வெள்ளி, 22 ஜனவரி, 2016

Seyed1951

ஏகத்துவம் -2:(தனி மனித வழிபாடு )

இஸ்லாம் எந்த வகையிலெல்லாம் ஏகத்துவத்தில் தெளிவாக இருக்கிறதென்பது பற்றி ஓரளவு பார்த்தோம்.தனி மனித வழிபாட்டை இஸ்லாம் அறவே தடை செய்கிறது.வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் பூஜைகளும் புனஸ்காரங்களும் அனைத்தும் ஆண்டவன் வகுத்த வழியில் அவனுக்கு மட்டுமே உரியது அது எந்தெந்த ரீதியிலும் அவனல்லாத எவருக்குமே உரித்தானது அல்ல எவருமே அதற்க்கு தகுதி  பெற மாட்டார்கள் என இஸ்லாம் உறுதியாக கூறுகிறது.
அடிமைத்தனத்தில் ஊறிக்கிடந்த அராபியர்களை அதை விட்டு  விடுவித்த இஸ்லாம் அதே அடிமை தனத்தை வேறொரு கோணத்தில் நிலைநாட்டியது ஆம் அதுதான் அனைவரும் ஆண்டவனின் அடிமைகள். இபாதத் என்றால் அரபுமொழியில் அடிமைத்தனம் என்று பொருள்.மனிதனுக்கு மனிதன் இபாதத் செய்வதை தடுத்த இஸ்லாம் ஆறறிவுள்ள பகுத்து சிந்திக்கும் ஆற்றலுள்ள மனிதனை ஆண்டவனுக்கு இபாதத் செய்யும்படி வலியுறுத்தியது அதுதான் இயல்பும் கூட.ஏனென்றால் பகுத்தறிவற்ற இயற்கையின் உயிருள்ள உயிரற்ற ஏன் நம் ஆன்மாவை தாங்கி நிற்கும் உடலின் ஒவ்வொரு அங்கமும் கூட ஆண்டவனைத்தான் இபாதத் செய்கின்றன.இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் நம் கண்களை எடுத்துகொள்வோம் அதற்க்கு அதன் எஜமான் பார்க்கத்தான் ஏவி இருக்கிறான் எனவே பார்வையை தவிர அது வேறு எந்த வேலையும் செய்யாது.இப்படி ஒவ்வொரு உறுப்பும் தன எஜமானாகிய இறைவனின் கட்டளை படியே துளியும் பிசகாமல் இயங்குகின்றன.
ஆனால் பகுத்தறிவுள்ள மனிதர்களில்தான்  பலர் தன மனோ இச்சைப்படி தவறான ரீதியில் தன அறிவை பகுத்து கொள்கிறார்கள் 
எனவே எல்லோரும் இறைவனுக்கு அடிமை என்ற கோட்பாடு முரட்டு அரேபியர்களிலும் நல்லவர்களை சிந்தித்தவர்களை ஈர்த்தது அதுவரை காபாவின் அடிமை(அப்துல் காபா)வாக இருந்த ஹழ்ரத் அபூபக்கர்(ரழி )அவர்கள்  ஆண்டவனின் அடிமை (அப்துல்லாஹ் ) என்று நபி அவர்களால்  பெயர் மாறினார்கள்.அது போல அப்துஷ்ஷம்ஸ்(சூரியனின் அடிமை )ஆக இருந்த ஹழ்ரத் அபூஹுரைரா(ரழி)அவர்களும்   அப்துல்லா ஆனார்கள் இப்படி பலர் தங்களது இழிந்த அடிமைத்தழைகளை உடைத்தெறிந்து இறைவனின் அடிமைகள் என்ற உயர்ந்த ஸ்தானத்தை அடைந்தார்கள்
இஸ்லாம் மனிதனின் அந்தஸ்து ஆண்டவனின் அடிமை என்பதில்தான் உயருகிறதே அல்லாது பணத்திலோ பதவிகளிலோஅல்லது இன்னொரு பணக்காரனை துதி பாடுவதிலோ  இல்லை என உறுதி படக்கூறுகிறது
அதனால்தான் உயர்ந்த குலத்திலும் அந்தஸ்திலும் பிறந்த முகமது நபி அவர்கள் தன் வாழ்வை எளிமையாகவே அமைத்துக்கொண்டார்கள்.தன்னை இறைவனின் தூதர் என்பதை விட இறைவனின் அடியான் என்பதையே பிராதானப்படுத்தினார்கள்.இன்றும் ஒரு முஸ்லிம் முஹம்மத் என்ற பெயரை சொல்லும்போது கூடவே அப்துஹு (அவர் ஆண்டவனின் அடிமை)வ ரசூலுஹு (மேலும் அவனது தூதர்)என்றுதான் கூறுவான் அப்படித்தான் இஸ்லாமும் பணிக்கிறது .
