புதன், 22 ஜனவரி, 2020

சிறுநீரக கோளாறு -3-நாட்பட்ட சிறுநீரக கோளாறு (CKD)

நாட்பட்ட சிறுநீரக கோளாறு(CKD)&இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு(ESKD)

படம் 1
இந்த பதிவில் நாட்பட்ட அல்லது நீண்டகால சிறுநீரக கோளாறு பற்றி பார்க்கலாம்.
நாட்பட்ட சிறுநீரக கோளாறு குறுகிய கால கோளாறு போல் இல்லாமல் சிறுநீரகம் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக செயலிழப்பது.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முதன்மையான இரு காரணங்கள் 1.நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம் 2.நாட்பட்ட சர்க்கரை மிகு நோய் (சர்க்கரை நீரிழிவு அல்லது ஹைப்பர் கிளைசீமியா-Hyperglycemia)
உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக இரத்த ஓட்டத்தை குறைத்து அதனால் சிறுநீரகம் நலிவடைந்து கோளாறுகளுக்கு ஆளாகும் 
உயர் சர்க்கரை நிலையில் சிறுநீரகத்தின் நெப்ரான்கள் (சிறுநீரக சுத்தீகரிப்பான்கள்)சேதமடைந்து இத்தகைய கொடிய நோயை உண்டாக்கும் 
மற்றபடி குறுகிய கால சிறுநீரக கோளாறை (AKD) உண்டாக்கும் அனைத்து காரணிகளும் இந்த நாட்பட்ட சிறுநீரக கோளாறுக்கும் (CKD) பொருந்தும்.

நாட்பட்ட சிறுநீரக கோளாறின் நிலைகள் :-

1.சாதாரண நிலை:இதில் சிறுநீரகத்தின் கழிவு நீக்கும் திறன் சாதாரண நிலையிலிருந்து அதி சாதாரண நிலைவரை இருக்கும்.இதை தொழில் நுட்ப மருத்துவ மொழியில் GFR-100 மில்லி/நிமிடத்திற்கு(மி/நி) என்று அளவீடு செய்யலாம்.
2.மித நிலை :-GFR- 60 to 99 மி/நி 
3.இடை நிலை A :- GFR:49 to 59 மி/நி 
   இடைநிலை B :- GFR :35 to 49 மி /நி 
4.கடுமை நிலை :-GFR :19 to 29 மி/நி 
5.இறுதி நிலை    :- GFR :19க்கு  கீழ் <19 19="" font="" nbsp="">
முதல் இரண்டு நிலைகளிலும் நாம் உடனேயே காலத்துடன் சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் இந்த கோளாறை சரிசெய்ய முடியும்.ஆனால் இந்த இரு நிலைகளிலும் நோய் எந்த அறிகுறியும் காட்டாது.எனவே சிகிச்சையிலிருந்து தவறலாம் 
மூன்றாவது நான்காவது நிலைகளுக்கு நோய் கடந்துவிட்டால் மீள்வது கடினம்.ஏனெனில் அந்த நிலைகளில் சிறுநீரகம் ஏறக்குறைய 50%க்கு மேல் தன் ஆரோக்கியத்தை இழந்திருக்கும். 

அறிகுறிகள் :-

CKD ஐ பொறுத்தவரை AKD போன்றே அறிகுறிகள் இருந்தாலும் அவை சிறிது சிறிதாகத்தான் வெளிப்பட துவங்கும் 
1.குமட்டல் வாந்தி பசி இன்மை ஜீரண கோளாறு 
2.பலவீனம் மன குழப்பம் 
3.களைப்பு, சோர்வு  
4.ஆரம்பத்தில் அடிக்கடி சிறுநீர் கழியும் பிறகு படிப்படியாக அது குறைந்து விடும் 
5.சிறுநீரில் நுரை மற்றும் இரத்தம் 
6.இதயத்தை சுற்றி நீர் காட்டுவதால் நெஞ்சு வலி மற்றும் இறுக்கம் 
7.நுரையீரலில் நீர் காட்டுவதால் மூச்சு முட்டுதல் 
8.நீர் இரத்தத்தில் தேங்குவதால் இரத்த அழுத்தம் உயர்தல் 
9.தூக்கமின்மை 
10.யூரிக் அமிலம் யூரியா மற்றும் பாஸ்பரஸ் கழிவுகள் உடலில் தேங்குவதால் தோலில் அரிப்பு உண்டாகுதல்.தோல் கறுத்தல்,படை சிரங்கு போல் செதில் செதிலாக தோல் மாறுதல் 
11.சதை வலி சுளுக்கு .
மேல் கண்ட அறிகுறிகள் அது சிறுநீரக கோளாறுதான் என்றில்லாவிட்டாலும் 
தீர பரிசோதித்துக்கொள்வது நல்லது.

காரணிகள் :-

1.சர்க்கரை நோய் (நாட்பட்ட)
2.நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம் 
3.சிறுநீரக குழாய்களில் தொற்று (Tubule Infections)
4.சிறுநீரக வடிகட்டிகளில் தொற்று (Glomerulonephritis)
5.முன் சிறுநீர் சேமிப்பு குழாயில் கோளாறு.இதனால் சிறுநீர் மீண்டும் சிறுநீரகத்தை நோக்கி திரும்பி பாய்தல் (Vesicoureteral Reflux)
6.சிறுநீரக கட்டிகள் (Renal cysts)
7.சிறுநீர் பின் குழாயில் அழுத்தம் மற்றும் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் (Pressure in urethra & enlarged prostate)
8.நாட்பட்ட சிறுநீரக தொற்று நோய்கள் 

இடர் காரணிகள் :-

1.முதுமை 
2.புகைப்பழக்கம் 
3.ஆல்கஹால் மற்றும் போதை வஸ்துக்கள் 
4.உடல் பருமன் (Obesity)
5.கவனிக்கப்படாத இதய மற்றும் இரத்தக்குழாய் கோளாறுகள் (உயர் இரத்த அழுத்தம்)
6.கவனிக்கப்படாத நாட்பட்ட சர்க்கரை நோய் 
7.பாரம்பரிய சிறுநீரக கோளாறுகள் 

சிக்கல்கள் (பழுதுகள்):-

பெரும்பாலும் கீழ்கண்ட பழுதுகள் இறுதிக்கட்ட சிறுநீரக கோளாறின் அறிகுறியாகும் 
படம்-2
சிறுநீரக்கோளாறுகள் பொதுவாகவே உடலின் அனைத்து  பாகங்களையும் தாக்க கூடியதாகும்.காரணம் ,
1.பொட்டாசியம் அளவு இரத்தத்தில் அதிகரித்தல் (இதய பாதிப்புகள் )
2.இரத்தத்தில் பாஸ்பரஸின் அளவு அதிகரித்தல் (தோல் பிரச்சினைகள் )
3.இரத்தத்தில் கால்ஷியம் அளவு அதிகரித்தல் (சிறுநீரக கல் ,எலும்பு பலஹீனம் மற்றும் இருதய கோளாறுகள்)
4.நீர் தேங்குதல் (நுரையீரல் மற்றும் இருதய வீக்கமுயற் இரத்த அழுத்தம் )
5.இரத்த சோகை 
6.பாலுணர்வு குறைபாடுகள்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை 
7.மூளை மற்றும் மத்திய நரம்புமண்டல பாதிப்புகள்.மன நலம் குன்றுதல் 
8.நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ,உடல் பல வித தொற்று நோய்களுக்கு ஆளாதல் 
9.இதய மேலுறை தொற்று நோய்-Pericarditis.
இதனால் பெரிகார்டிய பையில் நீர் தேங்கி இதயம் வீங்குதல் (படம் 2)

CKD யில் இரத்த சோகை கோட்பாடு(Anemia Concept) எரித்ரோபோய்டின்-Erythropoietin  (EPO):-

படம்-3
சிறுநீரகம் கழிவு உறுப்பாக மட்டும் செயல்படாமல் நம் உடலில்  இரத்த சிவப்பணுக்கள் சீராக இருக்க உதவும்  எரித்ரோபோய்டின் என்ற ஹார்மோனையும் உற்பத்திசெய்கிறது.இந்த வகையில் இது ஒரு நாளமில்லா சுரப்பியாக செயல்படுகிறது. படம் 3-இல் இது கீழ்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளது:-
1.சிறுநீரகத்திலிருந்து EPO வெளியாகிறது 
2.நேரடியாக இரத்த ஓட்டத்துடன் கலந்து எலும்பு மஜ்ஜைக்கு உத்தரவிடுகிறது 
3.எலும்பு மஜ்ஜை உத்தரவுப்படி சிவப்பணுக்களை இரத்த ஓட்டத்திற்குள் வெளியாக்குகிறது .
குழந்தை பருவத்தில் EPO 100% கல்லீரலிலிருந்து உற்பத்தியானாலும் வயது ஆக ஆக இந்த நிலை மாறி சிறுநீரகமே 90% EPO வை தயாரித்து இரத்தத்தில் வெளியிடுகிறது.எனவே வயதான காலத்தில் கல்லீரலின் EPO உற்பத்தி 10% கீழேயே இருக்கும் 
எனவேதான் இறுதி கட்ட சிறுநீரக செயலிழப்பில் EPO குறைபாட்டினால் சோகை மிக வேகமாக உண்டாகும்.
எரித்ரோபொயட்டின் அல்லது EPO கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் இருப்போருக்கும் குளிர் பிரதேசத்தில் வசிப்போருக்கும் அதிக அளவில் சுரக்கப்படும்.காரணம் இங்கு காற்று வெளியில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருக்கும் எனவே இரத்தத்திற்கு அதிக அளவு சிவப்பணுக்கள் தேவைப்படும் 

