வெள்ளி, 18 செப்டம்பர், 2020

மூலக்கூறு உயிரியல்-1

 

மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பத்தின் விதிகள்-ஒரு மரபணு என்றால் என்ன?

 GENE TECHNOLOGY -CONCEPTS

இந்த கட்டுரையின் முக்கிய நோக்கம், இந்த தொற்றுநோயான COVID-19 சூழ்நிலையில் மூலக்கூறு உயிரியலில் குறைந்தபட்ச அறிவைக் கொண்டிருக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்பதுதான் . மூலக்கூறு பயோடெக்னாலஜி அல்லது மூலக்கூறு உயிரியல் என்பது உயிரியலின் ஒரு  கிளைக்கு பெயர் ஆகும்.  அது  முக்கியமாக மூலக்கூறு நடத்தை, மாற்றங்கள், நியூக்ளிக் அமில நகலெடுத்தல் மற்றும் மொழிபெயர்ப்புகளின் நுட்பங்கள் மற்றும் மரபணு மாற்றங்கள் போன்றவற்றைக் கையாளுகின்றது .
யூகாரியோடிக் (Eukaryotic) மற்றும் புரோகாரியோடிக் (Prokaryotic)செல்கள் என்றால் என்ன என்று பார்க்கலாம்.
புரோகாரியோடிக் செல்கள் என்பது அந்த செல்களில் செல் சுவர்,சைட்டோபிளாசம்,கரு அமிலங்கள் (DNA அல்லது RNA),எண்டோபிளாஸ்மிக் ரெட்டிகுலம் கால்ஜி  உபகரணம் என்று ஒரு செல் புரோட்டோபிளாசத்தின் அத்தனை அவையங்களும் இருக்கும் ஆனால் கரு மற்றும் உட்கரு (Nucleus & Nucleolus)என்று ஒன்றும் இருக்காது 
(எ.கா.) பாக்டீரியா காளான் மற்றும் பிற ஒற்றை உயிரணுக்கள்.
அதேசமயம் யூகாரியோடிக் செல்கள் என்பவை வரையறுக்கப்பட்ட கருவைக் கொண்ட செல்கள். (எ.கா.) மனிதர்கள் மற்றும் பிற பலசெல்கள் கொண்ட (Multicellular) உயிரினங்கள்.
கரு அமிலங்கள்  அல்லது நியூக்ளிக் அமிலங்கள் யாவை?
இந்த அமிலங்கள் ஒரு செல்லின்  கருவின் அடிப்படைகளாகும், இது  புரோகாரியோடிக் அல்லது யூகாரியோடிக் செல்கள் அனைத்திலும் அடிப்படையாக இருக்கும்.

 ஆர்.என்.ஏ: -(ரிபோநியூக்ளிக் அமிலம் )

வரைபடம். 1

ரிபோ நியூக்ளிக் அமிலம் . இதன் வேதியியல் கட்டமைப்பில் 1 வது கார்பன் நிலையில் ஒரு ப்யூரின் அல்லது பைரிமிடின் கூட்டமைப்பை தாங்கிய ஒரு ரைபோஸ் சர்க்கரையும், அதன் 3 வது கார்பன் நிலையில் ஒரு பாஸ்பேட் கூட்டமைப்பும்  உள்ளன. பாஸ்பேட் கூட்டமைப்பின்  மறு முனை அடுத்த ரைபோஸ் சர்க்கரையின் 5 வது கார்பன் நிலையில் இணைந்துள்ளது. அப்படி இணைந்த அந்த அடுத்த ரிபோஸ் சர்க்கரையின் 1-ஆவது கார்பன் நிலையில்  மீண்டும் ஒரு நைட்ரஜன் அடித்தளம் (N-Base) இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு  பாஸ்பேட் பிணைப்புகளால் இணைக்கப்பட்ட ஒவொரு தனித்தனி நைட்ரஜன் அடித் தளங்களைக் கொண்ட ரைபோஸ் சர்க்கரைகள்  சங்கிலி பின்னல் ஒற்றை ஆர்.என்.ஏ இழையாக புனையப்படுகிறது. (படம் -1 ஐப் பார்க்கவும்).RNA வில் இருக்கும் நான்கு நைட்ரஜன் தளங்கள் பின்வருமாறு:-1அடேனின் 2.குவானின் 3.சைட்டோசின் 4.யுராஸில் 

 டி.என்.ஏ: -(டீயாக்சி ரிபோநியூக்ளிக் அமிலம்)

படம் -2 ஏ
டியோக்ஸி ரிபோ நியூக்ளிக் அமிலம். வேதியியல் கட்டமைப்பில் டி.என்.ஏ இழைகளை உருவாக்க பாஸ்பேட் பாலங்களுடன் பிணைக்கப்பட்ட நைட்ரஜன் அடித்தளங்களை தாங்கிய டியோக்ஸிரிபோஸ் சர்க்கரைகள் உள்ளன.இதிலும் ஆர் என் ஏ யில் உள்ளமாதிரி ஒன்றாவது (C1) கார்பன் நிலையில் ஒரு நைட்ரஜன் அடித்தளமும் மூன்றாவது C3 நிலையில் ஒரு பாஸ்பேட் கூட்டமைப்பும் இருக்கும்.பாஸ்பேட் கூட்டமைப்பின் மற்றொரு முனை அடுத்த டீயாக்சி ரிபோஸ் சர்க்கரையின் ஐந்தாவது C5 நிலையில் இணைந்திருக்கும்.இப்படி சங்கிலித்தொடராக DNA ஒற்றை நூலடுக்கு இருக்கும். ஆனால் ஆர்.என்.ஏ போலல்லாமல், டி.என்.ஏ பெரும்பாலும் இரட்டை அடுக்கு வடிவத்தில் முறுக்கிவிட்ட நூலேணிபோல்  அமைந்துள்ளது .
டி.என்.ஏவில் உள்ள பென்டோஸ் சர்க்கரை C'-2 நிலையில் இரண்டு ஹைட்ரஜன் அயனிகளைக் (ஒரு ஆக்ஸிஜன் அகற்றப்படுகிறது) (H-C-H ஆக) கொண்டுள்ளதை  மேலே உள்ள படம் -2A இல் காணலாம்.
 அதனால்தான் இது டியோக்ஸிரிபோஸ் என்று அழைக்கப்படுகிறது மற்றும் ரைபோஸை விட நிலையானது. இதற்கு மாறாக ரிபோஸ் கட்டமைப்பில் C -2 நிலையில் ஆக்ஸிஜனைக் கொண்டிருப்பதால் (HC-OH) அது (R N A ) DNAஅளவு நிலையானது அல்ல.
இரண்டு DNA இழைகள் பின்னப்பட்டு இருக்கும் விதம் மிகவும் அலாதியானது.அதாவது ஒரு DNA இழையின் நைட்ரஜன் தளம் இன்னொரு DNA இழையின் நைட்ரஜன் தளத்துடன் கீழ்கண்ட முறையில் பிணைந்திருக்கும்.அதாவது பொதுவாக  DNA யின் இழைகளில் நான்குவித நைட்ரஜன் தளங்கள் இருக்கின்றன. இவற்றிக்கு கருதளங்கள் அல்லது நியூக்ளியோ தளங்கள் என்றும் கூறலாம். இவை அடினின், குவானின், தைமின் மற்றும் சைட்டோசின் என்றழைக்கப்படும். RNAயில் இருக்கும் யுராஸிலுக்கு  பதிலாக DNA யில் தைமின் இருக்கும். இவற்றை குறியீடுகளாக முறையே A, G, T, மற்றும் C ஆக குறிக்கலாம். அடெனினும், குவானினும் பியூரின்களாகும். தைமினும் சைட்டோஸினும் பிரிமிடின்களாகும்.இரண்டு DNA கயிறுகள் நூலேணிபோல் முறுக்கும் பொழுது ஒரு கயிற்றிலிருக்கும் பியூரின் தளமான அடெனின் (A)  நியூக்ளியோடைட் எதிரிலுள்ள கயிற்றின் பிரமிடின் தளமான  தைமினுடன் (T) இரட்டை ஹைட்ரஜன் பாண்டுகளாக இணைந்துள்ளன. அது போல ஒரு கயிற்றிலுள்ள மற்றொரு பியூரின் தளமான குவானின் (G)எதிர் கயிற்றிலுள்ள சைட்டோசினுடன் (C) மூன்று ஹைட்ரஜன் பாண்டுகளாக இணைந்து ஒரு முறுக்கிய கையிற்றேணிபோல் பின்னி இருக்கின்றன.அதாவது 
A 〓 T(Double bonded) ;  G ☰ C(Triple bonded)
DNA இல் உள்ள தைமின் ஆர்.என்.ஏவில் யுரேசிலால் மாறி இருக்கிறது.தைமின் என்பது மீதைல் யூராஸில் ஆகும்.எனவே மிகவும் கனமானது.DNA கருவை விட்டு எங்கும் அசையாது. ஆனால் RNA  அசையக்கூடியது. அது சைட்டோபிளாசத்திற்குள் அங்கும் இங்கும் நீந்த வேண்டும். எனவே அதில் கனமான தைமினுக்கு பதில் இலேசான யூராஸில் நியூக்ளியோடைடு இருக்கிறது. RNA  யில் தைமினுக்கு பதில் யூராஸில் இருந்தாலும் அவை இரண்டுமே DNA  மரபணுவின் ஒரே செய்தியைத்தான் பிரதிபலிக்கும். மேலும், ஆர்.என்.ஏ பெரும்பாலும் ஒற்றை இழையாகவே உண்டாகிறது., அதேசமயம் டி.என்.ஏ  இரட்டை இழையாக  ஹெலிக்ஸ் எனப்படும் சுருள்  வடிவில்  முறுக்கிய நூலேணிபோல் அமைந்திருக்கிறது. (படம் -2 பி)
படம் -2 பி

நியூக்ளியோடைடுகள்  
நியூக்ளியோடைடுகள் ஒரு நியூக்ளிக் அமில இழையின் அடிப்படை அலகுகள். ஒவ்வொரு ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ இழைகளும் நியூக்ளியோடைட்களால் ஆனவை.
படம் -2 சி
நியூக்ளியோடைடுகள் பின்வரும் சமன்பாடுகளால் உருவாகின்றன:

ஒரு பென்டோஸ் (ஐந்து கார்பன் கொண்ட ஒரு ஐகரம்-🏠)  பின்-எலும்பு + ஒரு நைட்ரஜன் அடிப்படை ⟶ நியூக்ளியோசைடு
ஒரு நியூக்ளியோசைடு + பாஸ்பேட் பிணைப்புகள் ⟶ நியூக்ளியோடைடு
ஒற்றை நியூக்ளியோடைடை பின்வருமாறு உருவாக்கலாம்:
படம் -2 சி போலவே, ஒவ்வொரு வளைவிலும்  நான்கு  நியூக்ளியோசைடுகள் உள்ளன, அவை ஒவ்வொன்றிலும்  ஒரு பென்டோஸ் சர்க்கரை முதுகெலும்பாகவும், ஒவ்வொன்றும் நைட்ரஜன் தளங்களை ஒன்றிணைத்து வண்ணப் பட்டைகள் மூலம் பிணைக்கப்பட்டு பாலிநியூக்ளியோட்டைடுகளாக  உருவாகுகின்றன.
ஒரு பென்டோஸ் சர்க்கரை + பாஸ்பேட் + ஒரு நைட்ரஜன் அடிப்படை.=ஒரு நியூக்ளியோடைட்டு 
படம் -2 டி

மேலே உள்ள படம் 2-டி யில் கண்டது போல் ஒரு ஒற்றை நியூக்ளியோடைடு மாதிரியாக காட்டப்பட்டுள்ளது.
அதில் நடுவிலிருக்கும் ஒரு பென்டோஸ்  சர்க்கரை அமைப்பில் C -1 கார்பன் நிலையில் ஒரு நைட்ரஜன் தளம் இணைந்திருக்கிறது.அதன் C-5 கார்பன் நிலையில் ஒரு பாஸ்பேட் கூட்டமைப்பு இணைந்திருக்கிறது. இதுதான் ஒரு தனி நியூக்ளியோடைடு.இந்த நியூக்ளியோடைடுகள் நான்கு விதமாக இருக்கின்றன என்பதை மீண்டும் கீழ்கண்டவாறு தெளிவுபெறலாம்.
RNA நியூக்ளியோடைடுகள்:-
1.அடெனின் -A│-பியூரின் வகை 
2.குவானின் -G丨-பியூரின் வகை 
3.சைட்டோசின் -C-பிரமிடின் வகை 
4.யூராஸில் -U    -பிரமிடின் வகை 
DNA யில் உள்ள நியூக்ளியோடைடுகள் 
1.அடெனின் A-பியூரின் வகை 
2.குவானின் G -பியூரின் வகை 
3.சைட்டோசின் C-பிரமிடின் வகை 
4.தைமின் T  -பிரமிடின் வகை 
அதாவது மொத்தம் ஐந்து வகையான நியூக்ளியோடைடுகள் இருக்கின்றன. எனினும் DNA யில் தைமினும் RNA யில் யூராஸிலும் இடம் மாறி இருக்கின்றன.
குரோமோசோம்கள் 
குரோமோசோம்கள் ஹிஸ்டோன்கள் என்ற சிறு சிறு நுண்ணிய புரத துண்டுகளைச் சுற்றி  இறுக்கமாக முறுக்கபட்ட  டி.என்.ஏ இழைகளால் செய்யப்பட்ட நூல்கள் போன்றவை. இதை மீண்டும் DNA  இழைகளாக பிரித்தால் அதன் நீளம் இரண்டு அங்குலம் கணக்கில்   இருக்கும். ஆனால் அவ்வளவு தூரம் நீளக்கூடிய DNA ஹிஸ்டோன் புரத துணுக்குகளை சுற்றி நெருக்கமாக இறுக்கி ஒரு சிறு குரோமோசோம் தும்புகளாக நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் ஒரு செல்லுக்கு 23 ஜோடிகளாக மொத்தம் 46 குரோம்சோம்களை பொதிந்து வைத்த அந்த ஆண்டவன் மிக அற்புதமான சிற்பி. புகழ் அனைத்தும் அவனுக்கே. அந்த 46 குரோமோசோம்களையும் நீளவாக்கில் பிரித்து அவற்றை ஒன்று சேர்த்தால் 2 மீட்டர் நீளம் வரும். இவ்வாறு நம் உடலிலுள்ள அத்தனை செல்களிலுமுள்ள குரோமோசோம்களையும் DNA நூல் இழைகளாக பிரித்து ஒன்று சேர்த்து ஒருமுனையிலிருந்து இன்னொரு முனைக்கு பொய் வருவதென்பது சந்திரமண்டலத்திற்கு இங்கிருந்து ஆறுமுறை நடந்து சென்று திரும்புவதற்கு சமமாகும்.
படம் -3

குரோமோசோம்கள் இரட்டை அடுக்கு டி.என்.ஏவின் முறுக்கப்பட்ட சங்கிலியிலிருந்து உருவாகின்றன, அவை ஹிஸ்டோன்கள் எனப்படும் புரதங்களின் துண்டுகளைச் இறுக்கமாகச் சுற்றிப்புனையப்பட்டு உள்ளன.இதற்கு  குரோமாடின் என்று பெயர். இந்த குரோமட்டின் மேலும் இறுகி குரோமோசோம் நூலை உருவாக்குகிறது . (படம் -3)
எளிமையான சொற்களில், குரோமோசோம்கள் ஹிஸ்டோன்களைச் சுற்றி இறுக்கமாக மூடப்பட்ட டி.என்.ஏ மூலக்கூறுகளால் யூகாரியோடிக் செல் கருவில் ஜோடிகளாக உருவாகுகின்றன.
மனித உயிரணு கருவில் சுமார் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.
ஒரு மரபணு என்பது குரோமோசோம் நூலின் எந்தவொரு பகுதியிலும் தெளிவான தகவல்களுடன்   புரதங்களை  புனரமைத்தல் உள்ளிட்ட தகவல்களின் பரம்பரைத் துண்டுகளாக  உள்ளன. மனிதன் தற்போது யார், எதிர்காலத்தில் அவர் யார் என்பதைப் பற்றி மனிதர்கள் தீர்மானிக்கிறார்கள். ஒற்றை மரபணு, உடல் நடத்தை, வளர்ச்சி, எழுத்துக்கள் மற்றும் பல விஷயங்களைப் பற்றிய தெளிவான தகவல்களைக் கொண்டுள்ளது.
ஒரு மரபணு என்பது குரோமோசோமில் ஒரு பிரிவு, தடுமாறிய நியூக்ளியோடைடு எழுத்துக்களால் எழுதப்பட்ட தெளிவான வாசிப்பு ஆகும் .
(எ.கா.)
Th iswh at Itr yt oexp lain- நியூக்ளியோடைடுகள்
This is what I try to explain(இதைத்தான் நான் விளக்க முயற்சிக்கிறேன்) -ஒரு மரபணு
மேலேயுள்ள அனகிராம்களிலிருந்து, நியூக்ளியோடைடுகள் ஒரு குரோமோசோம் நூலில் ஒரு ஒற்றை எழுத்துக்கள் என்றும் , ஒரு ஒழுங்கற்ற சிதறிய அல்லது தடுமாறிய நிலையில் உள்ளவை என்றும் கொள்ளலாம். ஒரு மரபணு என்பது தடுமாறிய நிலையில் இருக்கும் நியூக்ளியோடைடு எழுத்துக்களை ஒரு தெளிவான வாக்கியமாக குரோமோசோம்களுக்குள் அமைத்திருப்பவை ஆகும்.
இதனால் குரோமோசோமில் பல மரபணுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஒரு மனித யூகாரியோடிக் கலத்தில், மொத்தம் 46 குரோமோசோம்களில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.30 பில்லியன் ஜீன்கள் உள்ளன.80% புரதங்களை தயாரிக்கும் கோடோன்கள் (CODONS) பொதியப்பட்டவை.
மும்மூன்றாக இணையப்பட்ட நியூக்ளியோடைடுகளால் ஆனவை 
உதாரணமாக DNA இல் நான்குவகை நியூக்ளியோடைடுகள் இருப்பதை பார்த்தோம்.அவை அடெனின் ,குவானின்,தைமின் மற்றும் சைட்டோசின் ஆனா.இவை முறையே கீழ்கண்ட எழுத்துக்களால் குறியீடு செய்யப்படும்.அவை A, G, T,மற்றும் C.
இந்த நான்கும் மும்மூன்றாக இணைந்து கோடோன்களை உண்டாக்கும்.உதாரணமாக ATG, ATC, ACC, GCC,GTC இப்படியாக மொத்தம் 64 கோடோன்கள் நம் ஒவொரு செல்களிலுள்ள DNA குரோமோசோம்களில் இருக்கின்றன .இந்த 64 கோடோன்களும் மொத்தம் 20அமினோஅமிலங்களை குறிக்கின்றன. அமினோ அமிலங்கள் ஒரு புரத மூலக்கூறுகின் அடிப்படை மூலக்கூறுகளாகும். பலவிதமான புரதங்களை தயாரிக்க பயன்படுகின்றன. அதே போல் கோடோன்கள் இல்லாத ஜீன்கள் வேறு சில முக்கிய காரியங்களை செய்கின்றன. இதை பற்றி மேலும் தெளிவாக நாம் அடுத்தடுத்துள்ள பதிவுகளில் காணலாம் 
மரபணு உருவாக்கத்தின் தோற்றம் முதல் இறுதி வரை சமன்பாடு .                                                        
புரதங்கள் ➝ நியூக்ளியோபேஸ்கள் ➝ நியூக்ளியோடைடுகள் ⟶RNA⟶↲
டி.என்.ஏ ➡️ Chromatins➡️Chromosomes➡️ GENES  (படம் -3)
செல் புரத தொகுப்புக்கான சமன்பாடு

குரோமோசோம் ➡️குரோமட்டின் ➡️DNA➡️ ஜெனடிக் நகல் (டிரான்ஸ்கிரிப்ஷன்) mRNA➡️  rRNA+tRNA+அமினோஅமிலங்கள் (ட்ரான்ஸ்லேஷன் ➡️ புரோட்டீன் தொகுப்பு மூலம் மொழிபெயர்ப்பு.
புரத தொகுப்பு என்பது ஒரு சுழற்சி நிகழ்வு. செல்கள் வாழ புரதங்கள் அவசியம். ஒரு செல் அதன் புரோட்டோபிளாசம், சைட்டோபிளாஸ்மிக் உறுப்புகள், நியூக்ளியஸ், டி.என்.ஏ, ஆர்.என்.ஏ குரோமோசோம்கள், நியூக்ளியோடைடுகள் மற்றும் மரபணுக்களின் உள்ளடக்கங்களை உருவாக்க புரதங்களைப் பயன்படுத்துகிறது. மீண்டும் மரபணு புரதத்தை ஒருங்கிணைக்க உறுப்புக்கு அறிவுறுத்துகிறது. எனவே இது அனைத்து யூகாரியோடிக் மற்றும் புரோகாரியோடிக் கலங்களிலும் ஒரு அற்புதமான சுழற்சி நிகழ்வு ஆகும்.
அடுத்த இடுகை: மரபணு தொழில்நுட்பத்தின் அதிசயங்கள்







வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

நோய் தடுப்பு முறைகள் -வேக்சின்கள்

நோய் தடுப்பு மருத்துவம் -VACCINOLOGY 

நோய் தடுப்பு மருத்துவம் என்பது உடலில் நோய் எதிர்ப்பாற்றலை தூண்டி அதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்று நோயை தடுப்பதற்காக உடலினுள் அதே நோய் கிருமியை பலஹீனப்படுத்தியோ, செயலற்றதாக்கியோ, அதனை பகுதியாகவோ,அல்லது அதன் நஞ்சையோ செலுத்தி மருத்துவம் செய்யும் முறை ஆகும்.