தனது மரணத்திற்கு பிறகு தன்னை இறைவனின் அந்தஸ்த்திற்கு உயத்திவிடுவார்களோ என்று கவலைப்பட்டார் அவர்.அதை அவர் மரண தருவாயில் வெளிப்படுத்தினார் .என் மரணத்திற்கு பின் என் உடலை பொது அடக்கஸ்தலத்தில் அடக்கவேண்டாம் என்றார்.தன் வீட்டிலேயே அடக்கும் படி கூறினார் தன் அடக்கஸ்தலத்தை தரிசிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் யாரும் மதீனாவிற்கு வர வேண்டாம் என்றார் வேறு காரியங்களுக்காக வந்தால் தன் அடக்கஸ்தலம் வந்து தனக்காக இறைவனை பிரார்த்திக்கும்படி கூறினார் நான் தேவை உடையவனாக இருக்கிறேன் இறைவன் தேவைகளுக்கு அப்பாற்பட்டவன்  எனவே கொண்டாட்டங்களும் வணக்க வழிபாடுகளும் இறைவனுக்கு மட்டுமே என் அடக்கஸ்தலத்தில் அதெல்லாம் கூடாது என்றார்.
தனி மனித வழிபாடுகள் இறைவனை மறக்கடிப்பவை யாராக இருந்தாலும் பெற்றோர்கள்  மகான்கள்,பாபாக்கள்   அல்லது இறைத்தூதர்களாகவே இருந்தாலும் அவர்கள் எல்லோரும் மரியாதைக்கு உரியவர்களேயன்றி வணக்கத்திற்குரியவர்கள் அல்லர் என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது.
ஆனால் இன்று பெரும்பாலோர் மரியாதையையும் வணக்கத்தையும்  ஒன்றாகவே  நினைத்து குழப்பிக்கொள்கிறார்கள் அதனால்தான் ஆன்மிகம் என்ற பெயரில் இன்று அனாச்சாரங்கள் தொடர்கின்றன.முஸ்லிம்களிடத்திலும் தர்கா என்ற பெயரில் இந்த குழப்பத்தினால்தான் அனாச்சாரம் தொடர்கிறது மரியாதைக்கும் வணக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை மனிதப்புனிதரான  முஹம்மது நபியவர்கள் துல்லியமாக தெளிவுபடுத்தினார்கள்.ஒரு சம்பவத்தின் போது தன் வருகைக்காக எழுந்து மரியாதை செலுத்தப்போன தன் தோழர் ஒருவரை அவர் எழுவதற்கு முன்பே தோளில் கைவைத்து உட்காரவைத்துவிட்டு சொன்னார்கள் எனக்காகவும் சரி யாருடைய வருகைக்காகவும் சரி எழுந்து நின்று மரியாதை செய்யவேண்டாம் உட்கார்ந்த நிலையிலேயே என்னுடைய  சலாமுக்கு பதில் கூறி மரியாதை செலுத்துங்கள் ஏனென்றால் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது என்பது  ஒரு அடிமை தன்  எஜமானுக்கு செய்யும் வணக்கமாகும் அதை ஆண்டவனுக்கு மட்டுமே செலுத்தவேண்டும் என்றார்கள்.
