத்தது.ஆனால் ஒருபோதும் சிறுநீரகத்தால்  ஒரு புதிய நெப்ரானை உருவாக்க முடியாது. 
நெப்ரான்களின் பாகங்கள் :-(பார்க்க படங்கள்  3அ ,3ஆ )
1.பெளமென் குப்பி :- இது உட்புறம் குழிந்து ஒரு குப்பி போல் இருக்கும் .இதுதான் நெப்ரானின் தலை.இந்த குப்பியின் அளவு 8 to 10 நானோ மீட்டர் ஆகும்.ஒரு நானோ மீட்டர் என்பது 1000X1000 மில்லி மீட்டரில் ஒரு பங்கு ஆகும் அல்லது 1000 மில்லி மைக்ரானில் ஒரு பங்கு ஆகும்.இதற்குள் தான் இரத்த குழாய் தந்துகிகள் க்ளமெரோலஸ் என்ற ஒரு பந்துபோல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்.இங்கிருந்துதான் இரத்தம் வடிகட்டப்படும் (பார்க்க படம்)
இந்த குப்பியின்  கீழ் நெளிவுகளாக  இறங்கி பிறகு மேலெழும் குழாய்க்கு முன் நெளிவு குழாய் (Proximal Convoluted Tubule)என்று பெயர்.இந்த குழாயில் இரத்தம் வடிகட்டப்படும் போது பெரும்பாலும் மிக சிறிய மூலக்கூறுகள் கொண்ட இரத்த பொருட்கள் (சோடியம் பொட்டாசியம் குளோரைடு போன்ற அயனிகள் இன்னும் பிற நுண் மூலக்கூறுகள் கிரியாட்டினின் யூரியா யூரிக் அமிலம் போன்ற அழுக்குகள்) அனைத்தும் இந்த குழாய்க்குள் வடிந்துவிடும்.புரோட்டீன் போன்ற பெரிய மூலக்கூறுகள் இரத்தத்திலேயே தங்கிவிடும்
இருப்பினும் வயது ஆக ஆக சிறிது புரதம் இதில் வடியக்கூடியது எனினும் அதிக பட்சம் 0.05%வரை இதில் புரதம் கசியலாம் .மற்றபடி இந்த வடிதிரவம்(கிளாமருலஸ் வடிதிரவம்)கிட்டத்தட்ட பிளாஸ்மாவை ஒத்திருக்கும்.இதில் சாதாரணமாக 175 கிராம் வரை குளூக்கோஸும் சேர்ந்து வடிந்திருக்கும்.  
2.கிளாமருலஸ் :-இரத்த தந்துகி குழாய்கள் ஒரு பந்து போல் பின்னப்பட்டு பெளமன்ஸ் குப்பிக்குள் அடங்கி இருக்கும்.இதற்கு கிளாமருலஸ் என்று பெயர்.இரத்தம் இங்கிருந்துதான் வடிகிறது. 
3.முன் நெளிவு வடிகுழாய் (Proximal Convoluted Tubule,or PCT):-
இது பௌமன் குப்பியிலிருந்து கீழே தொடங்கும்.பிறகு மேலெழுந்து பல நெளிவுகளாக (Convoluted) மீண்டும் கீழிறங்கும்.இங்கு 100%க்ளூகோஸ் அமினோ அமிலங்கள் போன்ற உடலுக்கு தேவையான ஊட்டப்பொருள்கள் மீண்டும் இரத்தத்திற்குள்  உறிஞ்சப்படும்.ஏறக்குறைய ஒரு 65% to 70%சோடியம்,பொட்டாசியம்,குளோரைடு  பைகார்போனேட்,பாஸ்பேட் சிட்ரேட் மற்றும் லேக்டேட் போன்ற  அயனிகளும்  நீருடன் மீண்டும் இரத்தத்திற்கு திரும்பும்.அதே அளவு ஹைட்ரஜன் அயனிகள் மற்றும் கிரியாட்டினின்(10%) கழிவுகள் வடித்திரவத்திற்குள் இங்கு சுரக்கப்படும் .இந்த குழாய் பகுதியில் கொஞ்சம்  யூரியா மீண்டும் உறியப்பட்டு இரத்தத்திற்கு திருப்பலாம்.ஆனால் கிரியாட்டினின் சுத்தமாக மீண்டும் இரத்தத்திற்குள் உறியப்படாது.