தடுப்பேற்ற வகைகள் 

அ.உயிருள்ள வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் :-

இவற்றில் எந்த நோய்க்கு தடுப்பு தேவையோ அந்த நோய் கிருமிகளையே பல வழிகளில் பாதித்து அதன் வீரியத்தை குறைத்து வைத்து தயாரிப்பது ஆகும்.

(உதாரணங்கள்):-

MMR (Measles, Mumps, Rubella) வேக்சின், 

தட்டம்மை, சின்னம்மை, வைசூரி, ரோட்டா வைரஸ் வேக்சின், மஞ்சள் காய்ச்சல் தடுப்பு (Yellow Fever Vaccine)

தயாரிக்கும் பொறியியல் 

படம் -1
இந்த பொறியியலில் வீரியமுள்ள  வைரஸை முதலில் கோழி முட்டை கருவின் நார்முகை (FIBROBLAST CELLS) செல்களில் திரும்பத்திரும்ப செலுத்தி அந்த செல்களை பாதிக்கிறார்கள்.முதன் முதலில் அந்த செல்களுக்குள் சென்ற வைரஸ் திகைத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தன் உருவத்தையும் பாரம்பரியத்தையும் புதிய சூழலுக்கு ஏற்ற மாதிரி  மாற்ற துவங்குகிறது. இவ்வாறு கோழிக்கருவை தாக்கும் முகமாக அதன் வீரியம் மாற மாற மனித செல்களை பாதிக்கும் அதன் வீரியம் மங்கத்துவங்குகிறது.

கோழிக்கரு  செல்களை தாக்குவதற்காக ஒரு தட்டையான வட்டக்கிண்ணத்தில் அந்த செல்களை பரப்பி ஆயிரக்கணக்கில் வைரஸ்களை அதில் மேய விட்டாலும் பெரும்பாலான வைரஸ்கள் அதை தாக்குவதில்லை.சில நூறு வைரஸ்களே அதனுள்ளே போகின்றன.அவ்வாறு போகும் வைரஸ்களைத்தான் அவர்கள் பிரித்தெடுத்து திருப்பி திருப்பி செல்களை வரிசையாக ஊடுருவ வைத்து அதன் வீரியத்தை குறைக்கிறார்கள் (படம் -1).குறிப்பிட்ட இலக்கில் அதன் வீரியம் குறைந்த பிறகு அதை கொண்டு வேக்சின் தயாரிக்கிறார்கள்.

இந்த தடுப்பு முறையின் நன்மை தீமைகள் :-

அ .நன்மைகள் 

1.உயிருள்ள வைரஸ் இதில் இருப்பதால் உடலில் எதிர்ப்பு சக்தி உடனடியாகவும் நீண்ட காலம் நிலைத்திருக்குமாறும் உண்டாகும் 

2.இவ்வகை வேக்சின்களை ஊசி மூலம் மட்டுமில்லாமல் வாய்,மூக்கு மற்றும் தோல் ஒட்டு பிளாஸ்திரி போன்ற வசதிகள் மூலமும் செலுத்தலாம்.

3.சளி யில் ஏற்படும் IgA மற்றும் இரத்தத்தில் இருக்கும் IgG போன்ற நோய் எதிர்ப்பான்களும்  அபரிமிதமாக உற்பத்தியாகும் 

4.உடலின் இயல்பு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 

5.விஷக்கிருமிகளை அழிக்கக்கூடிய T-cell வெள்ளை அணுக்களும் உற்பத்தியாகும் 

6.ஒரு டோஸ் போதும் நீண்ட நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் 

ஆ தீமைகள் :-

1.உயிரோடு வீரியம் குறைந்த நிலையில் இருந்தாலும் திரும்பவும் பழைய வீரியம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு 

2.பலவீனமானார்கள் ,எயிட்ஸ் போன்ற நோயாளிகள் ,உறுப்பு மாற்றம் செய்தவர்கள் இவர்களுக்கு இந்த முறை ஏற்றதல்ல.

கொரோனாவிற்கு இந்த முறையை இதுவரை யாரும் பயன்படுத்தவில்லை 

ஆ உயிரற்ற தடுப்புமருந்துகள் :

இந்த வகை தடுப்பு மருந்துகளில் நோய் கிருமியை முற்றிலும் செயலிழக்கவைத்து தயாரிக்கிறார்கள் .

இந்தியாவில் கோவிட் 19 நோய்க்காக ஐதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் இண்டெர்நேஷனல் லிமிடட் கம்பெனி (BBIL) இந்திய மருத்துவ கழகத்தின் வழிகாட்டுதலுடன் இதை தயாரித்து இருக்கிறார்கள்.

இதன் தயாரிப்பு பொறியியல் :

படம் -2

பல முறைகளில் வைரஸை செயலிழக்கச்செய்கிறார்கள்.அவற்றில் மூன்று முறைகளை மட்டும் இங்கு நாம் பார்க்கலாம்.

1.வெப்பமூட்டுதல் :

ஒரு மிகச்சிறிய 320μl அளவு தீநுண்கிருமி திரவத்தை 1.5ml பாலிப்ரோபைலினாலான ஒரு கிரையோ டியூபில் எடுத்துக்கொண்டு அதை 75 டிகிரி செல்ஸியசில் 45 நிமிடம் அடைகாக்கவேண்டும் (INCUBATION). பார்க்க படம் -2.

2.புறஊதாக்கதிர் முறை :

இந்த முறையில் படம் -2 இல் உள்ளதுபோல் 2மில்லி அளவு வைரஸ் கரைசலை 24 தட்டைகளில் வைத்து புறஊதாக்கதிரை அவற்றின் மீது பாய்ச்ச வேண்டும்.

முதலில் ஒவொரு பிளேட்டிலும் வைரஸ் கரைசலை 1செ.மீ உயரத்திற்கு ஊற்றி புறஊதாக்கதிர் விளக்கை தட்டின் அடியிலிருந்து 3செ.மீ உயரத்தில் இருக்கும்படி வைக்கவேண்டும்.சுமார் 250நானோமீட்டர் அலைநீளமுள்ள புறஊதா -C கதிர்வீச்சை அதில் சுமார் 15 நிமிடங்கள் பாய்ச்ச வேண்டும்.

3.பார்மாலிடிஹைடு முறை:-

இந்த முறையில் பார்மாலிடிஹைடு 1:4000 அடர்த்தியில் 37டிகிரி செல்ஷியஸில் 24 மணிநேரம் வைரஸ் கரைசலை இன்குபேட் செய்யவேண்டும் .

நன்மைகள்  :-
1.மிகவும் பாதுகாப்பானது 
2.சுலபமாக தயாரிக்கலாம் 
3.குழந்தைகள் முதல் பெரியவர் நோயாளிகள் பலஹீனர்கள் என்று எல்லோருக்கும் பொருந்தும் 
4.சுலபமாக சேமிக்கலாம்.
5.நீண்ட நாள் கெடாமல் இருக்கும் 
பிரதிகூலங்கள்:
1.பலஹீனமான நோய் எதிர்ப்பு சக்தி 
2.குறுகியகால நோய் எதிர்ப்பு சக்தி 
3.பூஸ்டர் டோஸ்கள் தேவைப்படும் 
இ .மறுசீரமைப்பு தடுப்பு மருந்துகள் 
படம்-3