பரிசோதனைகள் :-

1.EPO அளவு :சாதாரணமாக இதன் அளவு 4 டு 40 IU /L இருக்கவேண்டும் 
2.இறுதி நிலை கோளாறை (ESKD )உறுதிப்படுத்த 24 மணிநேர சிறுநீர் பரிசோதனை அவசியம் 
3.கிரியாட்டினின் பரிசோதனை -இரத்தத்தில் இதன் அளவு சாதாரணமாக 0.7 டு 1.2 வரை இருக்கலாம் 
4.KIM பரிசோதனை 
மேலே  கூறிய அனைத்து பரிசோதனைகளையும் விட குறுகிய கால மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய்களை இந்த பரிசோதனையின் மூலம் மிக துல்லியமாக அறிய முடியும்.
KIM என்பது நோய்ப்பட்ட சிறுநீரக முன் சுருள் குழாயின் (PCT)உள்பகுதி தோலில் இருந்து உதிர்ந்து சிறுநீரில் வெளியாகும் மூலக்கூறு ஆகும் இது ஒரு புரத வகையை சேர்ந்தது 
இது சிறுநீரில் வெளிப்பட்டால் சிறுநீரகம் பழுதடைந்து இருப்பதாக அர்த்தம் 
நுண் ஆல்புமின் யூரியா பரிசோதனை :
இதுவும் ஓரளவு சிறுநீரக கோளாறை அறிய உதவும்.ஆல்புமின் என்பது இரத்தத்தில் இருக்கும் புரதமாகும் இது சாதாரணமாக சிறுநீரில் வெளியேறாது.ஆனால் சிறுநீரகத்தில் கோளாறோ அல்லது கிருமி தொற்றோ இருந்தால் இது சிறுநீரில் வெளியேறும் 

KIM மற்றும் நுண் அல்புமின்யூரியா பரிசோதனைகள் 24 மணி நேர சிறுநீர் பரிசோதனையில் தெரியவரும் 
எரித்ரோபோய்டின் சிகிச்சை 
இந்த வகை ஊசிகள் சிறுநீரக கோளாறின் போது ஏற்படும் சோகை நோயை சரி செய்ய நோயாளிக்கு தர வேண்டும் 
நோயாளி டயாலிசிஸ் செய்தாலுமோ அல்லது இல்லாவிட்டாலுமோ வாரம் மூன்று முறையாவது தர வேண்டும்.
டோஸ்களை டாக்டரே நிர்ணயிப்பார் 
ஹீமோகுளோபின் அளவு இரத்தத்தில் டெசிலிட்டருக்கு 10 கிராமுக்கு கீழே இரங்கத்துவங்கும் போதே சிகிச்சையை ஆரம்பித்துவிடவேண்டும் 
அதன் பிறகு டோஸை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ளலாம் 
டோஸேஜ் அளவு :- 50 டு 100 யூனிட்ஸ் /கிலோ கிராம் 
ரூட் :ஊசி மூலம் சிரையிலோ  (Intra venus) அல்லது தோலுக்கு ஒட்டிய சதைப்பகுதியிலோ(subcutaneous) செலுத்தலாம்.
ஹீமோடயாலிசிஸ் மற்றும் பெரிடோனியல் டயாலிசிஸ் பற்றி விரிவாக தனித்தனியான பதிவுகளில்  பார்க்கலாம் 

வெள்ளி, 3 ஜனவரி, 2020

சிறுநீரக நோய்கள் -2-AKD

குறுகிய கால சிறுநீரக செயலிழப்பு AKD 

படம்-1

குறுகிய கால சிறுநீரக செயலிழப்பு என்பது மிகவும் கொடிய நிலை ஆகும் .இந்த  நிலையில்  திடீரென்று சிறிது நாட்களில் ஏன் சில மணித்துளிகளில் சிறுநீரகம் தன் செயல்பாட்டை இழந்துவிடும் .இரத்தம்  சுத்தீகரிக்கபடாமல் அதன் கழிவுகள் அனைத்தும் உடலில் தேங்கி குறுகிய காலத்தில் உயிருக்கே ஆபத்தான நிலை உருவாவது.
இதை மருத்துவ மொழியில் Acute Kidney Disease or Failure (AKD or AKF) என்பர்.இது  நம் உடன்பிறந்தவரோ அல்லது உயிர் காக்கும் தோழனோ இதுவரை  நட்போடு இருந்துவிட்டு  திடீர் என்று சில நாட்களில் பகையாகிவிடுவது மாதிரி.இந்த AKF திடீரென்று தாக்கக்கூடிய ஒரு கொடிய நிலை எனினும் சில நேரம் அதிர்ஷ்டவசமாக நம் உடல் வேறு எந்த உபாதையும் இல்லாமல்  ஆரோக்கியமாக இருந்தால்,இந்த கொடிய நிலை மாறி சிறுநீரகம் மீண்டும் புனர் ஜென்மம் எடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது .
இரத்தத்தில் கிரியாட்டினின் 50%TO 50% க்கு மேல் இருந்தால் இந்த AKD உறுதிப்படும் 
AKD உண்டாக்கும் காரணிகள் :-
1.போதை மருந்துகள் (ஆல்கஹால்,கோகைன்,அபின்,கஞ்சா)
ஆன்டிபயாட்டிக்குகள்,வலி மருந்துகள்,விஷ கழிவுகள்,விஷ மருந்துகள்.
மெத்தனால்,எத்தனால் போன்ற ஆல்கஹால் வஸ்துக்கள் கல்லீரலில் உண்டாக்கும் பார்மாலிட்டிஹைடு,அசிட்டால்டிஹைடு போன்ற வீரிய கழிவுகள் கல்லீரலிலிருந்து சிலநேரம் அப்படியே ஒழுகி வந்து சிறுநீரகத்தை தாக்கலாம்
மேலும் அளவு மீறி ஆல்கஹால் எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் உயர்ந்து சிறுநீரகத்தை தாக்கும் 
2.வலி மருந்துகள் இவை சிறுநீரக இரத்தக்குழாய்களை சுருக்கி சிறுநீரகம் இரத்தம் பெறுவதை குறைத்துவிடும்.நம் உடலில் இரத்தம் தாராளமாக பாய்வதற்கு சில உயிரி ஊடகங்கள்(Biological Mediators) உதவுகின்றன.அவற்றில் முக்கியமானவை புரோஸ்டகிளாண்டின்(Prostaglandin) மற்றும் புரோஸ்டசைக்ளின் (Prostacyclin)ஆகியவை.புரோஸ்டகிளான்டின் இரத்தக்குழாய்கள் சுருங்குவதை தடுக்கும்.ப்ரோஸ்டாசைக்ளின் இரத்தம் உறைவதை தடுக்கும்.இவற்றை தயாரிக்க சைக்ளோ ஆக்சிஜெனேஸ்  என்ற என்ஜைம் இயங்க வேண்டும்.வலி மருந்துகளான புரூபென்(Brufen or Ibuprofen),ஆஸ்பிரின்Aspirin),நெப்ரோக்சென்(Naproxen or Proxen),இண்டோஸிட் (Indocid or Indomethacin)போன்றவை இந்த என்ஜைம் இயங்குவதை தடுத்துவிடும்.அதனால் தேவையான ப்ரோஸ்டாகிளாண்டின் மற்றும் ப்ரோஸ்டாசைக்ளின் சுரக்காமல் நின்றுவிடும் .
3.நாம் எடுத்துக்கொள்ளும் சில மருந்து மாத்திரைகள் வளர் சிதை மற்றம் அடையும் போது கொடிய நச்சு பொருளாக மாறி சிறுநீரக நெப்ரான்களை சிதைத்து விடலாம் 
உதாரணம் கதிர்வீச்சு ஸ்கேன் எடுப்பதற்காக கான்ட்ராஸ்ட் மீடியமாக ஊசி மூலம் உடலில் செலுத்தப்படும் சில நிறமிகளில் அசுத்தமாக கலந்திருக்கும் அயோடின்.
4.பேதி மருந்தாக தரப்படும் சோடியம் பாஸ்பேட் கலந்த பேதி மருந்துகள்.இவை அதிகப்படியாக எடுக்கும் போது சிறுநீரக நெப்ரான் வடிப்பான்களில் பாஸ்பேட் உப்புகள் படிந்து சேதமுண்டாக்கலாம்.
5.சோடியம் மற்றும் கால்சியம் கலந்த வயிற்று அமிலம் குறைப்பான்கள்(Antacids).உதாரணமாக சோடியம் பைகார்போனேட் உப்புகள் அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகங்களின் மீது அதிக சுமை உண்டாகலாம்.எனவே சிறுநீரகம் பழுதடையலாம் 
மேலும் கால்சியம் உப்புகள் அதிகம் உபயோகித்தால் அவை சிறுநீரக கற்கள் உண்டாக்கி  பாதிப்புகள் ஏற்படுத்தலாம்.இன்னும் கீழ்க்காணும் அட்டவணையில் சில மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளது.அவையும் உடலில் சில சமயம் மாற்றங்கள் அடைந்து அல்லது மாற்றம் அடையாமல் அப்படியே சிறுநீரில் வெளியேறும் போது சிறுநீரகம் சேதம் (AKD)அடைய வாய்ப்புண்டு.
படம்-2(அட்டவணை)
மேலே உள்ள அட்டவணையை நோக்கவும் 
1.கோடீன் போன்ற அபின் பொருள் கலந்த இருமல் மருந்துகள் பார்மசிகளில் டாக்டர் சீட் இல்லாமலேயே கிடைக்கின்றன.இவை அதிகம் அல்லது அடிக்கடி உபயோகிக்கப்படும் பொழுது இரத்தத்தில் கோடீன் அதிகம் தேங்குகிறது.கோடீன் சிறுநீரகத்தில் வளர்சிதை மாற்றம் அடைந்து மார்பின்,நார்க்கோடீன் மற்றும் கோடீன்-6-பாஸ்பேட் போன்ற வீரிய மிக்க பொருட்களாக சிதைந்து உடம்பில் சிறுநீர் வெளியேறுவதை குறைக்கும்.உடலின் நீர்தேங்கி இரத்த அழுத்தம் உயர்ந்து சிறுநீரகம் பாதிக்கப்படும் 
இதே போல் ஆண்டிபையாட்டிக்குகள் உதாரணமாக அமினோகிளைக்கோஸைடுகள் உபயோகிக்கும் போது இவை வளர்சிதை மாற்றம் அடையாமல் அப்படியே சிறுநீரகங்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றன.அப்பொழுது நெப்ரான்கள் சேதமடைகின்றன.(பார்க்க படம்-2)
கன உலோகங்களான காட்மியம் பாதரசம் போன்றவை அசுத்தங்களாக நம் அன்றாட வாழ்வில் நம் உடம்பிற்குள் போகின்றன.இவை சிறுநீரகத்தின் மீது அதிக ஈர்ப்பு உடையவை.இவை சிறுநீரகத்தை பாதிக்காமல் இருக்க இயற்கையிலேயே சிறுநீரக திசுக்களில் மெட்டாலிதியோனின் என்ற புரதம் இருக்கிறது.இது இந்த கன உலோகங்களை கிரகித்துக்கொள்ளும்.ஆனால் சில நேரங்களில் இந்த கட்டு சிதைந்து உலோகம் ஒழுகி சிறுநீரகத்தை பாதிக்கும்.முக்கியமாக குடிநீர்,உணவுகள் மூலமாக கன உலோக நச்சுக்கள் நம் உடலில் நுழையலாம்.