உண்மையில் வணக்கம் என்பது ஒரு விசேஷ மரியாதை ஆகும் அது ஒருதலை பட்சமாக்கும் நாம் யாருக்கு வணக்கம் செலுத்துகிறோமோ அவர் திருப்பி நம்மை வணங்க மாட்டார் என்பது மரபு இது ஒரு அடிமை எஜமானுக்கு
செலுத்துவது இதில் எழுந்து நிற்பது குனிந்து நிற்பது தரையில் குனிந்து தலைவைத்து சாஷ்ட்டாங்கம் செய்வது இரு கையேந்தி பிரார்த்திப்பது இன்னும் சில சைகைகள் உதாரணமாக கைகூப்புவது இப்படி மனதில் வணக்கம் என்ற எண்ணத்துடன் மதவேறுபாடு இல்லாமல் செய்யப்படக்கூடிய அத்தனை அசைவுகளும் வணக்கமாகும் என்றால் அதற்க்கு தகுதி உடையவன் நம்மை படைத்த இறைவனே அன்றி வேறு யாரும் இல்லை என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.
ஆனால் மரியாதை என்பது கொடுத்து வாங்குவது.அது இருதலை பட்சமாக்கும் ஒருவருக்கு நாம் மரியாதை செலுத்தினால்  அவர் நம்மை திருப்பி மதிப்பவராக இருக்க வேண்டும் நம்மை மதிக்காதவரை நாம் மதிக்க வேண்டியதில்லை அதனால்தான் இஸ்லாம் ஒருவர் நமக்கு சலாம் சொன்னால் அதற்க்கு பதில் கூறுவதை சட்டமாகவே ஆக்கி இருக்கிறது இந்த பிரபஞ்சமும் அதில் உள்ளவைகளும் பெருமைக்குரிய இறைவனின் படைப்புகளாகும் அவை அத்தனையும் மரியாதைக்குரியவையே.பன்றி அசுத்தமான பிராணி.முஸ்லிம்களை  அதனிடமிருந்து விலகி இருக்கும்படி இஸ்லாம் கூறுகிறது அதற்காக அதை அவமதிப்பதற்கோ ,இம்சை செய்வதற்கோ  எவருக்கும் இஸ்லாம் அதிகாரம் தரவில்லை.
பெற்றோர்களை பிள்ளைகள் மதிக்க வேண்டும்  அது போல் பிள்ளைகள் பெற்றோரை மதிக்கவேண்டும் ஆசிரியரை மாணவன் மதிக்கவேண்டு அதுபோல் மாணவனை ஆசிரியர்  மதிக்க வேண்டும் இப்படி ஒருவருக்கொருவர் மதிக்கவேண்டும் என்கிறது இஸ்லாம் ஆனால் அதே நேரத்தில் நம் பெற்றோரோ அல்லது நம் கருத்தை கவர்ந்த பெரியோர்களோ  மரணித்துவிட்டால் என்ன செய்வது எப்படி மரியாதை செலுத்துவது.அதற்கும் இஸ்லாம் அழகான வழிகாட்டுதலை சொல்லுகிறது அது அவர் சொல்லித்தந்த நடை முறைப்படுத்தி சென்ற நல்வழியை நாமும் பின்பற்றி பிறருக்கும் போதிப்பதாகும் இன்னும் அவருக்காக இறைவனை பிரார்த்திப்பதாகும்.

