ஆண்டிபையாட்டிக் மருந்துகள் -ஜாக்கிரதை
நுண்ணுயிர் எதிர்ப்பான்கள் அல்லது ஆண்டிபையாட்டிக் மருந்துகள் மிகவும் அற்புதமான மருந்துகளாகும். இவை கண்டுபிடிக்கப்பட்ட பின் மலேரியா டைபாய்டு போன்ற கொடிய தொற்று நோய்கள் இப்பொது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டன. இந்த தொற்று நோய்களில் பெரும்பாலானவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றனவே ஒழிய பெரும்பாலும் காணாமலே போய்விட்டன.
ஆனாலும் புதிது புதிதாக அதே தொற்று நோய்கள் வேறு வடிவங்களில் வருகின்றன.இதற்கு தலையான காரணம் ஆண்டிபையாட்டிக்குகள் என்ற இந்த பாக்டீரியா எதிர்ப்பான்களை மக்கள் நல்ல டாக்டர்களின் வழிகாட்டுதல்களின்றி சுயமாக தான்தோன்றித்தனமாக பயன்படுத்துதல் ஆகும். இவர்கள் ஆண்டிபையாட்டிக்குகளை சரியான அளவுடன் எடுத்துக்கொள்வதில்லை. ஒன்றிரண்டு சாப்பிட்டதும் நோய் தலைமறைவானவுடன் குணமாகிவிட்டதென்று தவறாக புரிந்து கொண்டு தொடர்ந்து சாப்பிடாமல் விட்டுவிடுகிறார்கள் . அதிர்ஷ்டவசமாக எல்லா பாக்டீரியாக்களும் இல்லாவிட்டாலும் பெரும்பாலான பேக்டீரியாக்கள் இப்படி செய்வதால் கொஞ்சகாலத்திற்கு பிறகு குறிப்பாக முதுமையிலோ அல்லது உடல் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுதோ அரைகுறையாக சாப்பிட்ட அந்த ஆண்டிபையாட்டிக்கை பாக்டீரியாக்கள் சரி செய்து வேறு வடிவத்தில் வீறு கொண்டு கிளம்பும்.
அதே மாதிரி ஒரே ஆன்டிபயாட்டிக்கை நினைத்த பொழுதெல்லாம் திரும்பத்திரும்ப சாப்பிடுவதாலும் Antibiotic Resistance என்ற நிலை ஏற்படும்.இந்நிலையில் அந்த பாக்டீரியாவை அழிக்க முடியாமல் அந்த ஆண்டிபையாட்டிக் செயலற்றுப்போய்விடும்.
உதாரணமாக சிப்ரோபிளெக்சாசின் (Ciprofloxacin) போன்ற 4-fluoroquinolone மருந்துகளை சர்வசாதாரணமாக சின்னச்சின்ன குறிப்பாக குறுகிய கால ஜலதோஷம்,இருமல் (Acute bronchitis), நடுக் காதுவலி (Otitis media),சாப்பிடுவதால், மற்ற ஆபத்தான நோய்கிருமிகள் அதாவது தோலில் தடிப்புகள் காய்ச்சல் நிமோனியா போன்றவற்றை உண்டாக்கும் MRSA Methicillin Resistant Staphylococcus Aureus) கிருமி , சிறுநீர் தொற்றை உண்டாக்கும் ஈ-கோலை (E-Coli),நிமோனியாவை உண்டாக்கும் கிருமிகள் இவை அனைத்தும் பிற்காலத்தில் வீறு கொண்டு கிளம்புவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.இவை அசாதாரணமானவைதான் என்றாலும் கவனம் தேவை. பொதுவாக சிப்ரோ போன்ற மருந்துகள் தசை நார்களை பாதிக்கும் இயல்புடையவை.