அறிகுறிகள் :-குறுகிய கால சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் கீழே தரப்பட்டுள்ளன.இவை நீண்ட கால செயலிழப்பிற்கும் பொருந்தும் 

1.சிறுநீர் வெளியேறுவது குறைதல்.உடலில் நீர் தேங்கி கணுக்கால் பாதம் கைகள் வீங்குதல் 
2.சிறுநீரில் இரத்தம் வருதல் 
3.களைப்பு ,சோர்வு 
4.தோல் அரிப்பு ,சிதைவு 
5.இதய நோய்கள் ,இதயத்தை சுற்றி நீர்கட்டுதல் ,ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள் (Arrhythmias)
6.நுரையீரலில் நீர் தேங்குதல்,மூச்சுத்திணறல் 
7.குமட்டல் 
8.மனப்பிராந்திகள் 
9.வலிப்பு,கோமா 

பரிசோதனைகள் 

பொதுவாக இரத்தத்தில் கிரியாட்டினின் சிறுநீரக நோய்களை முன்கூட்டியே சரியாக கணிக்க உதவாது 
எனவே சிறுநீர் பரிசோதனைகள் குறிப்பாக சிறுநீரில் சிலவகை நுண் புரத மூலக்கூறுகள் தென்படுவதைவைத்து முன்கூட்டியே சிறுநீரக செயலிழப்பை அறிய முடியும்.அந்த புரதங்கள் 
1.(Kidney Injury Molecule-1 or KIM-1)
2.N-Acetyl-β-D-glucosaminidase(NAG)
3.Matrix Metallo Proteinase-9(MMP-9)
அடுத்து சிறுநீரில் இந்த புரதங்கள் இருப்பதை உறுதி செய்யும் பட்சத்தில் சிறுநீரகம் பழுதடையப்போவதை முன் கூட்டியே கணிக்கலாம் 
Continued....






திங்கள், 9 டிசம்பர், 2019

சிறுநீரக வியாதிகள்-1-முகவுரை

சிறுநீரகம் -ஓர் அறிமுகம் 

படம் 1
சிறுநீரகங்கள் என்னும் இந்த முந்திரிக்  கொட்டை வடிவில் அமையப்பெற்ற  கழிவு உறுப்புகள்   மேல் வயிற்று பகுதியில் பின்புறத்தண்டு வடத்தின் இருபுறமும் எதிர் எதிராக பின்புற முதுகின் உள்சதையின் பிடிமானத்துடன் பொருந்தியுள்ளன.
வலது சிறுநீரகத்தின் தலை மீது   கல்லீரல் அமைந்திருப்பதால் (பார்க்க படம் 1) அது சிறிது தாழ்ந்தும் இடது சிறுநீரகம் சிறிது உயர்ந்தும் அமைந்துள்ளன.

சிறுநீரக இரத்த ஓட்டம் 

படம் 2
மிகச்சிறிய ஒரு முந்திரிக் கொட்டையின் அளவே இருப்பினும் இதயம் வெளிப்படுத்தும் இரத்தத்தில் சுமார் 20 to 25% சிறுநீரகம் சிறுநீரக தமனி மூலம் பெறுகிறது(பார்க்க படம் 2).இந்த இரத்தம் வடிகட்டி சுத்தீகரிக்கப்பட்டபின் அதில் 3%இரத்தத்திலிருந்து தனக்கு தேவையான ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு மொத்த இரத்ததையும் சிறுநீரகம் சிறுநீரக  சிரை மூலம் இதயத்திற்கே அனுப்பிவிடுகிறது (பார்க்க படம் 2)
சிறுநீரகம் இரத்தத்தை அதன் அழுகுகளான யூரியா,யூரிக் அமிலம்,ஹிப்பூரிக் அமிலம்,கிரியாட்டினின்,மருந்து வளர் சிதை கழிவுகள் நீரில் கரையக்கூடிய தேவையற்ற விஷப்பொருட்கள் ஆகிய அனைத்தையும்  நீக்கி சுத்தமாக்கும் மிக முக்கிய கழிவு உறுப்பு ஆகும்.இதன் தேய்மானம் மற்றும் இதில் ஏற்படும் கோளாறுகள் நம் ஆரோக்கியத்திற்கு மிக பெரும் கேடு விளைவிக்கும் 

நெப்ரான்கள் (சிறுநீர் வடிகட்டிகள்)