இன்று நம்மில் பலர் இறந்தவர்களுக்கு மரியாதை செய்கிறோம் என்ற பெயரில் அவர்களது அடக்கஸ்தலம் சென்று அவர்களது சமாதிகளை அலங்கரித்து சந்தனம் பூசி சாம்பிராணி போட்டு பூத்தொடுத்து பூஜை செய்கிறார்கள்.முஸ்லிம் அல்லாத சிலர் அவர்களின் உருவங்களை சிலையாக வடித்து பூஜை செய்கிறார்கள் இவை அனைத்துமே அவர்களை அவமானப்படுத்துமே அன்றி வேறில்லை.நாமே நம் எதிரில் நமக்கு இப்படி ஒரு மரியாதை தரப்பட்டால் வெட்கி தலை குனிவோமேயன்றி அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
ஷீரடி சாய் பாபாவை முஸ்லிம் ஹிந்து என்று பாராமல் அனைவரும் சென்று வழிபடுகின்றனர்.ஏன் என்று கேட்டால் ஒரு முஸ்லிம் அவர் ஒரு சூபி என்கிறார்.இந்த அரபு வார்த்தைக்கு பஞ்சு அல்லது கம்பளி என்றே அர்த்தம்.இந்த மகான்கள் ஒரு கம்பளியை தங்கள் மேனியில் போர்த்தி கொண்டிருப்பார்கள்.எனிவே அந்தப்பெயர் மற்றபடி ஆன்மிக ரீதியில் வேறு எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை பிறகு சூபிஸம் என்ற பெயரில் இவர்கள் ஒரு தெளிவற்ற ஆன்மிகத்தை போதித்தார்கள்.கிட்டத்தட்ட அது இந்து மதத்தில் காலடி சங்கராச்சாரியார் பெவ்த்தர்களுக்கு எதிராக இந்து மதத்தில் புகுத்திய அத்வைதத்தை ஒத்திருந்தது.காண்பதெல்லாம் கடவுள்.இதற்கு எல்லாம் மேலே பாஸ்ராவில் கிபி 9-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சூபி மன்சூர் ஹல்லாஜி நானே கடவுளாக இருக்கிறேன் என்றார்.
ஷிர்டி சாய் பாபாவின் இயற்ப்பெயர் அப்துல் கரீம் இவரது போதனைகள், எல்லாமே அழிந்து போகும் அவற்றில்  ஆசை கொள்ளாதே உன் அனைத்தையும் அந்த சர்குருவிற்க்கே முர்ஷித் )அர்ப்பணம் செய் என்றார்.மேலும் எல்லோருக்கும் ஒரே கடவுள் என்றார் எப்போதும் அல்லாஹ் மாலிக் என்றார் இவர் வசித்த வீட்டை துவாரகமாயி என்ற பெயரில் மஸ்ஜித் ஆக கருதி இஸ்லாமிய தொழுகைகளை நடத்தினார்.இப்படித்தான் இவர் பற்றி எழுதி இருக்கிறார்கள்.ஆனால் இவரது உருவ அமைப்பு இவரை சிலை வைத்து பூஜை செய்வது விபூதி பட்டையுடன் காணப்படுவது "என்னில் இறைவனை பார் உன்னில் நான் இறைவனை பார்க்கிறேன் "என்ற கோட்பாடு இவை அனைத்தும் ஒரே குழப்பமாகவே இருக்கின்றன இருந்தாலும் இவருக்கு சிலைவைத்தும் உருவப்படங்கள் வைத்தும் கடவுளுக்கு செய்ய வேண்டிய அத்தனை பூஜை புனஸ்காரங்களும் ஷீரடியில் மட்டுமல்ல உலகம் முழுக்க சாய் பக்த்தர்கள் படித்தவர் படிக்காதவர் என அனைவரும் செய்கின்றனர்.அந்த பூஜை நிகழ்ச்சியில் சாய் பாபாவின் sab ka maalik eki hai(அனைவருக்கும் இறைவன் ஒருவன்தான்),Allah Malik!Allah Malik!!இறைவனே என் எஜமான்! இறைவனே என் எஜமான்!!)என்ற போதனைகள் எல்லாம் பூஜை தீபத்தில் சாம்பலாக்கப்படுகின்றன.அப்துல் கரீம் என்ற சாய் பாபாவின் பெயர் கூட இறைவனின் அடிமை என்றே பொருள் படும் இதை சாய் பாபா பக்தர்கள் சிந்திக்க வேண்டும்.அரை நிர்வாண பக்கிரி போன்ற அவரது உருவம் கூட இது அவர்தானா என்று ஐயுற வைக்கிறது துவாரகமாய் இல் இறைவனை ஐந்து  நேரம் தொழக்கூடிய அப்துல் கரீம் மாதிரி அது இல்லை.படைத்த இறைவனை விட்டு விட்டு அவனது அடிமையை வணங்குவது என்ன அறிவுடைமை? இறைவனை பார்க்க முடியவில்லை அதனால்தான் பாபாவில் அவனை காண்கிறோம் எனவே அவரை பூஜிக்கிறோம் என்பவர்களிடம் ஒரு கேள்வி அப்படியானால் பாபா துவாரக மாயயில் எதைப்பார்த்து வணங்கினார்.யாரை பார்த்து வணங்கினார்.?