4.ஹெண்லேயின் லூப் (இறங்கும் பகுதி)
முன்நெளிவு குழாய் குறுகி  லூப் ஆக கீழே மெடுல்லா பகுதிக்கு இறங்கும்(பார்க்க படம் 3அ ).வடி திரவம் இங்கு இறங்கும் போது கிட்டத்தட்ட முன் நெளிவு குழாயில் மூன்றில் இரண்டு பங்கு பொருட்களும் சிறிது நீரும் உறிஞ்சப்பட்ட பிறகு மீதி மூன்றில் ஒருபங்கு வடி திரவம் இந்த பகுதிக்கு வரும்.இப்பொது அதில் அதிக நீர்ச்சத்தும் குறைந்த கரைபொருளும் இருக்கும்.அதாவது வடிதிரவம் நீர்த்து(Diluted)குறை உரத்தன்மை (Hypotonic) உடையதாக இருக்கும் .எனவே இந்த இறங்கு ஹென்லேயின் லூப் பகுதியின் சுவர் ஒரு அரை ஊடுருவி சவ்வாக(Semipermeable Membrane) மாறி வடிதிரவத்தின் நீரை மட்டும் இரத்தத்திற்குள் மீண்டும் உறிஞ்சி வடித்திரவதை அடர்த்தியாக்கி அடுத்த பகுதிக்கு நகர்த்தும்.
5.ஹென்லேயின்  லூப் (உயரும் பகுதி )
இந்தப்பகுதியில் திரவம் நகரும் போது அது அடர்த்தி அதிக (Concentrated) நிலையில் இருக்கும் அதாவது உயர் உர தன்மை (Hypertonic)உடையதாக இருக்கும்.இந்த பகுதியின் சுவர் மீண்டும் அரை ஊடுருவி சவ்வாக இருந்து இதிலிருக்கும் கரைபொருட்களான சோடியம்,பொட்டாசியம்,மற்றும் குளோரைடு அயனிகளை மட்டும் இரத்தத்தில் மீண்டும் உறிஞ்சிக்கொண்டு சமப்படுத்தப்பட்ட (Isotonic)கரைசலாக அடுத்த பகுதிக்கு அனுப்பும்.
6.கடை நெளிவு வடி குழாய் (Distal Convoluted Tubule or DCT):-
கிட்டத்தட்ட நெப்ரானின் இறுதிக்கட்ட வடிகட்டுதல் இங்குதான் நிறைவேறும்.நெப்ரானின் இந்த பகுதிவரைதான் இரத்த ஓட்டமும் இருக்கும்.இங்குதான் பிட்டியூட்டரியிலிருந்து வரும் vasopressin என்ற ஹார்மோன் (நீர்ம எதிர்ப்பு இயக்குநீர் ,Anti Diuretic Hormone)தாக்கமும் இருக்கும்.இந்த ஹார்மோன் வடிதிரவத்திலிருந்து சோடியத்துடன் மேலும் நீரை இரத்தத்தில்  உறிஞ்சி சிறுநீரை அடர்த்தி உள்ளதாக்குகிறது.இங்குதான் அட்ரீனலிலிருந்து சுரக்கப்படும் ஆல்டோஸ்ட்டிரான் என்ற ஹார்மோன் சோடியம் மீண்டும் இரத்தத்திற்குள் உறிஞ்சப்பட  உதவுகிறது இந்த இடத்தில்தான் பொட்டாசியம் வடித்திரவத்திற்குள் கடைசியாக மீண்டும் கசியப்படுகிறது.இந்த இடத்தில்தான் ஹைட்ரஜன் அயனியும் வடிதிரவத்திற்குள் கசியப்பட்டு சிறுநீரின் அமிலத்தன்மை pH 5 -ஐ சுற்றி நிலைநிறுத்தப்படுகிறது.
இனி இந்த வடித்திரவதை சிறுநீர் என்று அழைக்கலாம் .
இப்படி உருவாகும் சிறுநீர் இனி DCT யின் பின்பகுதியான சிறுநீர் சேகரிப்பு நூல்குழாயின் மூலம் சிறுநீர் சேகரிப்பு குழாயை அடைகிறது.பிறகு அங்கிருந்து யூரேட்டர் எனப்படும் முன் சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பையை அடையும்.