படம் 3அ 

படம் 3ஆ 
நெப்ரான்கள் என்ற இந்த சிறுநீர் வடிகட்டிகள்தான் சிறுநீரகத்தின் அடிப்படை யூனிட்டுகளாகும்.இறைவனின் மிகப்பெரும் அருட்கொடையால் நம் ஒவ்வொரு சிறு நீரகத்திலும் சுமார் பத்து லட்சம் நெப்ரான்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதாவது பிறந்த போது  ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கிய நிலையில் மொத்தம் இருபது லட்சம் நெப்ரான்கள் தரப்பட்டுள்ளன.எல்லாப்  புகழும் இறைவனுக்கே.ஆனால் ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கை மாற்றத்தாலும் பொறுப்பற்ற உணவுப்பழக்கங்களாலும் நாம் கிட்னியை தாக்குவதன் மூலம் நெப்ரான்களை சேதப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.வாலிப மிடுகிலும் இளமை தரும் ஆரோக்கியத்தில் சிறுநீரகம் சேதப்பட்ட நெப்ரான்களை  அவ்வப்போது சரிசெய்து கொள்கிறது .அது ஒவ்வொருவரின் வயதையும் ஆரோக்கியத்தையும் பொறுத்தது.ஆனால் ஒருபோதும் சிறுநீரகத்தால்  ஒரு புதிய நெப்ரானை உருவாக்க முடியாது. 
நெப்ரான்களின் பாகங்கள் :-(பார்க்க படங்கள்  3அ ,3ஆ )
1.பெளமென் குப்பி :- இது உட்புறம் குழிந்து ஒரு குப்பி போல் இருக்கும் .இதுதான் நெப்ரானின் தலை.இந்த குப்பியின் அளவு 8 to 10 நானோ மீட்டர் ஆகும்.ஒரு நானோ மீட்டர் என்பது 1000X1000 மில்லி மீட்டரில் ஒரு பங்கு ஆகும் அல்லது 1000 மில்லி மைக்ரானில் ஒரு பங்கு ஆகும்.இதற்குள் தான் இரத்த குழாய் தந்துகிகள் க்ளமெரோலஸ் என்ற ஒரு பந்துபோல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்.இங்கிருந்துதான் இரத்தம் வடிகட்டப்படும் (பார்க்க படம்)
இந்த குப்பியின்  கீழ் நெளிவுகளாக  இறங்கி பிறகு மேலெழும் குழாய்க்கு முன் நெளிவு குழாய் (Proximal Convoluted Tubule)என்று பெயர்.இந்த குழாயில் இரத்தம் வடிகட்டப்படும் போது பெரும்பாலும் மிக சிறிய மூலக்கூறுகள் கொண்ட இரத்த பொருட்கள் (சோடியம் பொட்டாசியம் குளோரைடு போன்ற அயனிகள் இன்னும் பிற நுண் மூலக்கூறுகள் கிரியாட்டினின் யூரியா யூரிக் அமிலம் போன்ற அழுக்குகள்) அனைத்தும் இந்த குழாய்க்குள் வடிந்துவிடும்.புரோட்டீன் போன்ற பெரிய மூலக்கூறுகள் இரத்தத்திலேயே தங்கிவிடும்
இருப்பினும் வயது ஆக ஆக சிறிது புரதம் இதில் வடியக்கூடியது எனினும் அதிக பட்சம் 0.05%வரை இதில் புரதம் கசியலாம் .மற்றபடி இந்த வடிதிரவம்(கிளாமருலஸ் வடிதிரவம்)கிட்டத்தட்ட பிளாஸ்மாவை ஒத்திருக்கும்.இதில் சாதாரணமாக 175 கிராம் வரை குளூக்கோஸும் சேர்ந்து வடிந்திருக்கும்.  
2.கிளாமருலஸ் :-இரத்த தந்துகி குழாய்கள் ஒரு பந்து போல் பின்னப்பட்டு பெளமன்ஸ் குப்பிக்குள் அடங்கி இருக்கும்.இதற்கு கிளாமருலஸ் என்று பெயர்.இரத்தம் இங்கிருந்துதான் வடிகிறது. 
3.முன் நெளிவு வடிகுழாய் (Proximal Convoluted Tubule,or PCT):-
இது பௌமன் குப்பியிலிருந்து கீழே தொடங்கும்.பிறகு மேலெழுந்து பல நெளிவுகளாக (Convoluted) மீண்டும் கீழிறங்கும்.இங்கு 100%க்ளூகோஸ் அமினோ அமிலங்கள் போன்ற உடலுக்கு தேவையான ஊட்டப்பொருள்கள் மீண்டும் இரத்தத்திற்குள்  உறிஞ்சப்படும்.ஏறக்குறைய ஒரு 65% to 70%சோடியம்,பொட்டாசியம்,குளோரைடு  பைகார்போனேட்,பாஸ்பேட் சிட்ரேட் மற்றும் லேக்டேட் போன்ற  அயனிகளும்  நீருடன் மீண்டும் இரத்தத்திற்கு திரும்பும்.அதே அளவு ஹைட்ரஜன் அயனிகள் மற்றும் கிரியாட்டினின்(10%) கழிவுகள் வடித்திரவத்திற்குள் இங்கு சுரக்கப்படும் .இந்த குழாய் பகுதியில் கொஞ்சம்  யூரியா மீண்டும் உறியப்பட்டு இரத்தத்திற்கு திருப்பலாம்.ஆனால் கிரியாட்டினின் சுத்தமாக மீண்டும் இரத்தத்திற்குள் உறியப்படாது.
4.ஹெண்லேயின் லூப் (இறங்கும் பகுதி)
முன்நெளிவு குழாய் குறுகி  லூப் ஆக கீழே மெடுல்லா பகுதிக்கு இறங்கும்(பார்க்க படம் 3அ ).வடி திரவம் இங்கு இறங்கும் போது கிட்டத்தட்ட முன் நெளிவு குழாயில் மூன்றில் இரண்டு பங்கு பொருட்களும் சிறிது நீரும் உறிஞ்சப்பட்ட பிறகு மீதி மூன்றில் ஒருபங்கு வடி திரவம் இந்த பகுதிக்கு வரும்.இப்பொது அதில் அதிக நீர்ச்சத்தும் குறைந்த கரைபொருளும் இருக்கும்.அதாவது வடிதிரவம் நீர்த்து(Diluted)குறை உரத்தன்மை (Hypotonic) உடையதாக இருக்கும் .எனவே இந்த இறங்கு ஹென்லேயின் லூப் பகுதியின் சுவர் ஒரு அரை ஊடுருவி சவ்வாக(Semipermeable Membrane) மாறி வடிதிரவத்தின் நீரை மட்டும் இரத்தத்திற்குள் மீண்டும் உறிஞ்சி வடித்திரவதை அடர்த்தியாக்கி அடுத்த பகுதிக்கு நகர்த்தும்.
5.ஹென்லேயின்  லூப் (உயரும் பகுதி )
இந்தப்பகுதியில் திரவம் நகரும் போது அது அடர்த்தி அதிக (Concentrated) நிலையில் இருக்கும் அதாவது உயர் உர தன்மை (Hypertonic)உடையதாக இருக்கும்.இந்த பகுதியின் சுவர் மீண்டும் அரை ஊடுருவி சவ்வாக இருந்து இதிலிருக்கும் கரைபொருட்களான சோடியம்,பொட்டாசியம்,மற்றும் குளோரைடு அயனிகளை மட்டும் இரத்தத்தில் மீண்டும் உறிஞ்சிக்கொண்டு சமப்படுத்தப்பட்ட (Isotonic)கரைசலாக அடுத்த பகுதிக்கு அனுப்பும்.
6.கடை நெளிவு வடி குழாய் (Distal Convoluted Tubule or DCT):-
கிட்டத்தட்ட நெப்ரானின் இறுதிக்கட்ட வடிகட்டுதல் இங்குதான் நிறைவேறும்.நெப்ரானின் இந்த பகுதிவரைதான் இரத்த ஓட்டமும் இருக்கும்.இங்குதான் பிட்டியூட்டரியிலிருந்து வரும் vasopressin என்ற ஹார்மோன் (நீர்ம எதிர்ப்பு இயக்குநீர் ,Anti Diuretic Hormone)தாக்கமும் இருக்கும்.இந்த ஹார்மோன் வடிதிரவத்திலிருந்து சோடியத்துடன் மேலும் நீரை இரத்தத்தில்  உறிஞ்சி சிறுநீரை அடர்த்தி உள்ளதாக்குகிறது.இங்குதான் அட்ரீனலிலிருந்து சுரக்கப்படும் ஆல்டோஸ்ட்டிரான் என்ற ஹார்மோன் சோடியம் மீண்டும் இரத்தத்திற்குள் உறிஞ்சப்பட  உதவுகிறது இந்த இடத்தில்தான் பொட்டாசியம் வடித்திரவத்திற்குள் கடைசியாக மீண்டும் கசியப்படுகிறது.இந்த இடத்தில்தான் ஹைட்ரஜன் அயனியும் வடிதிரவத்திற்குள் கசியப்பட்டு சிறுநீரின் அமிலத்தன்மை pH 5 -ஐ சுற்றி நிலைநிறுத்தப்படுகிறது.
இனி இந்த வடித்திரவதை சிறுநீர் என்று அழைக்கலாம் .
இப்படி உருவாகும் சிறுநீர் இனி DCT யின் பின்பகுதியான சிறுநீர் சேகரிப்பு நூல்குழாயின் மூலம் சிறுநீர் சேகரிப்பு குழாயை அடைகிறது.பிறகு அங்கிருந்து யூரேட்டர் எனப்படும் முன் சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பையை அடையும்.

சிறுநீர் சேகரிப்பு நூல் குழாய்,சிறுநீர் சேகரிப்பு குழாய் யூரேட்டர் ஆகிய பகுதிகளில் இரத்த ஓட்டம் இருக்காது.
சிறுநீரகத்தின் குறுக்கு மற்றும் நெடு வெட்டு தோற்றமும் அதில் நெப்ரானின் அமைந்திருக்கும் விதமும் :-
படம் 4 அ 

படம் 4ஆ 
மேலே உள்ள இரு படங்களும் சிறுநீரகத்தில் அதன் அடிப்படை யூனிட்டுகளான நெப்ரான்கள் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை காட்டுவதற்காக வரையப்பட்ட மாதிரி படங்கள்.உதாரணத்திற்காக ஒரே ஒரு நெப்ரான் மட்டும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.படம் 4அ சிறுநீரகத்தின் குறுக்கு வெட்டு தோற்றமாகும்.இதில் கார்ட்டக்ஸ் பகுதியில்தான் நெப்ரானின் முக்கால் பகுதி அமைந்திருப்பதை காணலாம் எனவே இப்பகுதிதான் அதிக இரத்த புழக்கமுள்ள பகுதியாகும்.
மெடுல்லா பகுதியில் நெப்ரானின் லூப் மட்டுமே நீட்டிக்கொண்டிருக்கிறது .எனவே அந்த பகுதியில் மட்டும் இரத்த ஓட்டம் இருக்கும்.
கீழே தரப்பட்டுள்ள  நெடு வெட்டு தோற்றம் (படம் 4ஆ)  படத்தில் கார்ட்டக்ஸ் பகுதியில் இரத்த குழாய்கள்  நெளிவு நெளிவாக பிரமிடுகள் போல் சிறிது மெடுல்லாவுக்குள் இறங்கி ஏறி இருக்கின்றன.மெடுல்லா பகுதியிலுள்ள பெல்விஸ் அமைப்பில்தான் நெப்ரான்களின் சேகரிப்பு குழாய்கள் பகுதி பகுதியாக குவிந்து பிறகு மொத்தமாக முன் சிறுநீர் குழாயாக மாறுவதை காணலாம்.இதுதான் சிறுநீரகத்தின் இயக்கவியல் மற்றும் அகவியல் பற்றிய சிறு குறிப்பு ஆகும்.இனி இதில் ஏற்படும் நோய்களை பற்றி இறைவன் நாடினால் அடுத்த பதிவில் பார்க்கலாம்  
தொடரும் .....