சிப்ரோப்ளெக்ஸாஸின் போன்ற மருந்துகள் பாக்டீரியா செல்களை மட்டுமே தாக்கும் என்றில்லை ,தவறாக தான்தோன்றித்தனமாக உபயோகிக்கும் பட்சத்தில் எந்த ஒரு ஆண்டிபையாட்டிக்கும் மனித செல்களையும் தாக்கும்.
உதாரணமாக டைபாய்டுக்கு பயன்படுத்தப்பட்ட குளோரோமைசின் சிலருக்கு சிவப்பணுக்களை சிதைத்து இரத்த சோகையை (Aplastic Anemia)உண்டாக்கி இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக சில கண் சொட்டு மருந்துகளை தவிர்த்து வேறு எதிலும் இது இப்போது பயன்பாட்டில் இல்லை.
1.டாக்டர் சீட்டு இல்லாமல் உபயோகித்தல் :-
பாமரர்கள் என்றில்லாமல் படித்தவர்கள் கூட இதை செய்கிறார்கள். எப்போதோ வேறு சூழ்நிலையில் அல்லது வேறு யாருக்கோ எதற்கோ டாக்டரால் பரிந்துரைக்கப்பட்டு நோயை குணமாகிய ஒரு ஆண்டிபையாட்டிக் பெயரை தெரிந்து வைத்துக்கொண்டு பார்மசியில் வந்து எனக்கு இன்ன ஆண்டிபையாட்டிக் வேண்டும் அதுவும் ஒரு நாலைந்து தந்தால் போதும் என்று வாங்கி உபயோகிக்கிறார் . இப்படி சாப்பிடுவதால் அந்த நோய்கிருமிக்கு மேலும் வலுவூட்டுகிறார் என்றே சொல்லலாம். நோய் அப்போதைக்கு குணமானாலும் பின்னொரு கால கட்டத்தில் அது வீறு கொண்டு எழலாம்.
சிலர் வைரஸ் தொற்றினால் உண்டாகும் மிதமான ஜலதோஷம் இருமல் போன்றவற்றுக்கும் ஆன்டிபயோட்டிக்குகளை பயன்படுத்துகிறார்கள். இந்த தவறை சில நேரம் டாக்டர்களும் வைரஸ் தொற்றை பாக்டீரியா என்று தவறாக கணித்து சீட்டு எழுதிக்கொடுக்கிறார்கள். சரியாக ரத்தப்பரிசோதனை கூட செய்வதில்லை. ஏன் இந்த கொரோனா தொற்றில் குளோரோகுயினையும் அஜித்ரோமைசினையும் பரிந்துரைத்த கொடுமையையும் நாம் கண்டோமே.
2. வீட்டில் மீதமிருக்கும் ஆண்டிபையாட்டிக்குகளை உபயோகித்தல்:-
வீட்டில் மற்றவர்கள் உபயோகித்து மீதமிருக்கும் மருந்தை தான் உபயோகிப்பது மிகப்பெரும் கேட்டை விளைவிக்கும் .
3.வேறு தொற்று நோய்க்கு உபயோகித்த பழைய டாக்டர் சீட்டை எல்லா நேரங்களிலும் உபயோகித்தல்:-
டாக்டர் ஒரு சமயத்தில் வேறு ஒரு தோற்று நோய்க்காக ஒரு மருந்தை பரிந்துரைத்திருப்பார் . அதையே எல்லா நேரங்களிலும் பயன்படுத்துவது மிகப்பெரும் கெடுதல் ஆகும் .