சிறுநீர் சேகரிப்பு நூல் குழாய்,சிறுநீர் சேகரிப்பு குழாய் யூரேட்டர் ஆகிய பகுதிகளில் இரத்த ஓட்டம் இருக்காது.
சிறுநீரகத்தின் குறுக்கு மற்றும் நெடு வெட்டு தோற்றமும் அதில் நெப்ரானின் அமைந்திருக்கும் விதமும் :-
படம் 4 அ 

படம் 4ஆ 
மேலே உள்ள இரு படங்களும் சிறுநீரகத்தில் அதன் அடிப்படை யூனிட்டுகளான நெப்ரான்கள் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை காட்டுவதற்காக வரையப்பட்ட மாதிரி படங்கள்.உதாரணத்திற்காக ஒரே ஒரு நெப்ரான் மட்டும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.படம் 4அ சிறுநீரகத்தின் குறுக்கு வெட்டு தோற்றமாகும்.இதில் கார்ட்டக்ஸ் பகுதியில்தான் நெப்ரானின் முக்கால் பகுதி அமைந்திருப்பதை காணலாம் எனவே இப்பகுதிதான் அதிக இரத்த புழக்கமுள்ள பகுதியாகும்.
மெடுல்லா பகுதியில் நெப்ரானின் லூப் மட்டுமே நீட்டிக்கொண்டிருக்கிறது .எனவே அந்த பகுதியில் மட்டும் இரத்த ஓட்டம் இருக்கும்.
கீழே தரப்பட்டுள்ள  நெடு வெட்டு தோற்றம் (படம் 4ஆ)  படத்தில் கார்ட்டக்ஸ் பகுதியில் இரத்த குழாய்கள்  நெளிவு நெளிவாக பிரமிடுகள் போல் சிறிது மெடுல்லாவுக்குள் இறங்கி ஏறி இருக்கின்றன.மெடுல்லா பகுதியிலுள்ள பெல்விஸ் அமைப்பில்தான் நெப்ரான்களின் சேகரிப்பு குழாய்கள் பகுதி பகுதியாக குவிந்து பிறகு மொத்தமாக முன் சிறுநீர் குழாயாக மாறுவதை காணலாம்.இதுதான் சிறுநீரகத்தின் இயக்கவியல் மற்றும் அகவியல் பற்றிய சிறு குறிப்பு ஆகும்.இனி இதில் ஏற்படும் நோய்களை பற்றி இறைவன் நாடினால் அடுத்த பதிவில் பார்க்கலாம்  
தொடரும் .....

செவ்வாய், 19 நவம்பர், 2019

இசிஜியில் தைராய்டு குறைபாடு (HYPOTHYROIDISM EFFECTS IN ECG)

தைராய்டு குறைபாடு நிலையில் இசிஜி 

தைராய்டு சுரப்பி சில அசாதாரண நிலைக்களில் தன் செயல்பாட்டை குறைத்து கொள்ளும் அல்லது முற்றிலும் இழந்துவிடும்.இந்த நிலையில் இரத்தத்தில் அயோடின் சத்து வளர்சிதை மாற்றங்கள் அடையாமல் உடலில் தேங்கிவிடும்.தைராய்டு குறைபாட்டு நிலையில் தைராய்டு இயக்கு நீர்கள் இரத்தத்தில் குறைந்துவிடும்.இதை சரிக்கட்டுவதற்கு மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி தைராய்டு தூண்டுதல் இயக்கு நீரை (TSH) அதிகம் சுரந்து தைராய்டு சுரப்பியை தூண்ட ஆரம்பிக்கும்.நோய்ப்பட்ட தைராய்டு சுரப்பி பிட்யூட்டரி யின் தூண்டுதலை தாங்க முடியாமல் அதே நேரம் ஒழுங்காகவும் இயங்க முடியாமல் வீங்க துவங்கும்.இதுவே காய்ட்டர் (Goiter)ஆகும்.இதே காய்ட்டர் நிலை தைராய்டு மிகைப்பாட்டிலும் ஏற்படலாம் 
பொதுவாகவே காய்ட்டர் சாதாரண நிலையில் வீங்கி இருந்தால் ஏதும் பிரச்சினை இல்லை 
ஆனால் அதுவே அளவு மீறி வீங்கி இருந்தாலோ குமிழ் குமிழாக (Nodules) கிளை விட்டு இருந்தாலோ அது பெரும் பிரச்சினை ஆக மாறிவிடும்.மேலும் இது பற்றி விவரிப்பது நம்முடைய நோக்கத்திற்கு அப்பாற்பட்டது .எனவே இது பற்றி மேலும் விபரம் அறிய இங்கு க்ளிக் செய்யவும் 
தைராய்டு குறைபாட்டின் காரணிகள் மற்றும் அறிகுறிகள் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும் 
இசிஜியில் தைராய்டு குறைபாடு 


