மருந்துகளும் பக்கவிளைவுகளும்
அனைத்து மருந்துகளுமே தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மருந்துகளில் டாக்டர் சீட்டு மருந்துகள் , கவுண்டர்களில் நேரடியாக கிடைக்கும் மருந்துகள் மற்றும் மேலதிக மருந்துகள் (மூலிகை தயாரிப்புகள் மற்றும் வைட்டமின்கள்) ஆகியவை அடங்கும்.
மருந்துகளின் லேபிளில் உள்ள பார்முலா பொருட்கள் ஒன்றோடு ஒன்று ‘மோதலாம்’. எனவே, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை உட்கொள்வது பக்கவிளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
பக்க விளைவுகள் உள்ளிட்ட மருந்துகளின் பிரச்சினைகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 230,000 ஆஸ்திரேலியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான பக்க விளைவுகளை நிர்வகிக்க முடியும், சில மிகவும் தீவிரமானவை மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடும்.
உங்கள் மருந்துகளை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது உங்கள் நலன்களுக்கு உகந்ததாகும்.
டாக்டர் சீட்டு மருந்துகள்
பொதுவாகவே எந்த ஒரு மருந்தும் டாக்டரின் பரிந்துரையின் பேரிலேயே வாங்க வேண்டும். சுய மருத்துவம் என்பது மிகவும் ஆபத்தானது. அதிலும் ஆல்கஹால் பயன்படுத்துபவர்கள் எந்த ஒரு மருந்தும் சுயமாக சாப்பிடக்கூடாது. ஏனென்றால் சில ஆண்டிபையாட்டிக்குகள் ஆல்கஹாலுடன் தேவையற்ற பக்க விளைவுகளை உண்டாக்கும்
விட்டமின்கள் மூலிகை மருந்துகள் உட்பட உணவுகள் மூலமன்றி கடை மருந்துகளாக கிடைக்கக்கூடிய அத்தனையுமே நச்சுக்கள் ஆகும். இரசாயணிகள் ஆகும்.
கீழ்கண்ட மருந்துகளை கண்டிப்பாக டாக்டர் சீட்டு இல்லாமல் சாப்பிடக்கூடாது.
1.ஆன்டிபயாட்டிக்குகள் (நுண்ணுயிர் எதிர்ப்பிகள்)
2.தூக்க மருந்துகள் (Anxiolytics)
4.மனவெறி மருந்துகள் (Antipsychotics)
உதாரணமாக, சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) மக்கள் தொகையில் ஐந்து சதவீதம் பேருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. தோல் தடிப்புகள் ஒரு பொதுவான எதிர்வினை. ஆனால், எதிர்வினை, மருந்து அல்லது நோயால் ஏற்படுகிறதா என்று சொல்வது எப்போதும் எளிதல்ல.
மேலும் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அவைகளுக்கு இடையிலும் மற்ற மருந்துகளுடனும் இடை எதிர்வினைகளை (Drug Interactions) ஏற்படுத்தும்.
உதாரணமாக தொண்டை கரகரப்பு, கபம் இருமல் என்று வந்துவிட்டாலே
அஜித்ரோமைசின் (Azithromycin) என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி டாக்டர் பரிந்துரையில்லாமலே சாப்பிடுவது இப்போது சர்வசாதாரணம் ஆகிவிட்டது. இந்த அஜித்ரோமைசின் இதய நோய்க்கு சாப்பிடக்கூடிய டிகாக்சின் (Digoxin) என்ற மருந்துடன் வேண்டாத இடைவினைகளை ஏற்படுத்தும். அதாவது இதய செயலிழப்பு ஏற்படலாம்.
பொட்டாசியம், மெக்னீசியம் குறைபாடு உடையவர்களும் C.Difficile என்ற தொற்றினால் உண்டாகும் கடும் வயிற்றுப்போக்கு உடையவர்களும் கண்டிப்பாக டாக்டரின் பரிந்துரை இல்லாமல் அஜித்ரோமைசினை எடுக்கக்கூடாது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அதிலும் குறிப்பாக எரித்ரோமைசின் அல்லது கிளாரித்ரோமைசின் எடுப்பவர்கள் பொதுவாகவே கீழ்கண்ட அலர்ஜி மருந்துகளை தவிர்த்துக்கொள்வது நல்லது.
1.டெர்பினாடின் (Terfenadine)
2.அஸ்டமிஜோல் (Astemizole)
3.கீட்டக்கோணஜோல் (Ketazole)
காரணம் இந்த கூட்டு இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இன்னும் பொதுவாக சிப்ரோபிளெக்சாசின் (Ciprofloxacin) ஒபிளெக்சாசின் (Ofloxacin) போன்ற அத்தனை பிளேக்சாசின் (Fluoroquinolones) மருந்துகளை டாக்டரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடவேண்டாம். உங்கள் சிறுநீரகங்களை அவை பாதிக்கும். ஸ்படிகசிறுநீர் (Crystalluria) வெளியாகும். கீழ்கண்ட மருந்துகளையும் அவற்றுடன் சாப்பிடாதீர்கள்.
1.ஆஸ்த்மா மருந்தான தியோபில்லின் (Theophylline)
2.மிகுயூரிகமிலம் மற்றும் கவ்ட் என்னும் மூட்டு வலிக்கு பயன்படுத்தப்படும் புரோபைனாசிட் (Probenecid) என்னும் மருந்து.