இந்த முறை மிகவும் பாதுகாப்பான முறை ஆகும்.
ஆக்ஸ்பார்ட் பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் வாக்சினை இந்த முறையில்தான் தயாரித்திருக்கிறார்கள்.
இந்த முறையில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து ஓரளவு பாதுகாப்பானதுதான். இதன் தயாரிப்பு முறையை பார்க்கலாம்.
சிம்பன்சி அடினோவைரஸ் என்ற வைரஸ்தான் இதன் அடிப்படை. இந்த வைரஸ் ஆபத்தில்லாதது. இது மனிதன் மற்றும் ஆபிரிக்க சிம்பன்சி குரங்குகளுக்கு சாதாரண ஜலதோஷத்தை உண்டாக்கக்கூடியதாகும்.
கொரோனா வைரஸில் நான்குவகை புரதங்கள் உண்டு.
1.மேல் கூடு 
2.உட்கூடு 
3.உட்கூட்டினுள் இருக்கும் RNA என்ற கரு அமிலம் 
4.மேல்கூட்டின் மேல் சிறு சிறு முட்கள் போல் படர்ந்திருக்கும் Spike எனப்படும் S-புரதங்கள்.
இந்த ஒவ்வொரு புரதங்களிலும் விதம் விதமாக விசேஷ மரபுக்குறிப்புகள் பொதியப்பட்டு இருக்கும்.
அதில் மிக விசேஷமாக மரபுக்குறிப்புகள் பொதியப்பட்ட இடம் தான் S-புரதங்களாகும்.
இந்த S-புரதங்களில் ஒருசிலவற்றை அதன் மரபுக்குறிப்புகளோடு பிரித்தெடுத்து இந்த சிபென்சி அடினோவைரஸுடன் இணைத்து உருவாக்கியதுதான் இந்த 
AZD1222 என்ற இந்த வாக்சின்.
சூத்திரம் :-
படம் 3அ 
இந்த தடுப்பு மருந்தைஆக்ஸ்பார்ட் பல்கலைக்கழகம் மார்ச் 2020 மாதம் தயாரித்து முடிந்துவிட்டது.இந்த தயாரிப்புக்கு சூத்திரம் அமைத்து கொடுத்தது ஆக்ஸ்பர்ட்டின் துணை நிறுவனமான VACCITECH என்ற நிறுவனமாகும்.
இதன் உரிமத்தை ASTRA ZENICA என்ற சுவிஸ் பிரிட்டிஷ் மருந்து கம்பெனி கடந்த ஏப்ரல் மாதம் 2020 இல் பதிவு செய்து பெற்றுக்கொண்டது.இந்தியாவில் இதை தயாரித்து வெளியிட சீரம் இந்தியா லிமிடெட்(SIL) விண்ணப்பித்து இருக்கிறது.இப்போதைக்கு இதன் பரிசோதனை முயற்சிகள் இரண்டு கட்டங்களாக நிறைவேறி இருக்கின்றன.மூன்றாவது கட்டம் இப்பொழுது நடைமுறையில் இருக்கிறது.இது இந்த கட்டுரையின் இறுதியில் தெளிவாக காணலாம். இந்த வாக்ஸினுக்கு முதலில் ChAdOx1nCoV என்ற பெயர் வைக்கப்பட்டது. பிறகு அதை மாற்றிAZD-1222 என்று பெயரை மாற்றினார்கள். இப்போது அதையும் மாற்றி COVISHIELD என்று பெயர் மாற்றி இருக்கிறார்கள் 
DNA தடுப்புமருந்து பொறியியல் 
படம் 4
இந்த வகை தடுப்பு மருந்துகள் தயாரிப்பதற்கு  மிக எளிமையானவை மட்டுமல்ல மிக மலிவாக தயாரிக்கலாம். ஆனால் இவை மனித உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை அளிக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.மேலே படம் -4ஐ கவனிக்கவும் இதன் தயாரிப்பு முறையின் வடிவமைப்பு தரப்பட்டு இருக்கிறது 
எல்லா செல்களுக்குள்ளும் அதன் கருவில் இரண்டு வகையான DNA கருஅமிலங்கள் இருக்கின்றன.
1.குரோமோசோம் டி.என்.ஏ 
2.பிளாஸ்மிட் டி.என்.ஏ 
இந்த பிளாஸ்மிட் DNA தான் இந்த தயாரிப்பில் பயன்படுகிறது. காரணம் அது ஆபத்தான நோய் உண்டாக்கும் முறையில் விருத்தி அடையாது.மற்றபடி ஒரு தீநுண்கிருமிக்கு உண்டான அத்தனை மரபுக்குறிப்புகளும் அதில் இருக்கிறது.இந்த பிளாஸ்மிட் DNA செயற்கையாகவும் நுண்ணுயிரியல் சந்தைகளில் கிடைக்கின்றன.இதனுடைய சூத்திரம் மிகவும் சுலபம் தான் (பார்க்க படம் 4 )
ஒரு செல்லிலிருந்து பிளாஸ்மிட் DNA வை ரெஸ்ட்ரிக்ஷன் என்டோநியுக்ளி யேஸ் என்ற நொதியை பயன்படுத்தி பிரித்தெடுக்கிறார்கள் (படம்-4). அதே மாதிரி நொதியை பயன்படுத்தி எந்த வைரஸிற்கு எதிர்ப்புசக்தியை உண்டாக்கவேண்டுமோ அந்த வைரஸின் மரபணுக்குறிப்புகளை பிரித்தெடுக்கிறார்கள்.இதற்கு DNA INSERT என்று பெயர்.பிறகு இந்த DNA INSERT -ஐ பிளாஸ்மிட் DNA க்குள் DNA LIGASE என்ற நொதியை பயன்படுத்தி செருகி ஒரு புதிய செயற்கை வைரஸை உருவாக்குகிறார்கள் (படம் 4)
படம் 4அ 
இந்த DNA தடுப்புமருந்தை ஊசி மூலம்தான் குத்த வேண்டும் என்பதில்லை.இதை மூக்கின் மூலம் உறிஞ்சக்கூடிய வகையில்
1. nasal spray ஆகவும் தயாரிக்கலாம்.
2.தோலில் ஒட்டும் வகையில் பிளாஸ்திரி போலும் தயாரிக்கலாம் 
3.இந்த தடுப்பு மருந்தை தங்கத்துகள்களில் பதியவைத்து அந்த துகள்களை மிகு வேக ஹீலியம் வாயுக்கற்றைகள் மூலம் ஊசி இல்லாமல் உடலுக்குள் செலுத்தலாம் (படம் 4அ ).
தடுப்பு மருந்துகள் பரிசோதனை முயற்சிகள் :-
பொதுவாக தடுப்பு மருந்துகள் தயாரிப்பிலிருந்து அது சந்தைக்கு விற்பனைக்கு வருவதற்கிடையில் குறைந்த பட்சம் ஐந்து பரிசோதனைகளில் அது தேறி இருக்கவேண்டும். இதற்கு குறைந்த பட்சம் 18 மாதங்கள்.அதிக பட்சம் 5 வருடங்கள்.அதன் பாதுகாப்பின் உத்திரவாதம் அப்படிதான் நிர்ணயிக்கப்படவேண்டும் ஏனென்றால் மனித உயிர் என்பது பரிசோதனை பந்தாட்டத்தின் விளையாட்டுப்பொருள் அல்ல.
பரிசோதனை முயற்சிகள் எப்படி நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று குறிப்புகளாக பார்க்கலாம் 
1.க்ளினிக்முன்  முயற்சிகள் (PRECLINICAL TRIALS)
1.இது பொதுவாக வாக்சின் தயாரிப்பு கம்பெனிகள் தங்களுடைய பரிசோதனை கூடங்களில் மனிதனல்லாத பிற உயிரினங்களை மாதிரிகளாக கொண்டு நடத்தப்படுவது (உ-ம்)சுண்டெலிகள்,சீமை பெருச்சாளிகள்).இதை அவர்கள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் முயற்சிக்கலாம் 
2.முதல் மனித மாதிரி முயற்சி (பாதுகாப்பு முயற்சி) CLINICA TRIALS-Phase -I: (EFFICACY)
குறைந்த பட்சம் 25 பேர் கொண்ட ஒரு சேவகர் குழுவை  உருவாக்ககவேண்டும் அதில் ஆரோக்கியமான நோய் நொடி இல்லாத 25 to 50 வயதிற்குட்பட்ட நபர்கள் இருக்கவேண்டும்.இது 1 முதல் 3மாதங்கள் வரை நடைபெறும்.இந்த முயற்சியில் அதிக பட்ச பலன்தரும் குறைந்தபட்ச மருந்தளவு (Minimum Dose with Maximum effect)கணிக்கப்படும்.
3.Phase -II : (SAFETY& EFFICACY)
இந்த முயற்சியில் 100 முதல் 300 பேர் வரை வயது வரம்பை தளர்த்தி (20 -85) ஒரு 3 முதல் 6 மாதங்கள் பரிசோதனை நடத்துவார்கள்.
4.Phase-III(Safety, EFFICACY, & EXTENDED ):
இந்த முயற்சியில் 3000 முதல் 5000 பேர் வரை வயது வரம்பு இல்லாமல் பரிசோதனை நடத்துவார்கள்.இதற்கு 1-5 வருடங்கள் வரை காலம் நிர்ணயிக்கப்படும்.
இதன் பிறகு மருந்து விற்பனைக்கு வரும்.
5.Post Clinical Trial 
இந்த நிலை ஒரு வேறுபட்ட பரிசோதனை முயற்சியாகும்.அதாவது மேற்கூறிய நான்கு பரிசோதனை நிலைகளும் முடிந்த பிறகு தடுப்பு மருந்து மார்க்கெட்டுக்கு வந்துவிடும். இருப்பினும் அதன் செயல்பாடுகளை ஒரு ஐந்து வருடத்திற்கு உன்னிப்பாக கவனிப்பார்கள். அதில் திரட்டப்படும் தகவல்களை வைத்து அதை மேலும் தொடரலாமா அல்லது வேண்டாமா என்ற முடிவுக்கு வருவார்கள் 
இப்போது ஒரு விஷயம் நாம் சிந்திக்கவேண்டும்.
கொரோனா என்பது ஒரு கொடிய நோயா  இல்லையா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இது வரை இந்த தொற்றுக்கு மருந்தும் கண்டுபிடிக்க படவில்லை என்று கிட்டத்தட்ட பத்து மாதங்களாக உலக சுகாதார நிறுவனம் உட்பட மருத்துவ உலகமே கையை விரித்தபடி நிற்கிறது.நிவாரணத்தை கண்டுபிடிப்பதைவிட தடுப்பூசியை கண்டுபிடிப்பதில்தான் உலக மருத்துவ வர்த்தகர்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றனர்.எல்லாமே வர்த்தக மயம். 
வந்த கொரோனாவை நிவர்த்திக்க மருந்தில்லை.
ஆனால் இனி வரப்போகும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிப்பதிலிருந்து அதை விற்பனைக்கு கொண்டு வருவதில் இத்தனை அவசரம் காட்டுவது ஏன்?
நிவாரண மருத்துவத்தில் அல்லது சிகிச்சையில் அவசரம் காட்டுவதைவிட தடுப்பு மருந்தில் காட்டும் அவசரம் எவ்வளவு ஆபத்தானது என்பது மருத்துவ உலகத்துக்கே தெரியும்.ஆனாலும் வர்த்தக எண்ணம்.
திடீரென்று ரஷ்யா அரைகுறையான நிலையில் வேக்சினை விற்பனைக்கு வெளியிடுவதாக பிரதமர் புட்டின் மூலம் அறிவிப்பு வெளியாக்கி உலக பொருளாதாரத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர். அவர்களது நோக்கமும் அதுதானே தவிர தடுப்பு மருந்து வெளியிடுவதல்ல.
இந்தியாவும் டிசம்பர் மாதம் வேக்சினை வெளியிடப்போவதாக பயமுறுத்துகிறார்கள்.
இப்படி இவர்கள் பயமுறுத்துவதை பார்த்தால் ஏதாவது ஒரு நோக்கமாக இருக்குமோ  என்று அச்சமாக இருக்கிறது. 











