மனச்சோர்வும் பார்க்கின்சன் நோயும் (PD )
இந்த பதிவு இதற்கு முன் தரப்பட்ட மனச்சோர்வு நோய் சிகிச்சையின் மூன்றாவது பதிவாக இருந்தாலும் இதில் கூடுதலாக பார்க்கின்சன் நோய் பற்றியும் விவரம் தரவேண்டியது முக்கியமாகிறது.
மனச்சோர்வு மனஉளைச்சல் மனஅழுத்தம் இவற்றின் உச்சகட்ட தாக்குதலாக உண்டாவதுதான் பார்க்கின்சன் வியாதி என்றால் அது மிகையல்ல. ஏனென்றால் இந்த மூளை சிதைவு நோய் தேவையற்ற கவலைகளினால் அடிக்கடி மனச்சோர்வுக்கு ஆளாவதாலும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
MAO (மோனோ அமைன் ஆக்சிடேஸ்)
மோனோஅமைன் ஆக்சிடேஸ் (MAO; EC 1.4.3.4.) என்பது பரவலாகஉடல் முழுவதும் செல்களுக்குள் பொதிந்திருக்கும் ஒரு மைட்டோகாண்ட்ரியல் என்சைம் தொகுப்பு ஆகும், இது இரைப்பை-குடல் மற்றும் கல்லீரல் மற்றும் நரம்பணு திசுக்களில் அதிக வெளிப்பாடு அளவைக் கொண்டுள்ளது. இந்த நொதி பல்வேறு வகையான மோனோஅமைன்களின் ஆக்ஸிஜனேற்ற அமினோ சிதைவை ஊக்குவிக்கிறது, இது எண்டோஜெனஸ் (உடலுக்குள்ளேயே உற்பத்தி ஆகிற)மற்றும் எக்ஸோஜெனஸ் (வெளியிலிருந்து உடலுக்கு மருந்தாக தரக்கூடிய) எந்த ஒரு மோனோ அமைனையும் சிதைத்து விடும் ஆற்றல் கொண்டது.
நரம்புகளுக்கு இடையில் செய்தி பரிமாற்றங்களுக்காக வெளியிடப்படும் மோனோ அமைன்களான நார் அட்ரீனலின்,டோப்பமின் மற்றும் செரோட்டோனின் போன்ற நரம்பு ஊக்கிகளை சிதைத்து செயலற்றதாக்கிவிடும் தன்மை கொண்டதாக இது இருப்பதால் இந்த நொதியை முடக்கி பார்க்கின்சன் போன்ற நரம்பு சிதைவு மற்றும் மனச் சோர்வு நோய்களுக்கு தயாரிக்கப்பட்டிருக்கும் மருந்துகள்தான் MAOI எனப்படும் மோனோ அமைன் ஆக்சிடேஸ் முடக்கிகள் ஆகும்.
மோனோ அமைன் ஆக்சிடேஸ் முடக்கிகள் (MAOIs):-
இந்த MAOI நொதி முடக்கிகள் இரு வகைப்படும். அவை MAOI-A மற்றும் MAOI-B ஆகும்.
MAO-A மற்றும் MAO-B தடுப்பான்கள் முறையே மனநல மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு (பார்க்கின்சன் நோய்) சிகிச்சையளிக்க மருத்துவ பயன்பாட்டில் உள்ளன.
இந்த நொதிகளின் மூலக்கூறுகளின் செயல் திறன் பகுதிகளை பற்றிய ஆய்வு களில் ஏற்பட்ட தெளிவு இந்த நொதிகளை முடக்குவதற்கு புது புது நொதிமுடக்கிகளை உருவாக்க வழி ஏற்படுத்தியது.
எனினும் இந்த நொதி முடக்கிகளில் பெரும்பாலானவை திருப்பமுடியாத (irreversible) செயல் திறன் கொண்டவையாகும். இவை மிகவும் உறுதியான செயல் கொண்டவையாக இருப்பினும் இவற்றின் பின்விளைவுகளும் மிகவும் கடுமையானவை. எனவே மனச்சோர்வுக்காகவேண்டி இந்த மருந்துகளை டாக்டர்கள் இப்போது அதிகம் பரிந்துரைப்பதில்லை. ஆயினும் இன்னும் குறிப்பாக பார்க்கின்சன் நோய்க்காக இவை உபயோகத்தில் இருக்கின்றன. உதாரணம் செலெஜிலின் (Selegiline) மற்றும் ரஸாஜிலின் (Rasagiline).