செவ்வாய், 19 நவம்பர், 2019

இசிஜியில் தைராய்டு குறைபாடு (HYPOTHYROIDISM EFFECTS IN ECG)

தைராய்டு குறைபாடு நிலையில் இசிஜி 

தைராய்டு சுரப்பி சில அசாதாரண நிலைக்களில் தன் செயல்பாட்டை குறைத்து கொள்ளும் அல்லது முற்றிலும் இழந்துவிடும்.இந்த நிலையில் இரத்தத்தில் அயோடின் சத்து வளர்சிதை மாற்றங்கள் அடையாமல் உடலில் தேங்கிவிடும்.தைராய்டு குறைபாட்டு நிலையில் தைராய்டு இயக்கு நீர்கள் இரத்தத்தில் குறைந்துவிடும்.இதை சரிக்கட்டுவதற்கு மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி தைராய்டு தூண்டுதல் இயக்கு நீரை (TSH) அதிகம் சுரந்து தைராய்டு சுரப்பியை தூண்ட ஆரம்பிக்கும்.நோய்ப்பட்ட தைராய்டு சுரப்பி பிட்யூட்டரி யின் தூண்டுதலை தாங்க முடியாமல் அதே நேரம் ஒழுங்காகவும் இயங்க முடியாமல் வீங்க துவங்கும்.இதுவே காய்ட்டர் (Goiter)ஆகும்.இதே காய்ட்டர் நிலை தைராய்டு மிகைப்பாட்டிலும் ஏற்படலாம் 
பொதுவாகவே காய்ட்டர் சாதாரண நிலையில் வீங்கி இருந்தால் ஏதும் பிரச்சினை இல்லை 
ஆனால் அதுவே அளவு மீறி வீங்கி இருந்தாலோ குமிழ் குமிழாக (Nodules) கிளை விட்டு இருந்தாலோ அது பெரும் பிரச்சினை ஆக மாறிவிடும்.மேலும் இது பற்றி விவரிப்பது நம்முடைய நோக்கத்திற்கு அப்பாற்பட்டது .எனவே இது பற்றி மேலும் விபரம் அறிய இங்கு க்ளிக் செய்யவும் 
தைராய்டு குறைபாட்டின் காரணிகள் மற்றும் அறிகுறிகள் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும் 
இசிஜியில் தைராய்டு குறைபாடு 


மேலே உள்ள படத்தில் தைராய்டு குறைபாடுள்ள ஒரு நோயாளியின் மாதிரி இசிஜி காட்டப்பட்டுள்ளது 
ஒரு நார்மல் சைன்ஸ் ரிதம் தைராய்டு குறைபாட்டினால் எவ்வாறு தாக்கம் அடைகிறது என்பதை இந்த மாதிரி இசிஜி தெளிவாக காட்டுகிறது 
1.தாக்கம் -1: R -R இடைவெளி மிகவும் நீண்டு இருக்கிறது.இது இதயத்துடிப்பு குறைந்து இருப்பதை (Bradycardia) காட்டுகிறது.
2.தாக்கம் -2:-மின்முனை II இன் பதிவில் ST -பகுதி தாழ்ந்துள்ளது இது கீழறைகள் சரியாக விரியவில்லை என்பதை காட்டுகிறது 
3.P -அலை மறைந்துள்ளது.இது இதயத்தின் மேலறைகள் சரிவர இயங்கவில்லை என்பதை குறிக்கிறது.
 இறுதியாக தைராய்டு குறைபாட்டை தக்க சிகிச்சையளித்து சரி செய்யவில்லை என்றால் பெரும் பின்விளைவுகளை குறிப்பாக இருதயம் சம்பந்தமான பிரச்சினைகளை உண்டாகும்.


வியாழன், 14 நவம்பர், 2019

இசிஜியில் தைராய்டு மிகை நிலை (ECG CHANGES IN HYPERTHYROIDISM)

தைராய்டு மிகைப்பாடு

படம் 1
தைராய்டு சுரப்பி நமது தொண்டைக்குழியில்  மேலும் கீழும் ஏறி இறங்கும் ஆடாம்ஸ் ஆப்பிள் உறுப்பின் கீழே அமைந்துள்ளது 
மேலே படம்-1இல் உள்ளபடி இது ஒரு வண்ணத்து பூச்சி போல் தோற்றமளிக்கும்.இதன் அளவு மிகவும் சிறியது என்றாலும் இதன் சக்தி மிகவும் அபாரமானது.
இது நம் உடல் அயோடின் சத்தை பயன்படுத்துவதற்கு (metabolize) உதவுகிறது.
இது ரத்தத்தில் உள்ள அயோடினை உட்கொண்டு தைராக்ஸின் என்ற ஹார்மோனை உற்பத்திசெய்யும்.இதற்கு தூண்டுகோலாக இருப்பது மூளை பகுதியினுள் இருக்கும் பிட்டியூட்டரி(Anterior Pituitary) சுரப்பியாகும்.இச்சுரப்பியானது இரத்தத்தில் அயோடின் அதிகரிக்கும் போது தைராய்டு தூண்டுதல் இயக்குநீர் (Thyroid Stimulating Hormone,TSH) என்ற ஹார்மோன் மூலம் தைராய்டு சுரப்பியை தூண்டி விட்டு தைராக்ஸினை சுரக்கவைக்கும்.இவ்வாறு சுரக்கப்படும் தைராக்ஸின்,டெட்ரா அயோடோ தைரோனின் அல்லது T4 ஆகும்.இதில் ஒரு 90% இரத்த ஓட்டத்தில் ஒரு அயோடினை இழந்தது திரி அயோடோ தைரோனின் அல்லது T3 ஆக மாறும்.தைராய்டின் சக்தியில் 90% இந்த T3  மூலமாகத்தான் உடல் பெறுகிறது.இரத்தத்தில் தைராக்ஸின் சுரந்தவுடன் 90% அது இரத்தத்தின் பிளாஸ்மா ப்ரோடீன்களால் உறிஞ்சப்பட்டுவிடும்.நாம் இங்கே இதுபற்றி விரிவாக காணப்போவது இல்லை 
காரணிகள் :-
1.அதிக தைராக்ஸின் மாத்திரைகளை உட்கொள்ளுவது.
2.பிட்டியூட்டரி கோளாறுகளினால் அதிகமாக தைராய்டு தூண்டப்படுத்தல் 
3.தைராய்டு சுரப்பி வீக்கம் (Goiter,Active Adenoma or Tumor )
5.அதிக அளவு அயோடின் மருந்துகளை உட்கொள்ளுதல் (அமியோடரோன்,Amiodarone)
6.தைராய்டு எரிவு அல்லது Thyroiditis )
சாதாரணமாக தைராய்டு நம் உடலின் வளர் சிதைவை (Metabolism )ஊக்குவிக்கிறது இதன் மூலம் உடலின் உஷ்ணநிலையையும் தூண்டுகிறது 
ஆனால் இது மிகைப்படும் போது நம் உடலின் வளர்சிதை தடுமாற்றம் அடையும்.உடல் வெப்பநிலை கட்டுமீறி உயரும் 
இதயத்துடிப்பு,ரத்த கொதிப்பு கட்டு மீறி போகும்போது மனிதனின் நிலை தடுமாறிப்போகும் 
தைராய்டு மிகைப்பாட்டின் அறிகுறிகள்:
1.கை ,கால் உதறல்,நிலைகொள்ளாமை,நரம்பு தளர்ச்சி ,தூக்கமின்மை.
2.மன உளைச்சல் 
3.தளர்ச்சி,சோர்வு 
4.மன தடுமாற்றம் (Mood Swings)
5.உடல் வெப்பம் அளவுமீறி உயர்தல் (Hyperthermia)
6.எதிர்பாராத எடை இழப்பு 
7.தொண்டை வீக்கம் (Goiter)
8.இதய துடிப்பு அதிகரிப்பு 
9.வயிற்றுப்போக்கு 
10.தோல் மற்றும் முடி உதிருதல் 
11.மாதவிடாய் கோளாறு  

இசிஜியில் தைராய்டு மிகைப்பாடு:-

படம் 2
மேலே உள்ள படம் 2 இல் தைராய்டு மிகைப்பாட்டின் போது இசிஜியில் அதன் தாக்கத்தை மின்முனை II இன் பதிவில் கட்டப்பட்டுள்ளது 
அதில் ஆரோக்கிய நிலையில் ஒருவரின் இசிஜி சைன்ஸ் ரிதம் எவ்விதம் மாறுபட்டுள்ளது என்பது தெளிவாகிறது.ஆரோக்கிய நிலை சைனஸ் ரிதம் காண இங்கு க்ளிக் செய்யவும்.
படம் 3
 
மேலே படம் 3 இல் ஒரு முழு மாதிரி இசிஜி காட்டப்பட்டுள்ளது அதில் மின்முனை -I,II,III,aVF,V4,V5,மற்றும் V6 இன் பதிவை கவனியுங்கள்.
அதில் R-R இடைவெளி குறுகியிருக்கிறது இதயம் வேகமாக தாறுமாறாக துடிப்பதை இது காட்டுகிறது மேலும் மற்ற பதிவுகளிலும் S-அலை மிக தாழ்ந்து உள்ளது S-T பகுதி உயர்ந்து இருக்கிறது இதுவும் இதயத்தின் கீழறைகளில் ஏற்படும் கோளாறுகளையே உணர்த்துகிறது 
மொத்தத்தில் தைராய்டு மிகைபாடு கவனிக்கப்படவில்லை என்றால் ஆபத்தான விபரீதங்களை உண்டாக்கி விடும் 
தொடர்ந்து  அடுத்து தைராய்டு குறைபாடு நிலையில் இசிஜி .....