4.அடிக்கடி கண்ட மேனிக்கு ஆண்டிபையாட்டிக்குகளை பயன்படுத்துதல்:-
இதனால் ஆன்டிபையாட்டிக் எதிர்ப்புசக்தி பாக்டீரியாவுக்கு இன்னும் கூடுவதோடு உடல் தன் இயல்பு எதிர்ப்பு சக்தியை இழக்கத்துவங்கும்
5.டாக்டர்களின் கூடுதல் மற்றும் குருட்டு பரிந்துரைப்புகள்:-
சில டாக்டர்கள் குருட்டாம்போக்கில் சில கணிப்புகள் மூலம் தற்காலிகமாக ஓர் ஆண்டிபையோட்டிக்கை முதலில் பரிந்துரை செய்து சீட்டு தருவார். அதேசமயம் ரத்த பரிசோதனைக்கும் பரிந்துரைப்பார். பரிசோதனை முடிவுகள் வருவதற்கு சில நாட்கள் ஆகலாம்.அதுவரை நோயாளி டாக்டரின் கணிப்பு ஆன்டிபயாட்டிக்கை சாப்பிட வேண்டியது இருக்கும். பிறகு பரிசோதனை முடிவு கணிப்புக்கு மாற்றமாக வந்தால் உடனே மருந்தை மாற்றி வேறொரு சீட்டு தருவார். இதற்கு பெயர் ஓவர் பிரிஸ்க்ரிப்ஷன் (Over Prescription) என்பர் . இது டாக்டரின் தவறான பொறுப்பற்ற அணுகுமுறையையே காட்டுகிறது.
இந்த நேரங்களில் அந்த கணிப்பு டாக்டர் சீட்டை உபயோகிக்காதீர்கள். அதோடு பரிசோதனை முடிவுகளை கொண்டு வேறு ஒரு நல்ல டாக்டரிடம் போங்கள்.
வீரிய தொற்று (Superinfection):-
இது போன்ற தொற்றுகள் பொதுவாக சுத்தமாக சுகாதாரமாக பராமரிக்கப்படாத ஆஸ்பத்திரிகளில் அல்லது தாய் சேய் நல விடுதிகள், சுகாதாரமாக பராமரிக்கப்படாத தீவிர சிகிச்சை வார்டுகள், பிரசவ வார்டுகள் போன்ற இடங்களில் நீண்ட நாட்கள் தங்குவது, சுயமாக ஆண்டிபையாட்டிக் மருத்துவம் எடுத்துக்கொள்வது இவற்றினால் ஏற்படும்.
ஆஸ்பத்திரிகளில் நீண்ட நாட்கள் தங்கி ஒரு கிருமி தொற்றுக்கு ஆண்டிபையாட்டிக் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பொழுது அங்கு பதுங்கி இருக்கும் இன்னொரு கிருமிக்கு அந்த ஆண்டிபையாட்டிக்கை எதிர்க்கும் சக்தி வீரியமாகி அது இரண்டாது தொற்றாக மாறும் வாய்ப்புகள் உண்டு.இதற்கு அடுத்த தொற்று (Secondary Infections) அல்லது வீரிய தொற்று (Superinfections) என்பர்.
உதாரணங்கள்:-
1.தோலில் புண்களையும் முற்றிய நிலையில் நிமோனியாவையும் உண்டாக்கும் MRSA என்ற கிருமி. இதற்கு மெதிசில்லின் எதிர்ப்பு ஸ்டாபிலோகாக்கஸ் ஏரியஸ் (Methicillin Resistant Staphylococcus Aureus) என்று பெயர்.
இது நீண்ட நாள் நோயாளியுடன் ஆஸ்பத்திரியில் தங்கும் ஆரோக்கியமானவருக்கும் தொற்றக்கூடும். இந்த கிருமி சாதாரணமாக மேதிசில்லின் போன்ற பெனிஸிலின் வகை ஆண்டிபையாட்டிக்குகளால் குணப்படுத்தப்படக்கூடிய ஸ்டெபைலோகாக்கஸ் ஏரியஸ் வகையை சேர்ந்ததாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் மெதிசில்லின் போன்ற பெனிசிலின் வகை ஆண்டிபையாட்டிக்குகளை தொடர்ந்து அதிகமாக இதற்கு பயன்படுத்தியதால் மரபு மாற்றம் அடைந்த இந்த S.Aureus இப்பொது மேதிசில்லின் போன்ற மருந்துகளை எதிர்க்கும் சக்தி பெற்று MRSA வாக மாறிவிட்டது. இது ஆஸ்பத்திரி போன்ற சுகாதாரநிலையங்களில் அதிகமாக காணப்படுகிறது. இப்போது தெரிகிறதா ஆண்டிபையாட்டிக்குகளை நாம் எவ்வளவு கவனமாக கையாளவேண்டும் என்று.