3.நீரிழிவு மருந்தான கிளிப்பின்க்ளாமைடு (Glibenclamide)
4.ஆஸ்பிரின் (Aspirin),டைக்லோபினாக் (Diclofenac),அஸெக்ளோபெனாக் (Aceclofenac), புரூபென் (Brufen),மற்றும் நெப்ரோக்ஸன் (Naproxen) போன்ற NSAID வலிமருந்துகள்
தூக்க மாத்திரைகள்-இடை எதிர்வினைகள் (Drug Interactions with Sleeping Aids):
தூக்க மாத்திரைகளை சர்வசாதாரணமாக விட்டமின் மாத்திரை மாதிரி மக்கள் இப்போது வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். எத்தனை ஆண்டுகள் பழைய டாக்டர் சீட்டாக இருந்தாலும் பரவாயில்லை. அதை காட்டினால் போதும். அது இல்லை என்றாலும் பரவயில்லை.பார்மசி கெளண்டர்களில் கிடைக்கிறது.
ஆல்ப்ரஜோலாம் (Alprazolam) தூக்க மாத்திரை சாப்பிடுபவர்களின் கவனத்திற்கு. அவர்கள் கீழ்கண்ட மருந்துகளை உடன் எடுப்பவர்களாக இருந்தால் பயங்கர மருந்துகள் இடைஎதிர்வினைகளுக்கு (Drugs Interactions) ஆளாக நேரிடும்.
1.வலிப்பு நோய்க்கு சாப்பிடக்கூடிய கார்ப்பமஜாபின் (Carbamazepin)
2.அல்சர் நோய்க்கு சாப்பிடக்கூடிய சிமெட்டிடின் (Cimetidine)
3.நுண்ணுயிர் எதிர்ப்பான் -கிளாரித்ரோமைசின் (Clarithromycin)
4.எரித்ரோமைசின்
5.பப்ளிமாஸ் (Grapefruit) மற்றும் அதன் சாறு.
6.ஆல்கஹால் மற்றும் ஹெராயின்
7.எல்லா மனநோய் மருந்துகளும்
பொதுவாகவே ஆல்ப்ரஜோலாம் (Alprazolam) குளோனஜப்பம் (Clonazepam) மற்றும் டையாசப்பம் (Diazepam) போன்ற எந்த ஒரு ....அஜப்பம் (Benzodiazepines) மருந்துகள் சாப்பிடும் பொழுதும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் இவர்களுக்கு
1.கோண அடைப்பு கிளாக்கோமா (Closed-Angle Glaucoma) என்ற கண் அழுத்த நோய் வரும்.
2.மூச்சு திணறல் ஏற்படும்.
3.வலிப்பு நோய்
4.கல்லீரல்/சிறுநீரக பாதிப்பு
5.மனச்சோர்வு,தற்கொலை எண்ணங்கள் உண்டாகும்.
6.தூக்க மருந்துகளுடன் டைப்பன்ஹைட்ராமின் (Diphenhydramine) கோடீன் பாஸ்பேட் (Codeine Phosphate) கலந்த இருமல் டானிக்குகளை அருந்தக்கூடாது. இந்த கூட்டு மூச்சு திணறல் (Respiratory Depression), ஆக்சிஜன் குறைவு (hypoxia) என்று தொடர்ந்து இறுதியில் மரணத்தை உண்டாக்கும்.
பப்ளிமாஸ் (Grapefruit):-
இந்த பழம் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய சத்துள்ள பழம். இதில் வைட்டமின்-C நிறைய இருக்கிறது.மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதில் சர்க்கரை மிகவும் குறைவு. இன்சுலின் திசு உபயோகத்தை ஊக்கப்படுத்தும். கலோரிகள் மிகவும் குறைவு.
ஆனாலும் இந்த பழம் பெரும்பாலான மருந்துகளுடன் சாப்பிடும் பொழுது எதிர்வினைகளை உண்டாகும்.
இந்த பழத்தை சாப்பிடும் பொழுது எதிர்வினை உண்டாக்கும் மருந்துகள்:-
1.கொலஸ்ட்ரால் மருந்துகளான சிம்வாஸ்டேட்டின் (Simvastatin) மற்றும் அடார்வோஸ்டேட்டின் (Atarvostatin).
2.இதய நோய் மருந்தான நிபிடிப்பின் (Nifidipin)
3.உடல் உறுப்புகளை மாற்றும் போது அந்த உறுப்பை உடல் நிராகரிக்காமல் இருக்க தரப்படும் சைக்ளோஸ்போரின் (Cyclosporin)
4.தூக்க மருந்துகள் குறிப்பாக பஸ்பிரோன் (Buspiron)
5.சில ஸ்ட்டீராய்டுகள் குறிப்பாக குடல் புண் , ஆஸ்துமா,நோயாளிகள் பயன்படுத்தும் புடானோசைடு (Budanoside)
6.இதய நோய்க்கு (ஒழுங்கற்ற இதய துடிப்புக்கு) தரக்கூடிய அமியொடரோன் (Amiodarone) என்ற மருந்து. மேலே கண்ட மருந்துகளை பப்ளிமாஸ் சரியாக வளர்சிதை மாற்றம் அடையவிடாமல் செய்துவிடும். எனவே அந்த மருந்துகள் உடலில் அதிக அளவு தேங்கி பெரும் தீங்கு செய்ய நேரிடும்.
7.பெக்ஸோபினாடின் (Fexofenadine) என்ற அலர்ஜி மருந்து. இந்த மருந்தை சரியான அளவு சாப்பிட்டாலும் பப்ளிமாஸ் பழம் இதை குடல் சரியாக உறிய விடாமல் செய்துவிடும்.
எனவே மேலே கண்ட மருந்துகளை பப்ளிமாஸ் அல்லது அதன் சாற்றுடன் சாப்பிட்டால் பிரச்சினைகள் வரும்.