திங்கள், 17 ஆகஸ்ட், 2020

தேனின் அற்புதங்கள் -2-ராயல் ஜெல்லி

 ராயல் ஜெல்லி 

படம் 1

தேனீயின் அற்புதங்களில் தேனுக்கு அடுத்தபடியானது ராயல் ஜெல்லி ஆகும். இது மனித உபயோகத்தில் தேனுக்கு அடுத்தபடி என்றாலும் சில காரியங்களில் இது தேனையும் மிகைத்ததாகும்.
தேனீக்களில் ராணித்தேனீயின் பிரதான உணவு  ராயல் ஜெல்லியே.
பணியாள் தேனீயின் தொண்டை பகுதியில் உணவுக்குழாயின் வாய் (HYPO PHARYNX) பகுதியிலுள்ள ஒரு சுரப்பியிலிருந்து இது சுரக்கிறது. இது வெளிறிய நீளம் கலந்த வெள்ளை நிறத்தில் ஜெல்லி போல் இருக்கும். இதை தேனடை பால் என்றும் கூறலாம். இதில் தேனை விட அதிக நீர்ச்சத்து இருப்பதால் (67%) தேன் போன்று இது கெட்டித்தன்மை உடையது அல்ல.சீக்கிரம் தேன் போன்று உறையாது. 
ராணித்தேனீயானது தன் வாழ்நாளில் ஒரு நாளைக்கு 2000 முட்டைகளை இடும் தன்மை கொண்ட வளமான சினை உறுப்புகளை கொண்டது.அதற்கு இவ்வளவு வளமான சினை உறுப்புகள் அமைவதற்கு காரணம் அது வாழ்நாள் முழுக்க உட்கொள்ளும் ராயல் ஜெல்லியே ஆகும்.
ராணித்தேனீ இடும் முட்டைகள் புழுக்களாக வெளியே வரும் போது பணியாள் தேனீ அதனை புழுப்பருவத்திலேயே ராணிப்புழு, ராஜாப்புழு, பணியாள்புழு  என்று இனம் கண்டு பிரித்து தனித்தனி அறைக்குள் வைத்து விடுகிறது. (பார்க்க படம் 1)
இதன் பிறகு பணியாள் தேனீ புழுக்களுக்கு தன் தொண்டை பகுதியிலிருந்து சுரக்கும் இந்த பால் போன்ற ராயல் ஜெல்லியை புகட்டுகிறது.
அப்போது ராணிப்புழுவின் அறையில் மிகுதமாக ராயல் ஜெல்லியை சுரக்கிறது.இதனால் ராணிப்புழுவின் அறையில் மிகுதமாக ராயல் ஜெல்லி சேர்க்கிறது. இந்த நிலை மற்ற புழுக்களுக்கு கிடைக்காது.மற்ற புழுக்களுக்கு வாயில் புகட்டப்படும் ராயல் ஜெல்லியை தவிர அந்த அறைகளில் எதுவும் சேமிதமாகாது.
மேலும் மற்ற புழுக்களுக்கு மூன்று நாட்களுக்குத்தான் ராயல் ஜெல்லி புகட்டப்படும்.அதன் பிறகு அவற்றின் உணவு தேனாகத்தான் இருக்கும்.ராணித்தேனீக்கு மட்டும்தான் அதன் புழுப்பருவத்திலிருந்து இறுதிவரை ராயல் ஜெல்லி உணவாகப்புகட்டப்படும்.
அது இருக்கும் அறைகளில்தான் ராயல் ஜெல்லி சேமிக்கவும் படும்.
அதனால்தான் ராயல் ஜெல்லி விளைவிப்பவர்கள் செயற்கை தேனீக்கூடுகள் உண்டாக்கி அதில் நிறைய ராணித்தேனீக்களை உற்பத்தி செய்து அறைகளில் வைத்து விடுவார்கள்.பிறகு அவற்றிற்குள் பணியாள் தேனீக்களை விட்டு ராயல் ஜெல்லியை சுரக்கச்செய்வார்கள்.இதுபற்றி நாம் பின்னால் பார்க்கலாம்.
படம் 2
தேனீக்கள் மூன்று வகையாக ஒரு குடும்பமாக வசிக்கின்றன. ஒரு தேன் கூடு ஒரே  குடும்பத்தாலானது.
1.ராணித்தேனீ  :-இதுதான் தேனீ குடும்பத்தில் மிகப்பெரியதும் மிக நீண்ட ஆயுளையும் கொண்டதாகும்.
வளமான சூலகங்களை கொண்டது. தன் ஆயுட்காலத்தில் ஒருநாளைக்கு 2000 முட்டைகளை இடும் அபாரமான சக்தியுடையது அதன் சூலகம் . இந்த அபாரமான சக்தி ராணித்தேனீக்கு அது காலமுழுக்க உணவாக எடுத்துக்கொள்ளும் ராயல் ஜெல்லி மூலமாகவே கிடைக்கிறது.
ராணித்தேனீக்கு முள் இல்லாத விஷம் இல்லாத மென்மையான கொடுக்கு அதன் பின் புறம் இருக்கிறது. பொதுவாக ராணித்தேனீ கூட்டை விட்டு வெளிவருவதில்லை. எனவே இது மனிதர்களை கொட்டும் வாய்ப்பு அதிகமில்லை.ஆனால் மற்ற பூச்சிகளை இது திருப்பி திருப்பி கொட்டும். ஆனால் சாகாது.(படம் 2)
ராஜாத்தேனீ :-இதுதான் தேனீ குடும்பத்தில் அடுத்த பெரிய தேனீ எனினும் மிக குறைந்த ஆயுளை கொண்டது. இதற்கு கொட்டும் கொடுக்கு கிடையாது. ஆனால் இனச்சேர்கையில் மிகவும் வீரியமுடையது. இது தன் ஆயுளில் ஒரே ஒரு முறைதான் இனச்சேர்கையில் ஈடுபட முடியும். அந்த இனச்சேக்கையின் போது ஏற்படும் உச்ச கட்ட நிலையில் (CLIMAX) விந்து முழுவதும் பாய்ந்து வெளிப்படும் வேகத்தில் அதன் ஆணுறுப்புகள் வெடித்து (BURST) சிதைந்து தேனீ இறந்துவிடும் (படம்-2)
ராஜத்தேனீக்கு மூன்று நாட்கள்தான் ராயல் ஜெல்லி உணவாகப் புகட்டப்படும். பிறகு அதன் உணவு தேன்தான். எனவேதான் ஆண்மை விருத்திக்கு சிறந்தது ராயல் ஜெல்லியா அல்லது தேனா அல்லது இரண்டும் சேர்ந்த கலவையா என்ற கேள்விகளுக்கு சரியான விடைகள் இதுவரை இல்லை. எனினும் ராயல் ஜெல்லியும் தேனும் கலந்த கலவை என்பது ஒருவேளை சரியாக இருக்கலாம் .(படம் -2)
பணியாள் தேனீ :-
இதற்கு வீட்டு தேனீ அல்லது செவிலியர் தேனீ என்றும் கூறலாம்.இவை மலட்டு பெண் தேனீக்களாகும். இவை உருவத்தில் மிகச்சிறியவை என்றாலும் எண்ணிக்கையில் மிகைத்தவை. இவற்றின் பின்புறமிருக்கும் கூறிய முள் முனையுடைய கொடுக்கு விஷமுடையதாகும். இவை கோபமடைந்தால் மிகவும் வீரியமாக கொட்டும் தன்மை கொண்டவை. இவைதான் தேன் குடும்பத்தையே பாதுகாக்கும் பெண் வீராங்கனைகளாகும். இவை ஒரு முறைதான் கொட்டும். பிறகு இறந்துவிடும்.
இந்த செவிலியர் தேனீக்கள் மூன்று  குழுக்களாக மாறி மாறி பிரிந்து செயல்படும்.
ஒரு குழு வெளியே சென்று மலர்களில் இருந்து தேனை சேகரித்து வரும்.
மற்றொரு குழு அதை வாங்கி அடைகளில்  சேமித்து வைக்கும்.
மூன்றாவது குழு ராணித்தேனீ இடும் முட்டைகளை தனித்தனியாக முறையாக பிரித்து தனித்தனி அறைகளில் வைத்து போஷிக்கும்.ராயல் ஜெல்லியின் முக்கிய மூலப்பொருள்களில் ஒன்று மலர்களில் இருந்து தேனுடன் செவிலியர் தேனீ கொண்டுவரும் மகரந்த தூள் ஆகும்.இந்த மகரந்த தூள்தான் ராயல் ஜெல்லிக்கும் தேனுக்கும் கிடைக்கும் புரத மூலமாகும் (Protein Source). இந்த செவிலியர் தேனீயின் தொண்டை பகுதியில் இருக்கும் உணவுக்குழாயின் ஆரம்ப பகுதிக்கு முன் உணவுக்குழாய் (PHARYNX) என்று பெயர்.இதன் அடிப்பகுதியில் (HYPOPHARYNX) இருக்கும்  சுரப்பியில் இருந்துதான் ராயல் ஜெல்லி சுரக்கிறது. தேன் என்பது செவிலியர் தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கப்படுகிறது. ராயல் ஜெல்லி என்பது  தொண்டைப்பகுதியில் இருந்து சுரக்கப்படுகிறது.(படம் 2)
ராயல் ஜெல்லியின் சத்து கூறுகள் :-
நீர்ச்சத்து                                         =67%
புரதம்                                               = 13%
எளிய சர்க்கரைச்சத்துக்கள்  =12%
(க்ளூகோஸ் & ∴ப்ரக்ட்டோஸ்)
கொழுப்பு அமிலங்கள்             =06%
ஹைட்ராக்சி டெக்னோயிக்
                                        அமிலம்  =02%
கிருமிஎதிர்ப்பான்கள்                =சொற்பம் 
வைட்டமின் B5 & B6                   =சொற்பம்
வைட்டமின் C                            =சொற்பம் 
ராயல் ஜெல்லியில் தேனைப்போல் கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள் (A, D, E,&K) எதுவும் கிடையாது.
புரதம்தான் ராயல் ஜெல்லிக்கு பிரதான உணவு மதிப்பீட்டை கொடுக்கிறது.
ராயல் ஜெல்லி தயாரிப்பு :-
பலகையில் செற்கையான முறையில் செய்யப்பட்ட தட்டு தட்டாக உருவி எடுக்கக்கூடிய வகையில் தேன் கூடுகள் பலகையில் இருக்கின்றன.ஒவ்வொரு தட்டிலும் பல அறைகள் இருக்கும்.அந்த அறைகள் ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் 4நாட்கள் வயதுடைய ராணிப்புழுக்களை வைப்பார்கள். மேலும் அதற்குள்  18 நாட்கள் வயதுடைய செவிலி தேனீக்களை போகவிடுவார்கள். அவை ராணிப்புழுக்கள் இருக்கும் அந்த கூடுகளில் ஏராளமான ராயல் ஜெல்லியை சுரக்கும்.
நல்லமுறையில் செயல்படுத்தப்பட்ட ஒரு ராணித்தேனீயின் அறையில் 5 இலிருந்து 6 மாதத்திற்குள் 600கிராம் ராயல் ஜெல்லியை சேகரிக்க முடியும்.
ராயல் ஜெல்லி மனிதப்பயன்பாட்டிற்கு உகந்ததா?
ராயல் ஜெல்லியை  மனிதர்கள் பயன்படுத்தும் போது எவ்வளவு பலன் கிடைக்கிறது என்பதுபற்றி ஒரு சிலவற்றை தவிர அதிகம் குழப்பமான நிரூபணமாகாத தகவல்களே கிடைக்கின்றன.
 ராயல் ஜெல்லியின் சத்துக்கூறுகளில் புரதங்கள் கொழுப்பு அமிலங்கள் விட்டமின்கள் தாது உப்புக்கள் என்று ஏராளமாக இருந்தாலும் பெரும்பாலும் அவை சொற்ப ஒரு தேனீக்கு உரிய அளவுகளிலேயே இருக்கின்றன. 
ராயல் ஜெல்லியில் இருக்கும்  கொழுப்புகள் இதயத்தையும் இரத்த ஓட்டத்தையும் பாதுகாப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
இன்னும் ராயல் ஜெல்லியின் புரத மற்றும் கொழுப்பு சத்துக்கள் ஆண்மை விருத்திக்கு நல்லது என்கிறார்கள்.
மாதவிடாய் நின்ற பிறகு உண்டாகும் சில அசெளகர்யங்களை இலேசாக்குவதாக கூறுகிறார்கள்
சரியாக நிரூபிக்கப்படாத பயன்கள்:-
1.நீரிழிவு கால் புண்கள் (DIABETIC FOOT ULCERS):-  சில பழைய ஆய்வுகளின் படி ராயல் ஜெல்லி மற்றும் பந்தனால் (PANTHENOL) கலந்த கலவையை களிம்பாகவோ கிரீமாகவோ தயாரித்து தினமும் ஆறுமாதத்திற்கு புண்ணை சுத்தமாக்கி அதன் கழிவு திசுக்களை அகற்றியபின் இட்டு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள்.
2.மலட்டுத்தன்மை (INFERTILITY):
Asthenozoospermia என்ற நிலை ஆணின்  விந்து பெண்ணின் யோனிக்குள் சரியான வேகத்துடன் ஊர்ந்து செல்ல முடியாமல் போய் கருத்தரிக்கமுடியாத நிலை ஆகும்.ஒரு பழைய ஆய்வின்படி ராயல் ஜெல்லி,தேன்,மற்றும் மகரந்தம் ஆகியவற்றை கலந்து பெண் யோனியின் உள்ளும் புறமும் இரண்டு வாரங்களுக்கு தடவினால் நல்ல பலன் கிட்டும் என்று கூறப்படுகிறது.
3.கொலஸ்ட்ராலை குறைக்கிறது 
4.ஒவ்வொரு மாதவிடாய்க்கு முன் ஏற்படும் அசெளகர்யங்களை இலேசாக்குகிறது.ராயல் ஜெல்லி ,மகரந்தம் மற்றும் சூலக சாறு இவை கலந்த மருந்தை இரண்டு மாதவிடாய் காலங்களுக்கு சாப்பிட்டுவரவேண்டும்.
5.ஆஸ்த்மா 
6.கல்லீரல் பிரச்சினைகள் 
7.கணைய வீக்கம் 
8.தூக்கமின்மை 
9.வயிற்றுப்புண் 
10.சிறுநீரக வியாதிகள் 
11.எலும்பு பலகீனம் மற்றும் எலும்பு முறிவு 
12.தோல் வியாதிகள் 
13.வழுக்கை 
14.நோய் எதிர்ப்புசக்தி குறைவு 
பாதுகாப்பு எச்சரிக்கைகள் :-
1.ஆஸ்துமா நோயாளிகள் ராயல் ஜெல்லி மற்றும் அதனுள் அடக்கிய தயாரிப்புகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.ஒருவேளை ஒவ்வாமை ஏற்பட்டால் மூச்சு முட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
2.தொண்டை அடைப்பு போன்ற ஒவ்வாமை கிரியைகள் உண்டாகலாம் 
3.பொதுவாக ராயல் ஜெல்லி சருமத்திற்கு நல்லது என்றாலும் தலை தோலுக்கு பெரும்பாலும் ஒவ்வாமை உண்டாக்கும்.
4.தொண்டையில் அலர்ஜி ஏற்படலாம் 
5.ராயல் ஜெல்லி இரத்த அழுத்தத்தை குறைப்பதால் பிரஷர் மாத்திரை சாப்பிடுபவர்கள் அதனுடன் ராயல் ஜெல்லியையும் சாப்பிடக்கூடாது.
6.தோல் அழற்சி மற்றும் வீக்கம்  உள்ளவர்கள் ராயல் ஜெல்லியை சாப்பிடவேண்டாம் 
சிலருக்கு ராயல் ஜெல்லி வயிற்றுவலி மற்றும் வயிற்று போக்கை உண்டாக்கலாம்.
முரண்பாடுகள் (CONTRAINDICATIONS)
1.Warfarin-இரத்த உறைவு எதிர்ப்பான் 
2.B.P.மருந்துகள் 
3.Co-Enzyme-Q
4.மீன் எண்ணெய் 
5.கேசின் புரதம் -அமினோ அமிலங்கள் 
6.எல்.ஆர்ஜினின் -       ,,          ,,
7.Lycium                    -        ,,          ,,
8.Stinging Nettle        - தொட்டால் எரிச்சலூட்டும் செடி 
9.Theanine                 -   அமினோ அமிலம் 
நிரூபிக்கபட்ட பயன்கள் :-
1.நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் ராயல் ஜெல்லி 150 மிகி தினசரி எடுத்துக்கொள்வதால் உங்கள் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
2.ராயல் ஜெல்லி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது.
3.ராயல் ஜெல்லியில் ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் (ANTIOXIDANTS) அதிகம் இருப்பதால் புற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
4.ராயல் ஜெல்லி ஒரு சிறந்த அழற்சி நிவாரணி (ANTI-INFLAMMATORY) ஆகும்.
5.புரதச்சத்து நிறைந்தது.
6.ரத்த சர்க்கரையின் அளவுகளை சீராக்குகிறது.
7.நுண்ணுயிர் எதிர்ப்பானாகவும் (ANTIBACTERIAL) பயன்தருகிறது.
8.மாதவிடாய் நின்ற பெண்களுக்கு சுகம் தருகிறது.
தேனுக்கும் ராயல் ஜெல்லிக்கும்  உள்ள வேறுபாடுகள் :-