 புட்டபர்த்தி சாய்பாபா! இவரின் இயற்பெயர் சத்திய நாராயண ராஜு பிறப்பு 1926ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி   தன்னை ஷிர்டி சாய் பாபாவின் மறுபிறவி  என்றார்.சாய் என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் ஏழை என்றாலும் பன்ஜார மொழியில் மகான் என்ற அர்த்தம் வரும் எது எப்படியோ   இவரது பிரஷாந்தி பவனும் யஜூர் மண்டபமும் பொன்னும் பொருளும் உருளக்கூடிய  சொர்க்க பூமியாகத்தான் இருக்கிறது.இவர்  காரிலும் விமானத்திலுமே பறந்த  ஒரு பரம ஏழை.இவர் காட்டிய வித்தைகள் ஒரு கண்கட்டி   வித்தைகள் போல் இருந்தாலும் படித்தவன் முதல் பாமரன் வரை இவரின்  கண்கட்டி வித்தைகளில் மயங்கி இவரில் இறைவனை   பார்க்கின்றனர்.தங்களின் வீடுகளில் இவருக்கென்று ஒரு பூஜை அறை  அதில் 15 அடி உயரத்தில் இவரது படத்தை வைத்து பூஜிக்கின்றனர்.
ஒரு சாய் பக்தர்,என் நண்பர் ஏன் என் உடன்பிறவா சகோதரர் என்றும் கூட சொல்லலாம்.அந்த அளவு என் மீது பிரியமும் அன்பும் பாராட்டியவர்.பலருக்கும் உதவி செய்யக்கூடிய நல்ல மனசு உள்ளவர்.அபுதாபியில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்.ஒரு சந்தர்ப்பத்தின் போ து அவரிடம் கேட்டேன் சாய்பாபா  யார், இறைவனா? என்று.இல்லை இல்லை  இறைவன் இல்லை என்றார். பின்னே ஏன் அவர் உருவத்தை தொழுகிறீர்கள் ?என்றேன்  கொஞ்சம் தயங்கி இறைவனின் தூதர் என்றார்.நான் மீண்டும் கேட்டேன்.அவர் கொண்டுவந்த இறை தூது என்ன?என்று மீண்டும் சிறிது தயங்கி  அது ...நீ என்னில் இறைவனை பார் நான் உன்னில் இறைவனை பார்க்கிறேன் என்பது. என்றார்.பிறகு அவருடன் இருந்த இன்னொரு சாய் பக்தர் ஷிர்டி சாய் பாபா எப்போதும் அல்லா மாலிக் என்றே கூறுவார் என்றார்.நான் உடனே இருங்கள் இருங்கள் புட்ட பர்த்தி சாய் பாபா அதை ஆமோதித்தாரா?என்றேன்.மவுனம் தான் பதில் .இதற்க்கு பிறகு அந்த விவாதம் தொடர நேரமும் சந்தர்ப்பமும் இடமளிக்கவில்லை .ஆனால் அவர் கொடுத்த இந்த தகவலை வைத்து  தன் சொந்த காரியங்களில் தான் முழு கவனத்தையும் செலுத்திய அவர் ஆன்மிகத்தில் எவ்வளவு கவனக்குறைவாக இருந்திருக்கிறார் என்பது விளங்குகிறது