புதன், 6 நவம்பர், 2019

மருந்துகளால் உங்கள் இசிஜியில் ஏற்படும் பாதிப்புகள் -3

பீட்டா ஏற்பி அடைப்பான்கள் & கால்ஷியம் சேனல் அடைப்பான்கள் 

படம் 1

A.அடேனோலோல் (Atenolol)(டெனோர்மின்,அட்டன் Tenormin,Aten)ப்ரோபிரானோலோல்(Propranolol,இன்டெரால்,Inderal) மற்றும் மெடோபிரலால்,(Metoprolol,லோபிரசர்,Lopressor)
மேலே கூறப்பட்ட அத்தனை மருந்துகளும் பீட்டா ஏற்பி அடைப்பான்கள் (Beta Receptor Blockers) வகையை சேர்ந்தவை.இவை தானியங்கி நரம்பு மண்டலத்தில் (Autonomic Nervous System) அட்ரீனலின் நரம்பு பிரிவில் உள்ள பீட்டா ஏற்பிகளை அடைத்து நாரெட்ரீனலின் ஹார்மோனை செயலிழக்க செய்பவை.இதன் மூலம் இரத்தக்குழாய்களை விரிவடைய செய்து, இதய துடிப்பின் வேகத்தையும் குறைத்து இரத்த அழுத்தம் உயராமல் பார்த்துக்கொள்ளும் 
B.அமிலோடிப்பின்,(Amlodipin)(நொர்வாஸ்க்,Norvasc),வேரபாமில்,(Verapamil)(ஐசாப்ட்டின்,Isoptin),நிபிடிப்பின்(Nifedipin)(ப்ரொகார்டியா,Procardia)-இவை அனைத்தும் கால்ஷியம் சேனல் அடைப்பான் வகையை சேர்ந்த மருந்துகளாகும்.
மேலே குறிப்பிட்ட இரண்டு வகை மருந்துகளும் பெரும்பாலும்  இசிஜியில் ஒரே மாதிரியான தாக்கத்தையே உண்டாக்குகின்றன.
மேலே படம் 1 இல் ஒரு நார்மல் இதயத்துடிப்பின் இசிஜி காட்டப்பட்டுள்ளது.அதில் P,Q,R,S மற்றும் T -அலைகள் தெளிவாக உள்ளன.
படம் 2A
மேலே படம் 2-இல் பீட்டா அடைப்பான்கள் மற்றும் கால்ஷியம் சேனல் அடைப்பான்கள் ஆகியவற்றின் இசிஜி தாக்கம் எப்படி இருக்கும் என்பது பதிவாகியுள்ளது 
முக்கியமாக மின்முனை II இல் ST பகுதி தாழ்ந்து,உள்ளது.S-அலை மிக கீழ்நோக்கி தணிந்து இருக்கிறது.Q -அலை மறைந்து இருக்கிறது.T -அலை மேலே குவிந்து கூம்பு போல் இருக்கிறது.இவை அனைத்தும் ஒரு சிறு சிகப்பு வட்டத்திற்குள் குறிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும் 
மின் முனை aVL -ன் பதிவில் P -அலை இல்லை R -R-இடைவெளி மிக நீண்டு இருக்கிறது.(சிவப்பு நீள்  சதுரம்)
இவை அனைத்தும் இதயம் குறைந்த வேகத்திலும் அழுத்தத்தாலும் துடிக்கிறது என்பதை காட்டுகிறது.
படம் 2B 

 
படம் 2C 


மேலே உள்ள படம் 2B,மற்றும் 2C இரு இசிஜி மாடல்களிலும் வெரபாமில் (Verapamil)என்ற கால்ஷியம் சேனல் அடைப்பானின் இசிஜி தாக்கம் காட்டப்பட்டுள்ளது 
படம் 2B உருவகப்படுத்தப்பட்ட (Simulated)கணிப்பு வரைபடமாகும்.அதில் Phase -0 என்ற அமைப்பு வலது புறமாக கூடுதலாக சாய்ந்து விட்டது.இது புள்ளிக்கோடுகள் மூலம் குறிக்கப்பட்டுள்ளது.இது வலது புறம் சாய்ந்துவிட்டதால் Phase 2 கொஞ்சம் குறுகிவிட்டது (கால்ஷிய அயனிகளின் நுழைவு அடைக்கப்பட்டதால்).இது  படம் 2C இசிஜி மாதிரியில் தெளிவாகிறது.
மின்முனை II யின் பதிவில் (நீல செவ்வகம்) P-அலை மறைந்துள்ளது 
R -R இடைவெளி அதிகரித்து உள்ளது 
மின்முனை aVL இல் QRS கூட்டமைப்பு குட்டையாகவும் விரிந்தும் இருக்கிறது 
இவை அனைத்தும் இதயம் மெல்ல மெல்ல தன்  செயல்பாட்டை இழந்துகொண்டு இருக்கிறது என்பதை 
காட்டுகிறது 
முடிவாக மேலே கூறப்பட்ட மருந்துகள் டெனோர்மின் (TENOMIN,ATEN ), ஐஸோப்ட்டின்(ISOPTIN ) ,நோர்வோஸ்க்(NORVASC ),அட்டன்(Aten),ப்ரொகார்டியா (Procardia )போன்ற மருந்துகள் அளவு மீறியோ அல்லது டாக்டரின் ஆலோசனை இல்லாமலோ எடுத்துக்கொண்டால் இதய செயலிழப்பில் (CHF) என்ற கொடிய நிலையில் கொண்டுவிடும் என்பது தெளிவு.


செவ்வாய், 29 அக்டோபர், 2019

மருந்துகளால் உங்கள் இசிஜியில் ஏற்படும் பாதிப்புகள் -2

டிகாக்சின்(DIGOXIN)



சிலருக்கு இதயம் பலவீனமாக இயல்புக்கு குறைவாக துடிக்கும் இவர்களது இதயத்துடிப்பு சில நேரங்களில் நிமிடத்திற்கு 30கும் குறைவாக இருக்கலாம் 
இதற்கு நெருக்கடி நிலை இதய செயலிழப்பு அல்லது இரத்த குழாய் அடைப்பு நிலை இதய செயலிழப்பு அல்லது பொதுவாக இதய செயலிழப்பு என்பர்.இதை மருத்துவ மொழியில் CONGESTIVE HEART FAILURE (CHF) என்பர்.இது பற்றி இங்கு ஒரு சிறு குறிப்பு மட்டுமே பாப்போம் விளக்கமாக காண இங்கு கிளிக் செய்யவும் 
இதய தசைகளுக்கு இரத்தம் சரியாக கிடைக்கவில்லை என்றால் அவை பலவீனம் அடையும்.
இதற்கு பல காரணிகள் உண்டு.
அதில் முக்கியமாக இதய தசைகளுக்கு இரத்த ஓட்டம் தரும் கரோனரி தமனி வலை பின்னலில் ஏற்படும் அடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகிய காரணங்களினால் இதய தசைகள் பலவீனமடைந்து இதயம் சரியாக சுருங்கி விரியாது இதனால் இரத்தத்தை அது சரியாக வாங்கி அனுப்பாது இதுதான் இதய செயல் இழப்பிற்கு ஒரு காரணமாகும்
டிஜிட்டாலிஸ் பர்புரியா (D.Purpurea) அல்லது டிஜிட்டலிஸ்  லேனடா  (D.Lanata) என்பது ஐரோப்பாவின் வெப்ப மண்டல தாவரமாகும்.இதன் பூக்கள் ஊதா அல்லது வெண்ணிறத்தில் நரியின் கையுறை வடிவத்தில் இருக்கும் இதனால் இதன் வர்த்தக பெயர் foxglove என்பர்.இந்த செடியின்  இலைகளிலிருந்து  எடுக்கப்படும் glycosides என்ற வகை மருந்துகள் இதய நோய்களுக்கு நிவாரணமளிக்கின்றன.எனவே இவற்றிற்கு D.Cardiac Glycosides என்ற மருத்துவப்பெயரும் உண்டு.இவை Digitoxin,Digoxin,மற்றும் Ouabain என்று மூன்று வகைப்படும்.இவற்றில் Digoxin அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் தாக்கம் இசிஜியில் எப்படி தெரிகிறது என்பதை மட்டும் பாப்போம் மற்றவகைகளும் ஒரே மாதிரி தாக்கம் ஏற்படுத்துபவையாகவே இருக்கும் 
படம் 1

மேலே படம் 1 இல் ஒரு நார்மல் இதய துடிப்பு காட்டப்பட்டுள்ளது .இதில் P,Q,R,S,மற்றும் T-அலைகள் ஒழுங்காக இருக்கின்றன.இது எவ்வாறு Digoxin ஆல் மாறுபடுகிறது என்பதை பார்க்கலாம் 
படம் 2