 


சனி, 8 ஆகஸ்ட், 2020

தேனின் அற்புதங்கள்

நீரிழிவு நோயாளி தேன் சாப்பிடும் அளவு 



தேன் ஒரு அற்புதமான பொருள் மட்டுமல்ல தேனீயின் வாழ்க்கையும் அது தேனை உருவாக்கும் விதமும் கூட மிகவும் அற்புதமாக இருக்கிறது.
அது பற்றி விரிவாக பார்ப்பது இக் கட்டுரையின் நோக்கமல்ல.அதை ராயல் ஜெல்லி என்ற தலைப்பின் கீழ் பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த கட்டுரையில் தேனை பற்றிய பொது விவரங்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றி மட்டும் பார்க்கலாம் 
தேன் ஒரு கெட்டியான வழுவழுப்பான தன்மை கொண்ட பழுப்பு நிற திரவமாக 
Apis mellifera என்ற தேனீக்களால் தேன் கூடுகளில் சுரக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது.
தேனை சேகரிப்பதற்காக ஒரு வேலையாள் தேனீ தன் கூட்டிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர்  வரை பிரயாணிக்கிறது.
வழியில் மலர்களினால் அது கவரப்படும் போது மலரின் சூலகங்களில் இருந்து அது மதுவை உறிஞ்சுகிறது.அத்துடன் மலரின் மகரந்தங்களும் ஒட்டிக்கொள்கின்றன.இந்த மகரந்தங்கள் மலர் மது தேனாக மாறும்பொழுது அதற்கு புரதச்சத்தை அளிக்கின்றன. ஒரு தேனீ தன் வாழ்நாளில்  ஒரு தேக்கரண்டியில் (5மில்லி) பன்னிரண்டில் ஒரு பங்குத்தேனை கொண்டுவந்து தேனடையில் சேமிக்கிறது.
உண்ணப்படும் மலர் மது தேனீயின் வயிற்றின் ஒரு பகுதியில் உணவாக செரிமானம் அடைகிறது இன்னொரு பகுதியில் தேனாக மாறுகிறது 
தேனீ மலர் மதுவெடுத்து  கூட்டுக்கு திரும்ப தொடங்கும்பொழுதே அதன் வயிற்றில் மதுவை தேனாக மாற்றும் தொழில் நுட்பம் ஆரம்பமாகிறது.
அதாவது அதனுடன் ஏராளமான பொருட்கள் அதாவது நொதிகள்,வைட்டமின்கள்,தாது உப்புகள் ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் (ANTIOXIDANTS),போன்றவை சேர்க்கப்பட்டு ஏறக்குறைய 18% நீர்ச்சத்தில் 80% பொருட்கள் அற்புதமாக கரைக்கப்பட்டு ஒரு அதிசய அடர் கரைசலாக அது மாறுகிறது.
இந்த அடர் கரைசல் வேலையாள் தேனீயின் வாய் மூலமாக கூட்டு தேனீயின் வாய்க்கு மாற்றப்பட்டு தேனடையில் வைக்கப்படுகிறது. கூட்டுத் தேனீயானது தன் சிறகை தேனின் மீது விசிறி போல் விசிறி தேன் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி 18% ஆக இருக்கும் நீர்ச்சத்தை 36%அதிகரிக்கச்செய்கிறது .பிறகு அந்த தேனுக்கு மேல் மெழுகை பூசி மேலும் காற்று உட்புக முடியாமல் அடைத்து விடுகிறது.
தேனை நீரிழிவு நோயாளி கையாளும் முறை :-
(சுத்தீகரிக்கப்படாத கச்சா தேன்)
100 கிராம் தேன் :-
மொத்த சர்க்கரை பொருள் =80கி (80%)
பழ சர்க்கரை   (FRUCTOSE)  =40கி 
க்ளூகோஸ்    (GLUCOSE)     =35கி 
சுக்ரோஸ்   (SUCROSE)          =5கி 
க்ளுகோஸ் (சுக்ரோஸிலிருந்து)=3கி
மொத்த க்ளூகோஸ் (n)  35+3     =38  கி 
GI   (தேன்)                                         =55
எனவே தேனின் GL (100gm)       =[nxGI]/100
                                 =[38x55]/100    =20.9❌            100gm தேனின் GL                        =20.9
ஃ 40gm தேனின் GL  = [20.9/100]x40=9✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி சுத்தமான கச்சா தேனை ஒருநாளைக்கு 40கிராம் வரை சாப்பிடலாம்.
அதாவது ஒரு மேஜை கரண்டி (10மில்லி)வீதம் ஒரு நாளைக்கு நான்கு முறை சாப்பிடலாம் 