இவற்றின் பின்விளைவுகளில் மிக முக்கியமானது பாற்கட்டி விளைவு
(CHEESE EFFECT). இந்த மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் தைராமின் (tyramine) என்ற அமினோஅமிலக்கழிவு இருக்கக்கூடிய கீழ்கண்ட உணவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு இதய பாதிப்பு தலைவலி போன்ற குழப்பங்கள் உண்டாகலாம். அப்படியே சாப்பிட வேண்டும் என்றாலும் இந்த மருந்து சாப்பிட்ட சில மணி நேரங்கள் கழித்து சாப்பிடலாம். இருப்பினும் டாக்டரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.
டைரமின் உணவுகள்:-
1.நாட்பட்ட சேமித்து வைக்கப்பட்ட புரத உணவுகள் (உம்) சீஸ்கட்டி, மாமிசம்
2.சாக்லேட்
3.சிட்ரஸ் பழங்கள், சேமித்து வைக்கப்பட்ட அவோகாடோ (ஆனை கொய்யா), வாழைப்பழம், பேரீச்சை உலர்திராட்சை போன்ற பழ வகைகள் .
4.ஊறுகாய்கள்
5.ஊறவைக்கப்ட்ட திராட்சைகளில் உருவான ஒயின்.
சாக்லேட் போன்ற இனிப்புகளில் டைரமின் மட்டுமல்ல நாரட்ரீனலின் செரடோனின் போன்ற பொருட்களும் இருக்கின்றன.இவை அனைத்துமே MAOI மருந்துகளுடன் சேர்ந்து சாப்பிட்டால் அட்ரீனர்ஜிக் குழப்பம் (Adrenergic or Hypertensive Crisis) என்ற ஒரு ஆபத்தான நிலை உருவாகலாம்.
MAO நொதிகள் பொதுவாக கீழ்கண்டவாறு கிரியை புரிந்து தனது விளைவுகளை வெளிப்படுத்துகின்றன.
1 2 3 1A 2A 3A
RCH2-NH2 +O2+H2O ⟶RCHO +NH3↑+H2O2
MAOs ↑
மேலே கண்ட அந்த வேதி சமன்பாட்டை கீழ்க்கண்டவாறு விளங்கலாம்.
1.ஒரு மோனோ அமைன்
2.ஆக்சிஜன் .
3.தண்ணீர்
MAO↑ ஆக்ஸீகரண கிரியைக்கு பின் (⟶)
1A. ஓர் ஆல்டிஹைடு (நச்சு)
2A. அம்மோனியா (நச்சு)
3.A ஹைட்ரஜன் பெராக்ஸைடு (நச்சு)
மேல்கண்ட அத்தனை நச்சுக்களும் MAO ஆக்ஸீகாரணத்தால் உண்டாகிறது. இந்த நிலை கடும் மன உளைச்சல் மனச்சோர்வு போன்ற நோய் நிலைகளில் ஏற்படுகிறது. சாதாரண ஆரோக்கிய நிலையில் MAO நொதியினால் உண்டாகும் ஆல்டிஹைடு மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆக்ஸீகரண நச்சுக்களை நம் உடல் ஆல்டிஹைடு டீ ஹைட்ரொஜெனேஸ், கேட்டாலேஸ் (Catalase) மற்றும் சூப்பராக்ஸைடு டிஸ்மியூட்டேஸ் (Superoxide Dismutase) போன்ற நொதிகளின் மூலம் மேலும் சிதைத்து ஆபத்தற்ற கழிவுகளாக வெளியேற்றிவிடும். ஆனால் இந்த கட்டமைப்பு அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாகும் போது குலைந்து பார்க்கின்சன் மற்றும் மனச்சோர்வு நோய்களை கொண்டுவருகிறது.
மனச்சோர்வுக்கான MAO முடக்கிகள்
இந்த மோனோ அமைன் ஆக்சிடேஸ் நொதிகள் MAO-A மற்றும் MAO-B என்று இருவகைப்படும். இதில் MAO-A மனச்சோர்வை (DEPRESSION) உண்டாக்கும். இது பெரும்பாலும் நரம்பு ஊக்கிகளான நார்-அட்ரீனலின்,செரோடோனின் போன்ற மோனோ அமைன்களை குறி வைத்து சிதைத்து மனச்சோர்வை உண்டாக்குகிறது. இந்த நொதியை முடக்கி கீழ்கண்ட மருந்துகள் மனச்சோர்வை போக்குகின்றன.ஆனால் இவற்றை டாக்டரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடக்கூடாது.அவை
1.Isocarboxazid- (Marplan)-Nonselective & Irreversible
2.Phenelzine - (Nardil)-- do-
3.Selegiline - (Selgin)-Irreversible & MAO-B-I
4.Rasagiline - -do-
5.Safinamide - -Reversible & MAO-B-I
6.Moclobemide - -Reversible & MAO-A -I
மேலே குறிப்பிட்ட மருந்துகளில் Non-selective & Irreversible என்றால் இவை MAO-A & B இரண்டையுமே மீள முடியாமல் முடக்கும் ஆற்றல் கொண்டவை.எனவே இவை மிகவும் வலிமையானவை மட்டுமல்லாது அதிக பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. எனவே டாக்டர்கள் இதை அதிகம் பரிந்துரைப்பதில்லை
.Selective & Irreversible என்றால் இவை MAO-A அல்லது B ஏதாவது ஒன்றை மீட்டமுடியாமல் முடக்கும். முன்னதை விட ஓரளவு பாதுகாப்பானவை. இதில் selegiline, rasagiline ஆகியவை அடங்கும். இவை பார்க்கின்சன் வியாதிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
Selective & Reversible என்றால் MAO-A அல்லது B ஏதாவது ஒன்றை மீளக்கூடிய வகையில் முடக்கும்.