மேலே உள்ள படத்தில் தைராய்டு குறைபாடுள்ள ஒரு நோயாளியின் மாதிரி இசிஜி காட்டப்பட்டுள்ளது 
ஒரு நார்மல் சைன்ஸ் ரிதம் தைராய்டு குறைபாட்டினால் எவ்வாறு தாக்கம் அடைகிறது என்பதை இந்த மாதிரி இசிஜி தெளிவாக காட்டுகிறது 
1.தாக்கம் -1: R -R இடைவெளி மிகவும் நீண்டு இருக்கிறது.இது இதயத்துடிப்பு குறைந்து இருப்பதை (Bradycardia) காட்டுகிறது.
2.தாக்கம் -2:-மின்முனை II இன் பதிவில் ST -பகுதி தாழ்ந்துள்ளது இது கீழறைகள் சரியாக விரியவில்லை என்பதை காட்டுகிறது 
3.P -அலை மறைந்துள்ளது.இது இதயத்தின் மேலறைகள் சரிவர இயங்கவில்லை என்பதை குறிக்கிறது.
 இறுதியாக தைராய்டு குறைபாட்டை தக்க சிகிச்சையளித்து சரி செய்யவில்லை என்றால் பெரும் பின்விளைவுகளை குறிப்பாக இருதயம் சம்பந்தமான பிரச்சினைகளை உண்டாகும்.


வியாழன், 14 நவம்பர், 2019

இசிஜியில் தைராய்டு மிகை நிலை (ECG CHANGES IN HYPERTHYROIDISM)

தைராய்டு மிகைப்பாடு

படம் 1
தைராய்டு சுரப்பி நமது தொண்டைக்குழியில்  மேலும் கீழும் ஏறி இறங்கும் ஆடாம்ஸ் ஆப்பிள் உறுப்பின் கீழே அமைந்துள்ளது 
மேலே படம்-1இல் உள்ளபடி இது ஒரு வண்ணத்து பூச்சி போல் தோற்றமளிக்கும்.இதன் அளவு மிகவும் சிறியது என்றாலும் இதன் சக்தி மிகவும் அபாரமானது.
இது நம் உடல் அயோடின் சத்தை பயன்படுத்துவதற்கு (metabolize) உதவுகிறது.
இது ரத்தத்தில் உள்ள அயோடினை உட்கொண்டு தைராக்ஸின் என்ற ஹார்மோனை உற்பத்திசெய்யும்.இதற்கு தூண்டுகோலாக இருப்பது மூளை பகுதியினுள் இருக்கும் பிட்டியூட்டரி(Anterior Pituitary) சுரப்பியாகும்.இச்சுரப்பியானது இரத்தத்தில் அயோடின் அதிகரிக்கும் போது தைராய்டு தூண்டுதல் இயக்குநீர் (Thyroid Stimulating Hormone,TSH) என்ற ஹார்மோன் மூலம் தைராய்டு சுரப்பியை தூண்டி விட்டு தைராக்ஸினை சுரக்கவைக்கும்.இவ்வாறு சுரக்கப்படும் தைராக்ஸின்,டெட்ரா அயோடோ தைரோனின் அல்லது T4 ஆகும்.இதில் ஒரு 90% இரத்த ஓட்டத்தில் ஒரு அயோடினை இழந்தது திரி அயோடோ தைரோனின் அல்லது T3 ஆக மாறும்.தைராய்டின் சக்தியில் 90% இந்த T3  மூலமாகத்தான் உடல் பெறுகிறது.இரத்தத்தில் தைராக்ஸின் சுரந்தவுடன் 90% அது இரத்தத்தின் பிளாஸ்மா ப்ரோடீன்களால் உறிஞ்சப்பட்டுவிடும்.நாம் இங்கே இதுபற்றி விரிவாக காணப்போவது இல்லை 
காரணிகள் :-
1.அதிக தைராக்ஸின் மாத்திரைகளை உட்கொள்ளுவது.
2.பிட்டியூட்டரி கோளாறுகளினால் அதிகமாக தைராய்டு தூண்டப்படுத்தல் 
3.தைராய்டு சுரப்பி வீக்கம் (Goiter,Active Adenoma or Tumor )
5.அதிக அளவு அயோடின் மருந்துகளை உட்கொள்ளுதல் (அமியோடரோன்,Amiodarone)
6.தைராய்டு எரிவு அல்லது Thyroiditis )
சாதாரணமாக தைராய்டு நம் உடலின் வளர் சிதைவை (Metabolism )ஊக்குவிக்கிறது இதன் மூலம் உடலின் உஷ்ணநிலையையும் தூண்டுகிறது 
ஆனால் இது மிகைப்படும் போது நம் உடலின் வளர்சிதை தடுமாற்றம் அடையும்.உடல் வெப்பநிலை கட்டுமீறி உயரும் 
இதயத்துடிப்பு,ரத்த கொதிப்பு கட்டு மீறி போகும்போது மனிதனின் நிலை தடுமாறிப்போகும் 
தைராய்டு மிகைப்பாட்டின் அறிகுறிகள்:
1.கை ,கால் உதறல்,நிலைகொள்ளாமை,நரம்பு தளர்ச்சி ,தூக்கமின்மை.
2.மன உளைச்சல் 
3.தளர்ச்சி,சோர்வு 
4.மன தடுமாற்றம் (Mood Swings)
5.உடல் வெப்பம் அளவுமீறி உயர்தல் (Hyperthermia)
6.எதிர்பாராத எடை இழப்பு 
7.தொண்டை வீக்கம் (Goiter)
8.இதய துடிப்பு அதிகரிப்பு 
9.வயிற்றுப்போக்கு 
10.தோல் மற்றும் முடி உதிருதல் 
11.மாதவிடாய் கோளாறு  