உதாரணம் -2:-
குடலில் சேதங்களை உண்டாக்கும் குளோஸ்ட்ரிடியம் டிஃபிஸில் (Clostridium difficile or C.diff ) என்ற மருத்துவமனை கிருமி. இதுவும் சுகாதாரமில்லாத மருத்துவமனைகளில் நீண்டநாள் தங்கும் எவருக்கும் இது தொற்றும்.
பொதுவாக இது சிப்ரோஃப்ளக்ஸஸின் (Ciprofloxacin) போன்ற ஆண்டிபையாட்டிக்குகளை தொடர்ந்து அல்லது மனம் போன போக்கில் எடுத்துக்கொள்வதாலும் வருகிறது .
இப்படி ஒரு ஆண்டிபையோட்டிக்கை சாப்பிடுவதால் வரும் இந்த கிருமிகளை ஒழிக்க வான்கோமைசின் (Vancomycin),மெட்ரோனிடஜோல் (Metronidazole) போன்ற வேறு ஆண்டிபையாட்டிக்குகளை பயன்படுத்த வேண்டுமாம்.
பிறகு அந்த ஆண்டிபையாட்டிக்குகளால் உண்டாகப்போகும் அடுத்த மரபு மாற்ற கிருமியை ஒழிக்க கார்போரேட்டுகள் இனி வேறு புதிய ஆண்டிபையாட்டிக்குகளை சந்தைக்கு கொண்டுவருவார்கள். இனி அதை பயன்படுத்தவேண்டும்.இப்போது புரிகிறதா அன்டிபையாட்டிக் சூதாட்டம் என்றால் என்னவென்று. இது ஆண்டிபையாட்டிக்குகள் என்று மட்டுமல்ல. வைட்டமின் மாத்திரை டானிக்குகளிலிருந்து , இருமல் டானிக்,பிரிபயாட்டிக்,ப்ரோபயாடிக் என்று எல்லாமே இப்படித்தான்.
ஆன்டிபயாடிக் நச்சுத்தன்மை பாதிப்புகள்:
1.கல்லீரல்
எந்த ஒரு மருந்தும் கல்லீரலில்தான் வளர்சிதை மாற்றங்கள் அடைகின்றன.அதற்கு ஆன்டிபயாட்டிக்குகளும் விதிவிலக்கு அல்ல. அவ்வாறு வளர்சிதை மாற்றம் அடையும் பொழுது, கல்லீரலில் திசுக்கள் சேதம்,பித்த நீர் கட்டிகள் போன்ற பின்விளைவுகளை உண்டாக்குகின்றன
சிறுநீரக பாதிப்பு:-
அமினோகிளைக்கோஸைடு வகையை சேர்ந்த ஜென்டமைசின் (Gentamicin), டோப்ரமைசின் (Tobramycin), ஸ்ட்ரெப்டோமைசின் (Streptomycin), அமிகஸின் (Amikacin) போன்ற ஆண்டிபையாட்டிக்குகளும் காணாமைசின் (Kanamycin), நியோமைசின் (Neomycin) ,பாலிமிக்சின் (Polymyxin), ஆம்போடெரிஸின்-B (Amphotericin-B) போன்ற அன்டிபையாட்டிக்குகளும் கவனமில்லாமல் பயன்படுத்தினால் சிறுநீரகங்களை பாதிக்கக்கூடும்.
அதிகம் அமாக்சிசிலினை(Amoxicillin) எடுத்துக்கொள்வதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுநீர் படிகங்களாக (Crystalluria) மாறி வலியுடன் வெளியேறும்.