தேன் மூன்று வகைகளாக கடைகளில் கிடைக்கிறது.
கச்சா தேன் வடிகட்டப்படாத 100% சுத்தமான தேன்.இதில் மலர் மகரந்தம் மேலும் தேன் பாகு அழுக்குகள் போல் மிதக்கும்.இதில் இயற்கை பழச்சர்க்கரையும் க்ளுகோஸும் (NATURAL FRUCTOSE & GLUCOSE)சேர்ந்து மொத்தம் 80% இருக்கும்.கரும்பு சர்க்கரை(SUCROSE) 5% இருக்கும்.இவைகளுடன் வைட்டமின்கள்,தாது உப்புகள்,அமினோஅமிலங்கள் நொதிகள் என்று ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கும்.நீர்ச்சத்து 35% இருக்கும்.தேனை திறந்து வைத்தால் அது காற்றிலிருந்து நீரை உறிந்து நீர்த்து போகும்.இந்த வகை தேனின் GI மதிப்பு 35-55 வரை இருக்கும்..எனவே ஒரு நீரிழிவு நோயாளி இதை அளவுடன் (40கிராம்) தினசரி சாப்பிடலாம்.
வடிகட்டப்பட்ட கலப்படத்தேன் 
இந்த வகை தேனில் பழச்சர்க்கரை அதிகம் கலக்கப்பட்ட (HIGH FRUCTOSE CORN SYRUP)கார்ன் சிரப் மற்றும் க்ளூகோஸ் அல்லது இரண்டில் ஏதோ ஒன்று சேர்த்திருப்பார்கள்.இது தெளிவான வெளிறிய நிறத்தில் இருக்கும்.அதிக இனிப்பு  இருக்கும்.இதிலிருந்து தேன் பாகை(MOLASSES) வடிகட்டி நீக்கி இருப்பார்கள்.அதோடு ஏராளமான சத்துக்களும் நீங்கி இருக்கும்.இது நீரிழிவு நோயாளிக்கு நல்லதல்ல.
பாஸ்டியுரைஸ் பண்ணப்பட்ட தேன் 
இதை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.இருப்பினும் ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு கொடுக்கக்கூடாது.
இது கச்சா தேனாக இருந்தால் இதில் சத்துக்கள் குறைவாக இருக்கும் 
மற்ற தேனாக இருந்தால் அதில் சத்துக்களே இருக்காது.
பொதுவாக தேனில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் (A,D,E & K) என்று எதுவும் கிடையாது.
தேனை கடைகளில் வாங்கும் போது அதன் தோற்றத்தை கவனிக்கவும்.
அதன் லேபிளில் உள்ள சத்துக்கள் அட்டவணையை கவனிக்கவும்.மொத்த சர்க்கரை அளவு 70-80%வரை இருக்கிறதா என்று கவனிக்கவும்.80%மேலிருந்தால் அதில் வெளிசர்க்கரைகளை (ADDED SUGARS) சேர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.
புரதங்கள் வைட்டமின்கள் தாது உப்புகள் நொதிகள் இவை எதுவுமே அட்டவணையில் குறிக்கப்படவில்லை என்றால் அந்த தேன்  சுத்தமான தேன் அல்ல என்று அர்த்தம்.
பொதுவாக தேனை சூடான பானங்களில் கலக்கும் போது 130டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் சூடு போகக்கூடாது.72டிகிரி செல்ஸியஸ்க்கு மேல்  (130 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் ) சூடாக்கும்போது பொதுவாக பெரும்பாலான நுண்கிருமிகள் அதில் இறந்துவிடலாம்.ஆனால் முக்கியமான நொதிகளும் சிதைந்து விடலாம்.தேனின்.அதிக அமிலத்தன்மை உள்ள எந்த பொருளையும் பாஸ்டியுரைஸ் செய்யும் பொழுது 130 டிகிரிக்கு பாரன்ஹீட்டுக்கு கீழ் சூடாக்கினால் போதும்.தேன் அதிக அமிலத்தன்மை உடையது.எனவே அதை உயர் வெப்பங்களில் அதிக நேரம் சூடாக்கத்தேவையில்லை. மேலும் தேனை நேரடியாக நெருப்பில் வைத்து சூடாக்காமல் நீரிலோ அல்லது நீராவியிலோ வைத்து சூடாக்க வேண்டும்.
பாஸ்டியுரைஸ் செய்யப்பட்ட தேன் நல்லதுதான் ஆனால் கச்சா தேனாக இருக்கவேண்டும்.
தேனை கொண்டு சில சிகிச்சைகள் 
1.உடற்கொழுப்பை கரைக்க :-
இளம் சூட்டில் வெந்நீர் (40degC) =1கப் 
சுத்தமான தேன்                         =2டீஸ்பூன்
கலந்து காலையில் வெறும் வயிற்றில் தினசரி அருந்தவும்  
2.இருமல் & தும்மல் 
இளசூடான தேநீர் டிகாக்க்ஷன் =1கப் 
சுத்தமான தேன்            =1டேபிள்ஸ்பூன் 
லெமன் ஜூஸ்              =2   ,,    ,,
இஞ்சி சாறு                     =2  ,,    ,,
கலந்து தினமும் இரவு படுக்கும் போது  அருந்தவும் 
தோல் அரிப்பு,வெடிப்பு காயம் மற்றும் பரு போன்றவற்றிற்கும் தேனை பயன்படுத்தலாம்.காரணம் தேனிலிருக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஒரு கிருமி நாசினி ஆகும்.
தேனை தோல் ஈரப்பத்திற்காகவும் (Skin moisturizer) பயன்படுத்தலாம்.
தேன் ஒரு சிறந்த நுண்ணுயிர் எதிர்ப்பான் (Antibacterial) ஆகும்.
இதை உணவுப்பாதுகாப்பானாகவும் (Preservative) ஆகவும் பயன்படுத்தலாம்.
தேனின்  குறைபாடுகள் 
1.எல்லா பொருட்களிலுமே நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும் இது இயற்கையின் விதி.எந்த ஒரு பொருளையும் கணக்காக பயன்படுத்தினால் அதில் நன்மைகள்  உண்டு. கணக்குக்கு மீறினால் அதில் தீமைகளும் உண்டு.தேனும் அதற்கு விதி விலக்கல்ல.
சுத்தமான கச்சா தேனை 1 வயதுக்கு  கீழ்ப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. காரணம் அதில் க்ளஸ்டரிடியம் போடூலினம் (C.Botulinum) என்ற கிருமி அசுத்தமாக இருக்கலாம் .இது 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்திவிடாது எனினும் 1 வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளை கீழ் கண்டவாறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம் :-
1.மலச்சிக்கல் (முதல் அறிகுறி)
2.அழ முடியாமல் பலவீனம் அடைதல் .பரிதவித்தல் 
3.சதை பலவீனம் (தவழ முடியாமை)
4.கட்டுப்படுத்தமுடியாமல் தலை ஆடுதல் 
5.எரிச்சல்,கோபம்,நிலை கொள்ளாமை 
6.அதிக எச்சில் அல்லது கோழை வடிதல்  (Drooling)
7.கண் மேல் இமை கீழ்நோக்கி கவிழ்தல் (Drooping Eye lids)
2.பதப்படுத்தப்பட்ட (Artificially Processed) தேனிலிருந்து அதன் பாகுத்தன்மையை (Molasses)வடிகட்டி நீக்கிவிடுவார்கள்.அதோடு அந்த தேனின் மற்ற நன்மைகளும்,வைட்டமின்கள் தாதுக்கள்,நொதிகள் புரதங்கள்,பைட்டோகெமிக்கல்கள் இவை எல்லாமே அதோடு நீங்கிவிடும்.மேலும் கார்ன் சிரப் போன்ற கூடுதல் சர்க்கரை வகைகளை சேர்ப்பார்கள்.அசல் தேனை விட இது தெளியாகவும் அழகாகவும் சுவையாகவும் இருந்தாலும் இதில் தேனின் பலன் கிடையாது.
சாதாரணமாக பதப்படுத்தாத தேனில் 21கிராமுக்கு 17கிராம் மொத்த சர்க்கரை இருக்கும்.அதாவது 80%.இதற்கு கூடுதலாக இருந்தால் அந்த தேன்  பதப்படுத்தப்பட்டதாகும்.
3.தேன் தோல் மற்றும் தலை மயிருக்கு ஈரப்பதம் தருவதில் மிகவும் சிறந்தது ஆனால் தேனை தலையில் தடவிக்கொண்டு வெய்யில் படும்படி நின்றால் தலை முடி நரைத்துவிடும்.காரணம் தேனிலிருக்கும் க்ளூகோஸ் ஆக்சிடேஸ் என்ற நொதி க்ளூகோஸை ஹைட்ரஜன் பெராக்சைடாக மாற்றுவதால் இந்த விளைவு ஏற்படும்.
எனவே தேனை பயன்படுத்த தெரிந்த முறையில் பயன்படுத்தினால் அதில் நன்மை நிச்சயம் உண்டு .
                                    👪 