மேலே படம் 2இல் மின்முனை II இன் பதிவை கவனிக்கவும்.அதில் ST -பகுதி தாழ்ந்து இருப்பதை  சிவப்பு வட்டங்கள் இட்டு காட்டப்பட்டு உள்ளது.நாம் ஏற்கனவே கண்டது போல் ST பகுதி தாழ்ந்து இருந்தால் அது ஆஞ்சைனா (மார்வலி)யின் அடையாளமாகும்.எனவே அளவு மீறிய டிகாக்ஸின் பயன்பாடு மார்வலியில் கொண்டு போய்விடும் என்பது தெளிவாகிறது 

டிகாக்ஸின் பக்கவிளைவுகள் 
1.களைப்பு ,சோர்வு,அசதி 
2.பார்வை மங்கல் 
3.மார்வலி 
4.குமட்டல்,வாந்தி.
5.ஜீரண கோளாறு 
6.தலை சுற்றல் 
7.மனப்பிராந்தி 

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

மருந்துகளால் உங்கள் இசிஜியில் ஏற்படும் பாதிப்புகள் -1

A .அமிட்ரிப்ட்டலின் (Amitriptyline)

இந்த மருந்து பெரும்பாலும் மருத்துவர்களால் மனசோர்வு (Mental Depression) நிலையை கட்டுப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்படுகிறது 
 பார்மசியில் ட்ரிப்டோமர் (Tryptomer),ட்ரிபிடிசால்(Tryptizol or Tryptozol ),அபீட்ரிப் (Abitrip),அம்பிவால் (Ambival),அமிக்கலோர்(Amichlor),அமிக்கான்(Amicon),அமிரைஸ்(Amirise),அமிட்(Amit),அமிட்டோன் (Amitone) இப்படி பல பெயர்களில் இந்த மருந்து கிடைக்கிறது 
சுருக்கமாக இதன் குணம் மத்திய நரம்புமண்டலத்தில் நார் அட்ரீனலின் என்ற ஹார்மோனை  அதிகப்படுத்தி நரம்பு மண்டலத்தை தூண்டிவிட்டு மன உற்சாகத்தை ஏற்படுத்தும்.
இதன் பக்கவிளைவுகள் ஏராளம் 
இதனை ஒத்த மருந்துகளை பொதுவாக திரிசைக்ளிக் மனச் சோர்வு  மருந்துகள் (Tricyclic Antidepressants) என்பர்.அவைஅமக்சாப்பின்(Amoxapine),டெசிபிராமின்(Desipramine),டாக்ஸாப்பின் (Doxepin),இமிப்பிராமின் (Imipramine),என இன்னும் பல மருந்துகள் இந்த வகையில் இருக்கின்றன 
நாம் இங்கு காணப்போவது இந்த வகை மருந்துகள் குறிப்பாக அமிட்ரிப்ட்டலின் நம் இதயத்தில் எந்த வகை தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை இசிஜியில் எப்படி அடையாளம் காண்பது என்பதே.

படம் 1
மேலே படம் ஒன்றில் ஒரு நார்மல் சைனஸ் ரிதம் (நார்மல் இதயத்துடிப்பு)
காட்டப்பட்டு உள்ளது.அதில் P,Q,R,S,மற்றும் T -அலைகள் தெளிவாக உள்ளன.
படம் 2
மேலே படம் 2-ல் அமிட்ரிப்ட்டலின் அதிகப்படியாக எடுத்துக்கொண்ட ஒருவரின் இசிஜி காட்டப்பட்டுள்ளது.படம் 1-உடன் படம் 2-ஐ ஒப்பிட்டுப்பார்த்தால் இசிஜி அலைகள் படம் 2-இல் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை கீழ் கண்டவாறு உணரலாம்.
1.Q-T-இடைவெளி நீண்டு இருத்தல் 
2.T-அலை உயர்ந்து இருப்பதால் S-T-பாகம் உயர்ந்து இருத்தல் .
3.QRS-கூட்டமைப்பு அகண்டு இருத்தல் 
P -அலை QRS-குள் மறைந்து இருக்கிறது.
இந்த விவரங்களிலிருந்து கீழ்கண்ட பாதிப்புகளை மேலே எண்களிட்டு குறிப்பிட்டதற்கு ஒப்ப கணிக்கலாம் 

1.இதயத்தின் கீழறைகள் சுருங்கி விரிவதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வது  
2.இதயத்தின் கீழறைகள் சரியாக விரியவில்லை 
3.இதயத்தின் கீழறைகள் சரியாக சுருங்கவில்லை மற்றும் மேலறைகளும் கீழறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இயங்குகின்றன.
இதற்கு ஒழுங்கற்ற துடிப்பு என்பர்.மருத்துவ மொழியில் 'Arrhythmia' என்பர்.இதை சரியாக கவனிக்கவில்லை என்றால் ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் 

டாக்ஸாப்பின் (DOXEPIN)

படம் 3
மேலே படம் 3-ல் டாக்ஸாப்பின் என்ற மற்றொரு மனஉளைச்சல் நிவாரணி இதயத்தின் மீது உண்டாக்கும் தாக்குதல் ஆகும்.இது மருந்து கடைகளில் Sinequan மற்றும் Adapin என்ற வர்த்தக பெயர்களில் கிடைக்கிறது.       
மேலே படம் 3 இல் 
1.S-T-உயர்ந்திருக்கிறது 

2.QRS-அகண்டு இருக்கிறது 

3.P-ஐ காணவில்லை 

எனவே இதிலும் ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள் Arrhythmia மேலே அமிட்ரிப்ட்டிலின் ஏற்படுத்தும்  பாதிப்புகளுடன் ஒத்து இருக்கிறது.                      

                                                      




வெள்ளி, 11 அக்டோபர், 2019

இசிஜியில் அன்ஜைனா(மார்வலி)வை கண்டறிவது

இசிஜியில் மார்வலி (ANGINA PECTORIS)
மார்வலி அல்லது அன்ஜைனா பெக்டோரிஸ் (Angina Pectoris) என்பது ஒரு நோய் அல்ல.ஆனால் ஒரு கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்.
(சொல்லியல் (Terminology )-Angina -வலி ;Pectoris -மார்பு )
படம் 1A 

NORMAL RHYTHM
படம் 1B 
பொதுவாக நம் இதயம் இரத்தத்தை உள்வாங்கி சுத்தீகரித்து உடலின் பல பாகங்களிலுள்ள திசுக்களுக்கும்  தமனிகள் (Arteries) மூலம்  அனுப்புகிறது.அதே போல தன்னுடைய திசுக்களுக்கும் கொரோனரி தமனிகள் (Coronary Arteries)
என்ற விசேஷ ரத்த குழாய்கள் மூலம்  அனுப்புகிறது.
இதன் மூலம் இதயத்தின் எல்லா பகுதிகளும் பிராணவாயு போஷாக்கு (OXYGEN ) பெறுகின்றன.இதயம் நலமுடன் இயங்குகிறது 
ஆனால் இரத்த கட்டிகள்,கொலஸ்ட்ரால் கட்டிகள்,காற்று குமிழ்கள் அல்லது ரத்தக்குழாய்களின் உள்பகுதியில் புண் அல்லது வீக்கம் (Atherosclerosis) இவற்றின் மூலம் கொரோனரி தமனி வலை பின்னலின் (Coronary Artery Network)ஏதோ ஒருபகுதியில் இரத்த ஓட்டம் தடைபட்டால் இதயத்தின் அந்த பகுதியில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் அந்த பகுதியில் உள்ள சதை கறுக்க தொடங்கும்.இதற்கு இஸ்கீமியா அல்லது புரையோடுதல் (Ischemia) என்பர் ஆரம்ப கட்டத்தில் இது மிதமாகவே இருக்கும் இந்த கட்டத்தில் இதற்கு நிலையான (Stable Angina)அல்லது மிதமான அன்ஜைனா என்பர்.இந்நிலையில் பளு தூக்கும் போது,உடற்பயிற்சியின் போது,அல்லது அலுவலக வேலை,வீட்டு வேலை இவற்றில் ஈடுபடும்போது நெஞ்சில் இறுக்கம் அல்லது வலி இருக்கும்.ஆனால் ஓய்வு எடுத்துக்கொண்டால் அந்த வலி போய்  விடும். மீன்டும் வேலைகளில் ஈடுபடும்போது அதே அளவு வலி மீண்டும் வரும்.
இதை கவனிக்காமல் விட்டால் இந்த நிலை முற்றி நிலையற்ற அன்ஜைனாவாக (Unstable Angina)வாக மாறும்.இதுவே இறுதியில் மாரடைப்பாக (Myocardial Infarction -M.I.)ஆக மாறும்.
எனவே ஆஞ்சைனா பெக்ட்டோரிஸ் என்பது வரவிருக்கும் மாரடைப்பின் அறிகுறியாகும்.  மேலே படம் -2 இல் நார்மல் இதயத்துடிப்பை மாதிரி வரைபடமாக காட்டப்பட்டுள்ளது அதேபோல் படம் 1இல் அன்ஜைனாவின்போது போது இந்த நார்மல் ரிதம் இசிஜியில் எப்படி மாறுகிறது என்று காட்டப்பட்டுள்ளது.
அதாவது இசிஜியின் ST-பகுதி மிக முக்கியமானது.இதில்தான் இதயத்தின் கீழறைகள் (Ventricles)சுருங்கிய நிலையில் விரிவடைய எடுத்துக்கொள்ளும் நேரம் விரிவடையும் விசையின் அளவு ஆகியவை அடங்கி இருக்கிறது.இசிஜியில் இதில் ஏற்படும் மாற்றங்கள் நிச்சயம் இதயத்தில் கோளாறு இருக்கிறது என்பதை அறிவிக்கும்.
ST -பகுதி உயர்ந்திருந்தால் மாரடைப்பு உடனே வரப்போகிறது என்று அர்த்தம் அது தாழ்ந்திருந்தால் அன்ஜைனாவிற்கு பிறகு அது வரப்போகிறது என்று அர்த்தம்.
இனி மாதிரி இசிஜிகளில் அன்ஜைனாவை எப்படி அடையாளமிடுவது என்று காணலாம்.