முதலாவது சாய் பாவில் இறைவனைக்காண கோடி பக்தர்கள் அவரை அவர் உருவத்தை பூஜை செய்கிறார்கள் ஆனால் அதே சாய் பாபா இவர்களை ஒரு போதும்பூஜை பண்ண வில்லை மாறாக அவர் தனிமையில் பிரஷாந்தி மண்டபத்தில் கதவை தாழிட்டுக்கொண்டு தனிமையைத்தான் பூஜை பண்ணினார்.ஆக அவரே அவருக்கு வந்த "உன்னில் இறைவனை நான் காண்கிறேன் என்னில் இறைவனை நீ பார்"என்ற இறை தூதை சரியாக பின்பற்றவில்லை.அவர் கடவுளாகவோ தெய்வ அந்தஸ்தோ பெற்ற வராகத்தான் சாய் பக்தர்கள் அவரை பூஜிக்கிறார்கள் .இன்னமும் பூஜிக்கிறார்கள்.அவரை இறைவனின் அவதாரமாகவே கருதுவதாக கூறுகிறார்கள்.இதில் படித்தவர்களும் வல்லுனர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது ஏன் இவர்கள் தங்கள் சொந்த காரியங்களில் தங்கள் துறை சார்ந்த ஆய்வுகளில் பொருளாதார வரவு செலவுகளில் கொடுக்கல் வாங்கல்களில் குடும்ப காரியங்களில் எல்லாம் மிகவும் கவனமாகவும் கண்கொத்தி பாம்பாகவும் இருக்க கூடிய இந்த படித்தவர்கள் பணக்காரர்கள் ஏன் இந்த அர்த்தமற்ற  வெறும் கவர்ச்சியும்  வெறும் வித்தை ஜாலங்களும் கொண்ட அநாச்சாரத்தில் மயங்குகிறார்கள் என்றால் மற்ற சொந்த காரியங்களில் லாப நஷ்டம் இருக்கிறது எனவே அது வேறு ஆனால் இதில் விளம்பரம் இருக்கிறது எனவே இது வேறு.
அவர்கள் பெரும் பணக்காரர்கள் உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் இவர்கள்தான்  சாய் பக்தர்கள்.சாய் பாபாதான் எங்களின் ஆத்மா வழிகாட்டி பாபாவை நாங்கள் சரணடைந்தோம் பாபா ஸ்தூல உடலைவிட்டு நீங்கி ஆன்ம உலகுக்கு  ஏகினாலும் அவர் இறக்கவில்லை.இறப்பு அவருக்கு கிடையாது என்று இவர்கள் தங்களை தாங்களே வெறும் விளம்பரத்திற்காக கூறி ஏமாற்றி கொள்ளும் அதே நேரம் இவர்களது உத்தியோகம் குடும்பம் வியாபார கொடுக்கல் வாங்கல்கள் இன்னும் இத்யாதி  இத்யாதி சொந்த  காரியங்களில் இழப்போ நஷ்ட்டமோ ஏற்ப்படும் வகையில் எதோ ஒரு கட்டளையை பாபா நேரிலோ அல்லது கனவிலோ வந்து இட்டால் போதும் பதுங்கி கொள்வார்கள்.இரண்டு  சாய்பாபாகளும் இப்போது   இல்லை.இருந்த போது அவரகளை இறைவனாக கருதவில்லை அவர்களில் இறைவனை காண்பதாக கூறிய சாய் பக்தர்கள் இப்போது அவர்கள் இறந்த பிறகு  அவர்களையே  இறைவனாக(பகவானாகவே)கும்பிடுகின்றனர்.எனவே இது ஒரு முறண்பட்ட நிலை. குழப்பம்.