இசிஜியில் தைராய்டு மிகைப்பாடு:-

படம் 2
மேலே உள்ள படம் 2 இல் தைராய்டு மிகைப்பாட்டின் போது இசிஜியில் அதன் தாக்கத்தை மின்முனை II இன் பதிவில் கட்டப்பட்டுள்ளது 
அதில் ஆரோக்கிய நிலையில் ஒருவரின் இசிஜி சைன்ஸ் ரிதம் எவ்விதம் மாறுபட்டுள்ளது என்பது தெளிவாகிறது.ஆரோக்கிய நிலை சைனஸ் ரிதம் காண இங்கு க்ளிக் செய்யவும்.
படம் 3
 
மேலே படம் 3 இல் ஒரு முழு மாதிரி இசிஜி காட்டப்பட்டுள்ளது அதில் மின்முனை -I,II,III,aVF,V4,V5,மற்றும் V6 இன் பதிவை கவனியுங்கள்.
அதில் R-R இடைவெளி குறுகியிருக்கிறது இதயம் வேகமாக தாறுமாறாக துடிப்பதை இது காட்டுகிறது மேலும் மற்ற பதிவுகளிலும் S-அலை மிக தாழ்ந்து உள்ளது S-T பகுதி உயர்ந்து இருக்கிறது இதுவும் இதயத்தின் கீழறைகளில் ஏற்படும் கோளாறுகளையே உணர்த்துகிறது 
மொத்தத்தில் தைராய்டு மிகைபாடு கவனிக்கப்படவில்லை என்றால் ஆபத்தான விபரீதங்களை உண்டாக்கி விடும் 
தொடர்ந்து  அடுத்து தைராய்டு குறைபாடு நிலையில் இசிஜி .....