சனி, 1 ஆகஸ்ட், 2020

சாப்பிடவேண்டிய இனிப்பின் அளவை கணக்கீடு செய்யும் முறை

GI - GL  அட்டவணையைக்கொண்டு சாப்பிடவேண்டிய இனிப்பின் அளவை கணக்கீடு செய்யும் முறை 

சில சமயங்களில்  GL -GI அட்டவணைகளில் GL -GI தரப்பட்டிருக்குமே தவிர அந்த இனிப்பின் அளவு இத்தனை கிராம் என்ற குறிப்பு  இருக்காது .அதை நாமே தரப்பட்டிருக்கும் GI -GL மதிப்பீடுகளை வைத்து சூத்திரமுறையில் கீழ்கண்ட மாதிரியில் கண்டிருப்பதைப்போல் கணக்கீடு செய்துகொள்ளலாம்.
பொதுவாக கீழ்கண்டவாறு நாம் அளவீடுகளை வரையறுப்போம் 
சர்க்கரை குறியீட்டு எண்      =GI 
சர்க்கரை ஏற்று திறன்            =GL 
செயல்படும் சர்க்கரை (n)      =?
              சூத்திரம்               n      =[GL /GI ]x 100
மாதிரி -மாம்பழம் (மீடியம் ):-
GI                                                          =56
GL                                                         =18.9
மீடியம் சைஸ் மாம்பழம் என்பதை எந்த அளவீட்டில் கணிப்பது?அதை கணித்தால்தான் GL -18.9 என்பதை பத்துக்கு கீழ் (<10) கொண்டுவர முடியும்.
அதற்கு கீழ்கண்ட முறையை பயன்படுத்தலாம் 
செயலில் உள்ள சர்க்கரை அளவு 
                                n    =[GL /GI ]x 100
                                n    =[18.9/56] x 100
                                n    = 33.75gm 
இனி கூகுள் தேடுதலில் கீழ்கண்டவாறு தேடவும் 
33.75gm செயலில் உள்ள சர்க்கரை 
(ACTIVE CARBS)இருக்கும் மொத்த மாம்பழத்தின் அளவு               =225gm  (கூகுள் தேடுதல்)                 
எனவே GL18.9  க்கு                   225gm 
ஃ GL9 க்கு  [225/18.9]x 9              107gm 
ஆகவே ஒருநீரிழிவு நோயாளி மாம்பழத்தை 100-107gm  வரை சாப்பிடலாம் (2நாட்களுக்கு ஒருமுறை) 

வெள்ளி, 24 ஜூலை, 2020

வெள்ளை சர்க்கரை யும் இனிப்பு பண்டங்களும்

வெள்ளை சர்க்கரையும் இனிப்பு பண்டங்களுக்கு GL கணக்கிடுதலும் 

வெள்ளை சர்க்கரை :-
GI                                                        = 63
GL (ஒரு டேபிள் கரண்டி-10gm) =06
மேலே உள்ள அளவீட்டின்படி வீட்டில் தேநீருக்கு உபயோகிக்கும் வெள்ளை சர்க்கரையை (Table Sugar) தினசரி ஒரு நீரிழிவு நோயாளி ஒரு மேஜை கரண்டி வரை பாதுகாப்பாகசாப்பிடலாம்.காரணம். இதன் GI மதிப்பீடு 63 (மத்திமம்)  தான். அதாவது இரத்தத்தில் 50gm சுத்தமான க்ளூகோஸ் எந்த அளவு சர்க்கரையை உயர்த்துமோ அதில் 63%தான் 50gm வெள்ளை சர்க்கரை உயர்த்தும்.அதேபோல் நாம் உபயோகிக்கும் 10gm (one table spoon)வெறும் 6%தான் உயர்த்தும்.எனவே தான் இதன் கிளைசீமிக் லோடு(GL) வெறும் 6ஆகும் அதாவது 10க்கு கீழ் இருப்பதால் பாதுகாப்பானது.வெள்ளை சர்க்கரை க்ளூகோஸை விட இனிப்பானது எனினும் அதற்கு அவ்வளவு இனிப்பு கொடுப்பது அதிலிருக்கும் பழச்சர்க்கரை (FRUCTOSE) ஆகும்.
இப்போது நாம் பார்க்கப்போவது கூகிள் தேடுதலில் கிடைக்காத ரசகுல்லா குலாப்ஜாமூன்,கோதுமை அல்வா போன்ற பண்டங்களின் சர்க்கரை ஏற்று திறனை (GL) எப்படி கணக்கிடுவது என்பது.இதற்கு அந்த பண்டங்களின் கலவை பொருட்களில் உள்ள 
மாவுப்பொருட்களுக்கு மட்டும் தனித்தனியாக GL -ஐ கணக்கிட்டு அதை கூட்டிவரும் விடைதான் அந்த பண்டத்தின் GL ஆகும். 
உதாரணங்கள் :-
ரசகுல்லா :(50gm)
ரசகுல்லாவின் மூலப் பொருட்களில்  முக்கிய சர்க்கரை பகுதிகள் இரண்டு.
1.பாற்கட்டி (பன்னீர் அல்லது கெட்டியாக்கப்பட்ட தயிர் )
2.வெள்ளை சர்க்கரை 
இவற்றின் GL காலை மட்டும் தனித்தனியாக கணக்கிட்டு அவற்றை கூட்டினால் கிடைக்கும் விடையே ரசகுல்லாவின் அந்த குறிப்பிட்ட எடையின் GL ஆகும்.
1.பாற்கட்டி (Chhena)                           ....50gm
மொத்த மாவுச்சத்து                        ....15gm
நார்ச்சத்து                                            =0
மீதி மாவுச்சத்து  (n)   15-0               =15gm 
GI                                                              ....27
GL=[nxGI]/100=[27x15]/100                    = 4.05
2.வெள்ளை சர்க்கரை                      ....10gm 
 மொத்த மாவுப்பொருள்                =10gm 
நார்ச்சத்து                                           =0gm 
மீதி மாவுப்பொருள்(n)  10-0          =10gm 
GI                                                            =63
GL =[nxGI]/100= [10x63]/100               =6.3
எனவே ரசகுல்லாவின் GL 
                           =4.05 + 6.3                 =10.35✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி எப்போதாவது விசேஷங்களில் 50gm வரை ரசகுல்லாவை சுவைக்கலாம்.
குலாப் ஜாமூன்  (50gm)
1.வெள்ளை சர்க்கரை =20gm
மொத்த கார்போஹைட்ரேட் =20gm 
நார்ச்சத்து                                       =0
மீதி கார்போஹட்ரேட் (n) 20-0=20gm 
GI   (வெள்ளை சர்க்கரை)            =63                                                 
GL =[nxGI]/100=[20x63]/100            =12.6
2.பால்பொடி 
மொத்த மாவுச்சத்து(பால்பொடி)=20gm 
நார்ச்சத்து                                             =0gm
மீதி மாவுச்சத்து (n)             20-0        =20gm 
GI (பால்பொடி)                                      =45
GL =[nxGI]/100=[20x45]/100                    =9
GL (sugarpart)+GI (milkpart)   12.6+9      =21.5
50கிராமுக்கு GL                                    =21.5
ஃ20கிராமுக்கு      [21.5/50]x 20            =8.6✔️
ஒரு நீரிழிவு நோயாளி குலாப் ஜாமூனை 20gm வரை விசேஷங்களில் சாப்பிடலாம் 
கோதுமை அல்வா (100gm )
மொத்த மாவுச்சத்து               =28gm 
சர்க்கரை                                     =20gm 
நார்ச்சத்து                                   =0
மீதி மாவுச்சத்து     28-20-0     =08gm 
1.வெள்ளை சர்க்கரை :-
GL  (20gm க்கு)                              =12.6
(ரசகுல்லாவில் கணக்கிடப்பட்டது.அதை அப்படியே இங்கு எடுத்துக்கொள்ளலாம்)
2.கோதுமை  (08gm)
மாவுச்சத்து  (n)                              =8gm 
GI                                                         =54
ஃGL (8கிராமுக்கு)=[nxGI]/100=[8x54]/100=4.32
எனவே மொத்த ஹல்வாவிற்கும் GL 
              =12.6+4.32                             =16.92
100கிராமுக்கு GL                           ≃17
ஃ50கிராமுக்கு                                ≃8.5✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி ஏதாவதொரு விசேஷ நாளில் 50கிராம் வரை கோதுமை அல்வாவை உண்ணலாம் 
இதில் கோதுமைக்கு பதில் மைதா (வெள்ளை மாவு)சேர்த்திருந்தால் ,
GI                                                      =71
GL =[nxGI]/100 =[8x71]100            =5.6
மொத்த GL  =12.6+5.6                  =18.6
100கிராமுக்கு  GL                        =18.6
ஃ  50கிராமுக்கு       18.6/2           =9.3✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி விசேஷ நாட்களில் மைதா அல்வாவை 50கிராம் வரை சாப்பிடலாம்.
மேல் கண்ட உதாரணங்களிலிருந்து நீங்கள் தயாரிக்கும் எந்த ஒரு இனிப்பு பண்டத்திற்கும் GL கணக்கிடுவதற்கு  அதன் மூலப்பொருட்களில் உள்ள மாவுப்பொருட்கள் மற்றும் சர்க்கரை அல்லது தேன் போன்ற எந்த ஒரு சர்க்கரை பொருளுக்கும் தனித்தனியாக GL கணக்கிட்டு பிறகு அவற்றை கூட்டிவரும் கூட்டுத்தொகையே அந்த பண்டத்தின் GL ஆகும்
இனிப்பு பண்டங்களின் GI பட்டியலுக்கு இங்கே க்ளிக் செய்யவும் 

                             




அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...