இவை பாதுகாப்பானவை எனினும் செயல் திறன் குறைவானவை. இந்த வகையில் புது மருந்தான safinamide ம் moclobemide -ம் இருக்கின்றன. இதில் safinamide பார்க்கின்சன் வியாதிக்கும் மற்றது மனச்சோர்வுக்கும் பயனாகின்றன.
பொதுவாகவே பார்க்கின்சன் வியாதிக்கு MAO -B முடக்கிகளே பயன்படுத்தப்படுகின்றன. காரணம் MAO-B தான் பெரும்பாலும் டோப்பமினை சிதைக்கிறது.
பார்க்கின்சன் வியாதியும் டோப்பமினும்:-
பார்க்கின்சன் வியாதியின் அடிப்படை நமது புத்திசாலித்தனம்,நினையாற்றல் ஸ்திரதன்மை இவற்றின் இருப்பிடமான முன்மூளையின் மையத்தில் அமைந்துள்ள அடிப்படை மூளை மையக்கரு வான பேசல் கேங்கிலியா (Basal Ganglia) ஆகும் . இந்த இடம் பாதிக்கப்படும் போதுதான் பார்க்கின்சன்,அல்ஜெய்மர் போன்ற வியாதிகள் உண்டாகின்றன.
மேலே உள்ள படங்களில் பேசல் கேங்கிலியாவும் அதன் ஒரு பகுதியான வரியமைவு சுரப்பியான ஸ்ட்ரியேட்டம் (Striatum) சுரப்பி ஆகும். இங்கு தான் மனிதனின் ஸ்திரத்தன்மை, ஒழுங்கு படுத்தப்பட்ட அசைவுகள்,உதாரணமாக நிற்றல் நடத்தல்,அமர்தல்,பிறருக்கு பதிலளிக்கும் வகையில் அசைதல் முகபாவனை மூலம் பதிலளித்தல்,நினைவாற்றல், புத்திசாலித்தனம், அறிவுசார் திறமைகள் போன்றவை பொதிந்திருக்கின்றன. குறிப்பாக மனிதனின் பகுத்தறிவு மூளையின் இந்த பகுதியில்தான் இருக்கிறது.
![]() |
டோப்பமின் Vs காபா |
இந்த இடம் பாதிக்கப்பட்டால் மேலே குறிப்பிடப்பட்ட அத்தனையும் சிதறுண்டு போகும்.
உதாரணமாக அதிக டோப்பமின் சுரப்பினால் இது பாதிக்கப்பட்டால் மனவெறி நோய் (Schezophrenia) உண்டாகும். டோப்பமின் சுரப்பு குறைந்தால் பார்க்கின்சன் நோய் உண்டாகும்.(பார்க்க படங்கள் மேலே)
மேலே உள்ள படங்களில் கண்டபடி இந்த வரியமைவு சுரப்பிக்கு கறுப்பு சுரப்பி (Substantia nigra) என்ற பகுதியிலிருந்து டோப்பமின் பாய்கிறது. படத்தில் இது பச்சை வளைந்த அம்புகுறியிட்டு காட்டப்பட்டு இருக்கிறது. தனக்கு தேவையான டோப்பமின் கிடைத்தவுடன் வரியமைவு சுரப்பி காபாவை சுரந்து அதை கட்டுப்படுத்துகிறது. இது சிவப்பு வளைந்த அம்புக்குறி மூலம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த சமன்பாடு மன அழுத்தம் மனச்சோர்வு போன்றவைகளால் சீர்குலையும் போதுதான் பார்க்கின்சன் அறிகுறிகள் தோன்ற தொடங்குகின்றன.
பார்க்கின்சன் நோய் பற்றி தொடர்ந்து படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.