புட்டபர்த்தி சாய்பாபா பக்தர்கள்   மில்லியன் பில்லியன் கணக்கில் காணிக்கைகளை பணமாகவும் பொருளாகவும் கொண்டுபோய் பாபாவின் காலடியில் கொட்டினார்கள்.உலக  பொன்னாசை,பொருளாசை மண்ணாசை பெண்ணாசை இன்னும் இத்யாதி ஆசைகளை துறந்து விடுமாறு பக்தர்களுக்கு போதித்த பாபா பெருந்தன்மையுடன் காணிக்கைகளை பெற்றுக்கொண்டார் பதிலுக்கு விபூதி,கடிகாரம்,மோதிரம்,நெக்லஸ் இவற்றை அற்புதமாக வரவழைத்து பக்தர்களுக்கு பரிசளித்தார் ஆசைகளை துறந்த பக்தர்களும் பரவசத்துடன் அவற்றை பெற்று  கண்களில் ஒற்றிக்கொண்டனர் பாபா அற்புதமாக வரவழைத்த பரிசல்லவா அது ஆயிரம் பில்லியன்களுக்கும் மேலானது.பில்லியன்களில் இருந்து சில மில்லியன்களை செலவுபண்ணி சில நல்ல காரியங்களையும் பாபா செய்தார் ஆனால் பெரும்பகுதியை தனக்கென்று யஜூர் மண்டபத்தில் தக்க வைத்துக்கொண்டது அவர் இறந்த பிறகு அம்பலமாயிற்று
இதில் ஒவ்வொரு சாய்பாபா பூஜைகளும் மிகவும் பிரம்மாண்டமாக உருக்கமான பாடல்களுடன் தடா புடலாக இருக்கும் ஆனால் படைத்த இறைவனை பற்றி கிஞ்சிற்றும் எண்ணம் இருக்காது.பகவான் சாய் பாபா அவர் வாழ்ந்த நாளில் அப்படி என்ன இறைத்தன்மையை காட்டினார் கண் கட்டி வித்தைகள் போல சில அர்ப்புதன்களை காட்டிவிட்டால் பகவான் ஆகிவிட முடியுமா.அவர் வாழ்நாளில் ஒரு கொசு ஈயை கூட அவர் படைத்திருப்பாரா?உண்பது, உடுத்துவது, உறங்குவது,கழிப்பது என்று குறைந்த பட்ச தேவைகளாவது இல்லாதிருந்திருப்பாரா?சொல்லப்போனால் மற்றவர்களை விட இன்னும் அதிக பொருளா சையுள்ளவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.அவரது யஜூர் மண்டபமும் அதில் அவர் சேமித்த பொருளாதாரமுமே சான்று.இறைவனை பற்றி  இஸ்லாம் என்ன சொல்கிறதென்று பாருங்கள் "1.நபியே சொல்லுங்கள்,அவன் இறைவன் அஹத் ஆக இருக்கின்றான்(அஹத் என்ற இந்த வார்த்தைக்கு ஒருவன்,தனித்தவன்,தனியாக எதையும் செய்ய வல்லவன்,பிடிக்கக்கூடியவன்);2.இறைவன் தேவைகளுக்கு அப்பாற்பட்டவன் (அண்ட சராசரங்கள் எல்லாம் அவனுக்கே சொந்தம்.எனவே அவன் எதைக் கொண்டும் யாரைக்கொண்டும் எந்தத்தேவையும் அற்றவன்.ஆனால் எல்லோருக்கும் அவன் தேவை);3.அவன் யாரையும் பெறவில்லை;4.யாராலும் பெறப்படவும் இல்லை;5.எதுவுமே அவனுக்கு நிகரானது அல்ல (அத்தியாயம் -112-அல் இக்லாஸ் -நன்னம்பிக்கை -அல் குர் ஆன் ) உண்மையில் சாய் பாபா போன்ற தனி மனிதர்களை வழிபடுகிறவர்கள் சிந்தி க்கவேண்டும் நீங்கள் வழிபடு பாபா மேலே குர் ஆன் கூறும் இலக்கணத்திற்கு உட்பட்டவர்தானாஎன்று 
 (முற்றும்)
அடுத்த தலைப்பு அற்புதங்கள் ஆன்மீகமாகுமா?
இன்ஷா அல்லாஹ் மேற்கூறிய தலைப்பில் மீண்டும் தொடர்வோம்

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...