புதன், 6 நவம்பர், 2019

மருந்துகளால் உங்கள் இசிஜியில் ஏற்படும் பாதிப்புகள் -3

பீட்டா ஏற்பி அடைப்பான்கள் & கால்ஷியம் சேனல் அடைப்பான்கள் 

படம் 1

A.அடேனோலோல் (Atenolol)(டெனோர்மின்,அட்டன் Tenormin,Aten)ப்ரோபிரானோலோல்(Propranolol,இன்டெரால்,Inderal) மற்றும் மெடோபிரலால்,(Metoprolol,லோபிரசர்,Lopressor)
மேலே கூறப்பட்ட அத்தனை மருந்துகளும் பீட்டா ஏற்பி அடைப்பான்கள் (Beta Receptor Blockers) வகையை சேர்ந்தவை.இவை தானியங்கி நரம்பு மண்டலத்தில் (Autonomic Nervous System) அட்ரீனலின் நரம்பு பிரிவில் உள்ள பீட்டா ஏற்பிகளை அடைத்து நாரெட்ரீனலின் ஹார்மோனை செயலிழக்க செய்பவை.இதன் மூலம் இரத்தக்குழாய்களை விரிவடைய செய்து, இதய துடிப்பின் வேகத்தையும் குறைத்து இரத்த அழுத்தம் உயராமல் பார்த்துக்கொள்ளும் 
B.அமிலோடிப்பின்,(Amlodipin)(நொர்வாஸ்க்,Norvasc),வேரபாமில்,(Verapamil)(ஐசாப்ட்டின்,Isoptin),நிபிடிப்பின்(Nifedipin)(ப்ரொகார்டியா,Procardia)-இவை அனைத்தும் கால்ஷியம் சேனல் அடைப்பான் வகையை சேர்ந்த மருந்துகளாகும்.
மேலே குறிப்பிட்ட இரண்டு வகை மருந்துகளும் பெரும்பாலும்  இசிஜியில் ஒரே மாதிரியான தாக்கத்தையே உண்டாக்குகின்றன.
மேலே படம் 1 இல் ஒரு நார்மல் இதயத்துடிப்பின் இசிஜி காட்டப்பட்டுள்ளது.அதில் P,Q,R,S மற்றும் T -அலைகள் தெளிவாக உள்ளன.
படம் 2A
மேலே படம் 2-இல் பீட்டா அடைப்பான்கள் மற்றும் கால்ஷியம் சேனல் அடைப்பான்கள் ஆகியவற்றின் இசிஜி தாக்கம் எப்படி இருக்கும் என்பது பதிவாகியுள்ளது 
முக்கியமாக மின்முனை II இல் ST பகுதி தாழ்ந்து,உள்ளது.S-அலை மிக கீழ்நோக்கி தணிந்து இருக்கிறது.Q -அலை மறைந்து இருக்கிறது.T -அலை மேலே குவிந்து கூம்பு போல் இருக்கிறது.இவை அனைத்தும் ஒரு சிறு சிகப்பு வட்டத்திற்குள் குறிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும் 
மின் முனை aVL -ன் பதிவில் P -அலை இல்லை R -R-இடைவெளி மிக நீண்டு இருக்கிறது.(சிவப்பு நீள்  சதுரம்)
இவை அனைத்தும் இதயம் குறைந்த வேகத்திலும் அழுத்தத்தாலும் துடிக்கிறது என்பதை காட்டுகிறது.
படம் 2B 

 
படம் 2C 


மேலே உள்ள படம் 2B,மற்றும் 2C இரு இசிஜி மாடல்களிலும் வெரபாமில் (Verapamil)என்ற கால்ஷியம் சேனல் அடைப்பானின் இசிஜி தாக்கம் காட்டப்பட்டுள்ளது 
படம் 2B உருவகப்படுத்தப்பட்ட (Simulated)கணிப்பு வரைபடமாகும்.அதில் Phase -0 என்ற அமைப்பு வலது புறமாக கூடுதலாக சாய்ந்து விட்டது.இது புள்ளிக்கோடுகள் மூலம் குறிக்கப்பட்டுள்ளது.இது வலது புறம் சாய்ந்துவிட்டதால் Phase 2 கொஞ்சம் குறுகிவிட்டது (கால்ஷிய அயனிகளின் நுழைவு அடைக்கப்பட்டதால்).இது  படம் 2C இசிஜி மாதிரியில் தெளிவாகிறது.
மின்முனை II யின் பதிவில் (நீல செவ்வகம்) P-அலை மறைந்துள்ளது 
R -R இடைவெளி அதிகரித்து உள்ளது 
மின்முனை aVL இல் QRS கூட்டமைப்பு குட்டையாகவும் விரிந்தும் இருக்கிறது 
இவை அனைத்தும் இதயம் மெல்ல மெல்ல தன்  செயல்பாட்டை இழந்துகொண்டு இருக்கிறது என்பதை 
காட்டுகிறது 
முடிவாக மேலே கூறப்பட்ட மருந்துகள் டெனோர்மின் (TENOMIN,ATEN ), ஐஸோப்ட்டின்(ISOPTIN ) ,நோர்வோஸ்க்(NORVASC ),அட்டன்(Aten),ப்ரொகார்டியா (Procardia )போன்ற மருந்துகள் அளவு மீறியோ அல்லது டாக்டரின் ஆலோசனை இல்லாமலோ எடுத்துக்கொண்டால் இதய செயலிழப்பில் (CHF) என்ற கொடிய நிலையில் கொண்டுவிடும் என்பது தெளிவு.


அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...