படம் 2A
<
Stable Angina 
படம் 2B



மேலேயுள்ள இரண்டு படங்களிலும் நிலையான அல்லது மிதமான அன்ஜைனாவின் போது எடுக்கப்பட்ட இசிஜி கட்டப்பட்டு உள்ளன.படம் 2B யில் ஒரு நோயாளியின் இசிஜி மாதிரி கட்டப்பட்டுள்ளது .இதில் மின் முனை II -ன் பதிவில் மற்றும் மின்முனைகள் V2 மற்றும் V3 ஆகியவற்றின் பதிவுகளிலும் ST -பகுதி தாழ்ந்திருப்பதை காணலாம்.


                                            படம் 3
மேலே படம் 3 இல் ஒரு நோயாளியின் நிலையற்ற அன்ஜைனா வின் போது எடுக்கப்பட்ட  இசிஜி காட்ட ப்பட்டுள்ளது .இதிலும் மின்முனைகள் II மற்றும் V3 ஆகியவற்றின் பதிவுகளில் ST -பாகம் உயர்ந்திருப்பதை காணமுடிகிறது.
எனவே அன்ஜைனா அது நிலையானதோ அல்லது நிலையற்றதோ இரண்டிலுமே ST பாகம் உயர்ந்து இருக்கும் என்பது தெளிவு.
இசிஜியில் மின்முனைகள் II ,V3,V4,மற்றும் V6 ஆகியவை இதை தெளிவாக காட்டும் ஏனென்றால் இவை இதயத்தை சரியான கோணத்திலிருந்து பார்க்கின்றன 
இதயத்தின் பெரும்பாலான கோளாறுகள் இதயத்தின் இடது கீழ் கோணத்திலிருந்துதான்  உண்டாகின்றன.

புதன், 9 அக்டோபர், 2019

மாரடைப்பை இசிஜியில் கண்டறியும் பயிற்சி -1

இசிஜியில் மாரடைப்பு -1

இதயத்தில் ஏற்படும் எந்த கோளாறும் பொதுவாக மாரடைப்பில் கொண்டு போய் விடலாம்.மாரடைப்பு வரப்போவதை முன்கூட்டியே இசிஜியின் மூலம் அறிந்து கொள்ளவும் முடியும்.சாதாரண நிலையில் ஒருமனிதனின் இதயத்துடிப்பு கீழ்கண்டவாறு இருக்கும் (படம்-1)
படம்-1
மேலே படம்-1 கண்டபடி P,Q,R,S, மற்றும் T அலைகள் தெளிவாக இருக்கின்றன.இது இதயத்தின் நார்மல் ரிதம் ஆகும் 

பொதுவாக மாரடைப்பு வரப்போவது என்பது இதயத்தின் கீழ் அறைகளில் ஏற்படும் நோய் நிலைகளே காரணமாகும் 



படம் 2

மேலே படம் 2  மாரடைப்பின் போது இசிஜி யில் ஏற்படும் மாற்றம் என்ன என்று ஒரு மாதிரிக்காக காட்டப்பட்டுள்ளது.இது கைகளினால் மாதிரிக்காக வரைந்த படம்.இதில் மாரடைப்பின் போது ST -பகுதி X -axis ஐ விட்டு மேலே உயர்ந்திருப்பதை காணலாம்.இதுதான் பெரும்பாலும் மாரடைப்பின் போதோ அல்லது  அதற்கு முன்போ இசிஜியின் பொது அமைப்பு.இதை வைத்துதான் நாம்  ஒருவரின் இசிஜியை ஆராய வேண்டும்.
படம் 3A 
படம் 3B 

மேலே படம் -3A மற்றும் 3B ஆகிய இரு படங்களிலும்  காட்டியுள்ளது கீழ் முனை மாரடைப்பு (Posterior Myocardial Infarction) ஆகும்.இது இதயத்தின் கீழ்  அறைகளின் கீழ் நடுப்பகுதியில்(Inter Ventricular Septum -IVR) உண்டாகும் மின் அடைப்புகளால் உண்டாவது.இதை இசிஜியில்  இதயத்தை இடது கீழிருந்து நோக்கும் மின் முனைகள் Lead-II,III,aVF ,V4 ஆகியவற்றின் பதிவுகளில் தெளிவாக அறியலாம் அதாவது பொதுவாக ST பகுதி படுகோட்டை(X-axis) விட்டு உயர்ந்து இருக்கும். (பார்க்க படம் 2).இதே போல் மேல் நிலை மாரடைப்பை இசிஜியின் மின்முனைகளான I,V1,V2 மற்றும் aVF -ன் பதிவுகளில் காணப்படும் உயர்ந்த ST பகுதியை வைத்து கணிக்கலாம்.காரணம் அந்த மின் முனைகள் இதயத்தை மேலிருந்து நோக்குகின்றன.
படம் 4
மேலே படம் -4 காட்டியுள்ளது வலது பக்க HIS-கொத்து கிளை மின் அடைப்பினால் உண்டாகும் மாரடைப்பு.இதை மருத்துவ மொழியில் MI DUE TO RBBB என்பர்.நம் இதயத்தில் கீழ் அறைகளின் இரு பக்க வாட்டிலும் HIS கொத்தின் கிளைகள் வலது இடது என்று இரு பக்கமும் கிளை விட்டு படர்ந்து இருக்கும்.HIS-கொத்து மேலே AV-முடிச்சிலிருந்து மின் அலைகளை வாங்கி தன் இருக்க கிளைக்கும் படர விடும்.இப்போது சில காரணங்களுக்காக வலது புறம் மின் அலை பரவாமல் தடுக்கப்பட்டால் வலது புற கீழறை சுருங்கி விரிவதில் தாமதம் ஏற்படும் இதனால் இசிஜி யில் மாற்றம் ஏற்படும் அதுதான் படம் 4-ல் காட்டப்பட்டு உள்ளது.
மின் முனைகள்  II,V1,V2 மற்றும் V3 ஆகிய பதிவுகளில் ST -பகுதி உயர்ந்து இருப்பதை சிவப்பு வட்டமிட்டு அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.
இதே போல் இடது HIS-கிளையிலும் மின் அடைப்பு  ஏற்படலாம்.இது மருத்துவமொழியில் MI Due to LBBB என்பர்.இதை இசிஜியில் இடது கோணத்திலிருந்து இதயத்தை நோக்கும் மின்முனைகளான II ,aVL,V4,V5,V6 ஆகிய பதிவுகளில் ST -பகுதி உயர்ந்திருப்பதை வைத்து கணிக்கலாம். இரண்டுமே ஆரம்பகட்டத்தில் அறிகுறிகள் காட்டாது.ஆனால் இதயத்தில் வயது முதிர்வினாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகள் உண்டாகும் போது இந்த மின் அடைப்புகள் மாரடைப்பு போன்ற தீவிர விளைவுகளை உண்டாக்கும்.

பொதுவாக மாரடைப்பில்  இசிஜியின்  தோற்றம் :-

விளம்பரம் 
POPPEY M3 SMART BAND FITNESS TRACKER WATCH. Price : INR.425/=(offer )
.போன் வசதி உண்டு.
.பிரத்தியோக App (Veryfit2.0 from Playstore) மூலம் ஆண்டிராய்டு போன்களுக்கு SMS அனுப்பலாம்
.இதில் பொருந்தியுள்ள water proof பட்டியில் ப்ளூ டூத்,B.P.sensor,activity recorder,sleep monitor,calorie burn indicator,ஆகிய வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.
.இதில் உங்கள் இதயத்துடிப்பை அளவீடு செய்யலாம் 
.உங்கள் இயக்க ங்களை கணிப்பீடு செய்யலாம் (Activity Tracker)
.நடை அளவீடு (Steps Counter)
.இரத்தக்கொதிப்பு அளவீடு (B.P.Measurements)
.LED தொடுதிரை 
படம் 5
 


 மேலேயுள்ள படம் 5 இல் பொதுவாக மாரடைப்பின் இசிஜி அடையாளம் காட்டப்பட்டுள்ளது .காரணங்கள் வித்தியாசமாக இருந்தாலும் இசிஜியில் Lead -II பதிவில்  ST -பாகம் உயர்ந்திருந்தாலே அதை மாராடைப்பின் அறிகுறி என்றே கொள்ளவேண்டும்  (பார்க்க படம்-2) 
 விளம்பரம்  (ULTRACET PLASTIC PORTABLE BLENDER CUP)
Price:(OFFER):INR.506/=
Original Price:INR.999/=X
You Save    INR.493/=(49%)
USB வசதியுடன் வந்துள்ள புதிய மாடல் கையடக்க கப் பிளண்டர் 

இதை   ஆபீசில் வீட்டில் எந்த இடத்திலும் நேரத்திலும் பயன்படுத்திக்கொள்ளலாம் 
கையடக்கமானது.
உங்கள் கைப்பையில் கச்சிதமாக பொருந்திக்கொள்ளும் 

                                        தொடரும் .....

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...