3.ஜீரணமண்டலம் :-
பெரும்பாலான ஆன்டிபயாட்டிக்குகள் ஜீரணமண்டலத்திலுள்ள நன்மை பயக்கும் நல்ல ஜீரண நுண்ணுயிர் தொகுப்பை (digestive bacterial flora) அழித்து வயிற்றுப்போக்கு, அஜீரணம், வயிற்று வலி போன்ற உபாதைகளை உண்டாக்கும். இதை தவிர்த்துக்கொள்ள வாழைப்பழம்,பெர்ரி பழங்கள், பீன்ஸ் ,பயறு வகைகள்,முந்திரி,நிலக்கடலை போன்ற பருப்பு வகைகள் ஆகியவற்றை மருந்து சாப்பிடும் முன்னும் பின்னும் எடுத்துக்கொள்ளுங்கள்.இயற்கையாக கிடைக்கும் இந்த துணை உணவுகளை விட்டுவிட்டு பார்மசிகளில் போய் ஆன்டிபயோட்டிக்குகளின் பக்கவிளைவுகளை தவிர்ப்பதற்கென்று அவர்களின் கடை ரேக்குகளில் அலங்காரமாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பிரிபயாட்டிக்குகள் மற்றும் ப்ரோபயாட்டிக்குகள் மருந்துகளை வாங்கி மீண்டும் அவர்கள் வலையில் விழாதீர்கள். அதெல்லாம் வெறும் கண்துடைப்புகள் மட்டுமல்ல வியாபார சூதாட்டம். இயற்கையில் கிடைக்கும் பழங்கள் பருப்புகளை விட அவை ஒன்றும் உயர்ந்தவை அல்ல.
4.கணையம்:-
ஹெலிகோபேக்டர் பைலோரி (H .Pylori) போன்ற தொற்றுக்காக பயன்படுத்தப்படும் டெட்ராசைக்ளின் (Tetracyclines) மெட்ரோனிடஜோல் (Metronidazole) போன்றவை கவனக்குறைவாக பயன்படுத்தப்படும் பட்சத்தில் கணைய பாதிப்புகளை (Pancreatitis) உண்டாக்குவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .
5.இதயம் மற்றும் இரத்த ஓட்டம் :-
அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் அமாக்சிசில்லின் (Amoxicillin) போன்ற ஆன்டிபயோட்டிக்குகள் உங்கள் ரத்த அழுத்தத்தில் லேசான மாற்றங்களை உண்டாக்குவதாக கண்டிருக்கிறார்கள்.
பெரும்பாலான ஆன்டிபயோட்டிக்குகள் தவறாக பயன்படுத்தப்படும் போது ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள் (Arrhythmias), இதய துடிப்பு அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம் போன்ற பின்விளைவுகளை உண்டாக்குகின்றன.
அமாக்சிசிலினை (Amoxicillin) ரத்தமிளக்கிகளான ஆஸ்பிரின் (Aspirin), க்ளோபிடோக்ரெல் (Clopidogrel) மற்றும் வார்ஃபாரின் (Warfarin) போன்றவற்றுடன் சாப்பிடாதீர்கள்.
ஆன்டிபயோட்டிக்குகளால் உண்டாகும்
பொதுவான பக்கவிளைவுகள்:-
1.குமட்டல், வாந்தி
2.அஜீரணம்
3.வயிற்று வலி,வயிற்று உப்புசம் ,
4.பெண் பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் நீர் வடிதல்
5.தலைவலி
6.உடலரிப்பு
7.கறுத்த,வீங்கிய தும்புகள் முளைத்த நாக்கு
அமாக்சிசிலினை ,C.difficile கிருமியால் ஏற்படும் வயிற்று போக்கு ,எப்ஸ்டீன்-பார் (Epstein -Barr )என்ற வைரஸ் தொற்று, மற்றும் கல்லீரல் கோளாறு உள்ளவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக